புதுக்கோட்டை கவிஞர் பீர்முகமது அவர்களை நான் இலக்கியவாத நல்லிணக்கம் கொண்டவர் என்பேன். ஓர் இலக்கிய அமைப்பில் அவர் பொறுப்பாளராக இருந்தாலும் புதுக்கோட்டையில் நடைபெறும் அனைத்து இலக்கிய அமைப்பு நிகழ்வுகளிலும் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் மற்றும் ஈர்ப்புப் புலத்தால் கலந்துகொள்கிறவர். இலக்கிய விழா அழைப்பிதழ்களில் தன் பெயரைத் தேடும் ஆளுமைகளுக்கு மத்தியில் விழா நடைபெறும் இடம், தேதி, நேரம் என்னவென்று தேடுகிறவர். மூன்று நான்கு இதழ்களோடு வெளிவந்து நின்றுபோய்விட்ட மணிப்புறா எனும் மாத இதழின் துணை ஆசிரியராக இருந்தவர்.
இவரது சமீப அடையாளம் தொல்குடிப் பொருட்களைச் சேகரித்து அதன் பெருமைகளைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்க்கும் தொல்லியல் ஆர்வலர். இவர் பல நூறு பண்டைய பொருட்களைச் சேகரித்து அவ்வபோது காட்சிப்படுத்திவருகிறார். இவரது தொல்லியல் ஆர்வத்தை அங்கீகரிக்கும் பொருட்டு 3.4.2024 நாளிட்ட ஆனந்த விகடன் இதழ் இவர் குறித்து எழுதியுள்ள பத்தி.
" புதுக்கோட்டையைச் சேர்ந்த பீர் முகமது, ஒரு தொல்லியல் ஆர்வலர். பழைமையான மண்பாண்டங்கள், பித்தளை மற்றும் மரப்பொருள்களை ஆயிரக்கணக்கில் சேகரித்து, அவற்றை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி வருகிறார். இதற்காக இவர், பழங்காலத்து அரிவாள்கள், அரிவாள்மணை, கத்தி வகைகள், ஆரம்பக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட டி.வி, ரேடியோ, செல்போன், கடிகாரங்கள், லாந்தர் விளக்கு, கேமராக்கள், இரும்புக் கருவிகள் என்று பல பொருள்களை சேகரித்திருக்கிறார். இவற்றைப் பார்க்க வரும் மாணவர்களிடம், 'நம் முன்னோர்கள் உடலுக்குத் தீங்கிழைக்காத மண்பாண்டம், உலோகப் பொருள்களையே பயன்படுத்திவந்தனர். நாம் அவற்றைப் புறக்கணித்து, பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் பலவித நோய்களை எதிர்கொள்கிறோம். அதனால், நமது முன்னோர்கள் வழியைப் பின்பற்றுவோம்' என்று அறிவுரை வழங்குகிறார். பழைமையின் பெருமை!


வாழ்த்துகள் தம்பி
பதிலளிநீக்குநிறைய தேடுங்க..