இன்றைய புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டங்கள் சந்தித்துக்கொள்ளும் பகுதி ஒரு காலத்தில் முல்லை நிலமாக இருந்திருக்கிறது. முல்லை என்பது காடுகள். சோழர்களின் ஆட்சிக் காலத்திற்கும் முன்பு இப்பகுதிகள் கானாடு, கோனாடு என அழைக்கப்பட்டன. புறநானூறு 150 ஆவது பாடல் குறிப்பிடும் “ காட்டு நாட்டோம் ” என்கிற வரியும் நற்றிணை 59 ஆவது பாடல் குறிப்பிடும் “வன்புலக் காட்டு நாட்டதுவே” என்கிற வரியும் இன்றைய புதுக்கோட்டை பகுதியைக் குறிப்பிடும் வரிகளென ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காட்டு நாடு என்பதே கானாடு. இந்நிலம் பெரும் உட்பிரிவுக் கொண்டு கோனாடு ஆனது. பிறகு கானாடு என்பதன் எல்லை சுருங்கி கோனாடு பெரும் பரப்பானது. கோனாடு வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சோழவளநாடு, ஜெயசிங்ககுலவளநாடு, பாண்டிக்குலாசனி வளநாடு,…இப்படியாக. கானாடு பனங்காட்டு நாடு, செங்காட்டு நாடு ஆகின. இன்றைய புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை பகுதிகள் கோனாடு பரப்பிற்குள் அடைபடுவதற்கும் முன்பு கானாடாக இருந்தவை என்பதை இன்றைய ஊர்ப்பெயர்களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லை ஊர்களாக புனல்குளம், முதுகுளம், காடவராயன்பட்டி, மஞ்சப்பேட்...
அண்டனூர் சுரா