புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று சித்தன்னவாசல். தொன்மையும் பழமையும் புதுமையும் கல்வெட்டுகளாக, ஓவியமாக, சிற்பமாக நிரம்பப் பெற்ற இடம். சித்தன்னவாசலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன். இப்பொழுது இருக்கின்ற ஒழுங்குமுறை, முள்வேலித் தடை, நுழைவுக் கட்டணங்கள் அப்போது இல்லை. சமணப் படுக்கையில் ஏறுவதற்குத் தயக்கம் என்பதைத் தவிர வேறெந்த தடையும் இருந்ததில்லை. குன்றில் ஏறி ஐந்து நிமிடங்கள் நண்பர்களோடு படுத்திருந்திருக்கிறேன். முட்புதர், குடைவு, குறுகிய வழி வழியே மலையில் ஏறுகையில் இப்போது நான் ஏறிக்கொண்டிருப்பது ஏழடிப்பாட்டம் என்றோ, குடைவான மலைக்குள் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு படுக்கையின் பெயர் அதிட்டானம் என்றோ, இதில் பதினேழு படுக்கைகள் இருக்கின்றன, அவற்றில் ஆறு படுக்கைகளில் பத்து சமணர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்றோ தெரிந்துகொள்ள ஆர்வமிருந்ததில்லை. அதேநேரம் இம்மலையைச் சுற்றிலும் இருக்கின்ற தற்கால மற்றும் நாட்டார் வழிபாட்டு அடையாளங்களுடன் ஓரளவு நான் பரிச்சயமாகியிருந்தேன். சித்தன்னவாசல் என்றால் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியம்தான். அடுத்து சமணர்களின் படுக்கை. சித்...
அண்டனூர் சுரா