உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு
உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில்
எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை
கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில் டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான்.
இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது.
வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள்
சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று
பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது.
முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது.
கி.மு 3 ஆம் நூற்றாண்டில் விவசாயம், கடினத்
தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து பெர்சியன் பேரரசு, சீனா, எகிப்திய
பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது.
ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு
ஐந்தாம் நூற்றாண்டில் மக்கட்தொகை கணக்கிற்கென்று தனி பதிவேட்டை பராமரித்தான். அந்தப் பதிவேடு அதற்கு பிந்தைய போர் விளைவுகளால்
அப்பேரரசு பல நாடுகளாக உடைய அந்தக் கணக்கெடுப்பு மதிப்பிழந்தது.
இந்தியாவில் கி.மு நான்காம் நூற்றாண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதாக கௌடிலியரின் அர்த்த சாஸ்திரம் நூல் கூறுகிறது. ஐரோப்பியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பைத் தொடங்கினார்கள்.முதல் கணக்கெடுப்பைத் தொடங்கிய நாடு பிரான்ஸ். இந்நாடு 1700 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா -1723, ஜெர்மனி - 1742, ஸ்வீடன் - 1748, டென்மார்க்
- 1769, ஸ்பெயின் – 1787 ஆகிய நாடுகள் இத்தகைய
ஆண்டுகளில் கணக்கெடுத்தன.
கிரேட் பிரிட்டன் என அழைக்கப்பட்ட பிரிட்டன் 1753 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிற்கான திட்டமிடலில் இறங்கினாலும் 1801 ஆம் ஆண்டு முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பைத் தொடங்கியது. இதிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மக்கட்தொகையைக் கணக்கெடுத்தது. இந்தியாவில் முறையான முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இதற்கும் முன்பாகவே புதுக்கோட்டை சமஸ்தானம் மக்கட்தொகை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியது என்கிற செய்தியைத் தருகிறார் ராவ் சாகிப் எஸ். தண்டபாணி ஐயர் பி.ஏ அவர்கள்.
தமிழகத்தின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு
புதுக்கோட்டை சமஸ்தானம் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பை
1826 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பிற்குப்
பெரும் பஞ்சமும் வறட்சியும் காரணமாக இருந்தது. 1825 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் ஏற்பட்ட
பெரும் வறட்சி மற்றும் பயங்கரமான சூறாவளி காற்றினால் அந்த சமஸ்தானம் பெரும் வறுமைக்கும்
பஞ்சத்திற்கும் உள்ளானது. இதனால் பல்லாயிரம் மக்கள் இறக்க நேரிட்டார்கள். பலர் புதுக்கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து வேறு
பிரதேசத்தில் அடைக்கலமானார்கள். இதனைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டையை மறுசீரமைப்பு
செய்யும் பொருட்டு இந்த மக்கட்தொகை கணக்கெடுக்கப்பட்டது.
இது பிரிட்டிஷ் இந்தியா பத்தாண்டுகளுக்கு ஒரு முறையெடுக்கும்
முறையான கணக்கெடுப்புக்கு முந்தைய கணக்கெடுப்பாகும். அதாவது பிரிட்டிஷ் இந்தியா
1872 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பு பணிக்காக கொள்கை வகுத்து, 1881 ஆம் ஆண்டு முதல்
முறையாக பணியைத் தொடங்கியது.
புதுக்கோட்டை சமஸ்தானமும் 1881, 1891. 1901, 1911, 1921, 1931, 1941 ஆம் ஆண்டுகளில் மக்கட்தொகை கணக்கெடுத்தது. இதில் 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமான கணக்கெடுப்பாகும். இதன்பிறகு 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றாலும் இது முந்தைய கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டதே! 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு புதுக்கோட்டையில் மட்டுமல்ல தமிழகத்தில் எடுக்கப்பட்ட கடைசி சாதிவாரியான கணக்கெடுப்பாகும்.
ராவ்சாகிப், எஸ். தண்டபாணி ஐயர்
இவர், புதுக்கோட்டை மக்கட்தொகை கணக்கெடுப்பு செயலாக்கத்தின்
கண்காணிப்பாளர். 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகையைச் சாதி வாரியான கணக்கெடுத்து சமர்பித்தவர்.
இந்த ஆவண நூல் CENSUS OF INDIA, 1931. PUDUKKOTTAI STATE REPORT BY RAO SAHIB S. DANDAPANI AYYAR B.A – Superintendent of Census Operations எனும் பெயரில் வெளியானது. இந்நூல்
1933 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரஹதம்பா ஸ்டேட் பிரஸ் மூலமாக வெளிவந்தது.
புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் எடுக்கப்பட்ட கடைசி விரிவான மக்கட்தொகைக் கணக்கெடுப்பு இது. புதுக்கோட்டையின் மக்கட்தொகை, கிராமங்கள், நகரங்கள், பிறப்பு விகிதங்கள், வயது, பாலினம், தொழில், கல்வித்தகுதி , தாய்மொழி, மதம், சாதிகள் ஆகிய அட்டவணை வகையில் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பு
புதுக்கோட்டையின் மொத்த மக்கட்தொகை, கிராமங்கள், நகரங்கள், பிறப்பு விகிதம், ஆண் பெண் வயது அடிப்படையிலான எண்ணிக்கை, கட்டிடங்கள், கல்விக் கற்றோர், தாய்மொழி, மதம், சாதி என பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் அவ்வளவாக பேசப்படாமலிருந்த நிலையில் இந்தக் கணக்கெடுப்பு மூலமாக அவர்களின் எண்ணிக்கையும் செறிவான வாழ்விடங்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் வெளியே தெரியவந்தன. இந்தக் கணக்கெடுப்பு 1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கண்கெடுப்பிற்காக மெட்ராஸ் மாகாணம் தயாரித்த அட்டவணை மற்றும் கேள்வித் தொகுப்புகளின் கீழ் கணக்கெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை சமஸ்தான விபரம்
புதுக்கோட்டை சமஸ்தானம் திருமயம், ஆலங்குடி, குளத்தூர் என மூன்று தாலுகாக்களைக் கொண்டிருந்தன. புதுக்கோட்டை நகராட்சி ஆலங்குடி தாலுக்காவிற்குள் உள்ளடங்கியதாக இருந்தது. அப்பொழுது சமஸ்தானத்தின் மொத்த பரப்பு 1179 சதுர மைல்கள். அதாவது மெட்ராஸ் மாகாணத்தின் நிலப்பரப்பில் 24 விழுக்காடு கொண்டதாக இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் ஏழு தாலுகாக்கள் அதிக மக்கட்தொகையை கொண்டிருந்தன. அதாவது மதுரை மாவட்டத்தில் ஏழு தாலுக்காக்கள் மலபார் மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்கள் அதிக மக்கட்தொகை கொண்ட தாலுகாக்களாக இருந்தன. இதற்கு அடுத்ததாக அதிக மக்கட்தொகை கொண்ட தாலுகாவாக புதுக்கோட்டை சமஸ்தானத்திட்குட்பட்ட குளத்தூர் தாலுகா இருந்தது.
குளத்தூர் பரப்பளவில்
பெரிய தாலுகாவும் அதிக கிராமங்கள் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் விவசாயத்திற்கு உகந்த
நிலமற்ற பகுதி இது. மேலும் பெரியளவு விவசாயமோ, நீர்பாசனமற்று வறட்சியான பகுதியாக இருந்தது.
அதேநேரம் இந்தத் தாலுகாவில் தொழில் முனைவோர் அதிகமாக வசித்தார்கள். இந்த தாலுகாவிற்குட்பட்ட
விராலிமலை மற்றும் நீர்ப்பழனி வருவாய் கிராமங்கள் பரந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சிறிய தாலுகாவாக ஆலங்குடியும் அதில் சிறிய கோட்டமாக கரம்பக்குடியும்
இருந்தன.
வீடு என்பது மேற்கூரையும் ஒரு கதவும் கொண்ட தனியே
ஒரு குடும்பம் வாழும்படியான அமைப்பு என வரையறுக்கப்பட்டது. இப்படியாகக் கொண்டு எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பில் நரிக்குறவர்கள் கதவற்ற வீடுகளிலும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பெரிய
அரண்மனைகள் கொண்ட வீடுகளிலும் மேலும் திராவிட கலாச்சார கட்டிடக் கலைக் கொண்டு கட்டப்பட்ட
வீடுகள், மேற்கத்திய வடிவிலான வீடுகள் என பல வகை வீடுகள் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கின.
புதுக்கோட்டை நகரத்தில் 6132 வீடுகள் இருந்துள்ளன.
ஆலங்குடி தாலுகாவில் 136 கிராமங்களில் 23665 வீடுகள், திருமயம் தாலுகாவில்
148 கிராமங்களில் 22251 வீடுகள், குளத்தூர்
தாலுகாவில் 150 கிராமங்களில் 21660 வீடுகள் இருந்துள்ளன. திருமயம் தாலுகாவிற்குட்பட்ட
பொன்னமராவதி மற்றும் வார்பட்டு வருவாய் கிராமங்களில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்துள்ளார்கள்.
அதாவது ஒரு சதுர மைலுக்கு 498 பேர் என்கிற அளவில் வாழ்ந்திருக்கிறார்கள். திருமயம் தாலுகாவின் இரு முக்கிய நகரமாக ராமச்சந்திரபுரம், அரிமழம்
இருந்துள்ளன. செங்கீரை பகுதி பெருங்காடாக இருந்துள்ளது.
குளத்தூர் தாலுகாவில் ஒரு சதுர மைலுக்கு 407 பேர்,
ஆலங்குடி தாலுகாவில் 393 பேர், குளத்தூர் தாலுகாவில்
247 பேர் என்கிற அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள். இதுவே புதுக்கோட்டை நகரத்தில் ஒரு
சதுர மைலுக்கு 5755 பேர் என்கிற அளவில் வாழ்ந்திருப்பது தெரியவருகிறது. இது அன்றைய
மசூலிப்பட்டினம் நகர மக்கட்தொகை அடர்த்திக்கு நிகரானது. மொத்தத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம்
சராசரியாக ஒரு சதுர மைலுக்கு 1179 பேர் என்கிற அளவில் வாழ்ந்துள்ளார்கள்.
புதுக்கோட்டைக்கு மக்கள் சூட்டிய பெயர்
புதுக்கோட்டை பெரும்பகுதி மானாவாரி என்பதால் மக்கள் ‘காடாரம்பம்’ என்று அழைத்துவந்தார்கள். மேலும் ‘வானம் பார்த்த சீமை’ என்றும் அழைத்தார்கள். காடுகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.
புதுக்கோட்டை நகரத்திற்கும் வெளியே எட்டு முக்கிய
நகரங்களில் ஆறு நகரங்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் செறிவாக வாழ்ந்துள்ளார்கள்.
இதற்கான காரணம் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
முதலில் கிராமங்களில் பரவி வாழ்ந்துள்ளார்கள். 1925 - 29 காலக்கட்டத்தில் பெரும் வறட்சியும்
பஞ்சமும் தலைவிரித்தாட கிராமங்களிலிருந்து வெளியேறி நகரப்பகுதியில் குடியேறினார்கள்.
அப்படியாக குடியேறியதில் பொன்னமராவதி, பிள்ளைமங்கலம், அரிமழம், ராமச்சந்திரபுரம் பகுதிகள் முக்கிய இடங்களாகும்.
புதுக்கோட்டையின் பெரும்பகுதி நகரங்களில் இவர்களே வாழ்ந்துள்ளார்கள். அதாவது நகர மக்கட்தொகையில்
88 விழுக்காட்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.
புதுக்கோட்டை நகரத்தில் யார் அதிகம்?
புதுக்கோட்டை நகரத்தில் பிராமணர்கள் அதிகம் வாழ்ந்துள்ளார்கள்.
அதாவது 65 விழுக்காட்டினர் என்கிற அளவில் இவர்களின் குடியிருப்பு இருந்திருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக நாட்டுக்கோட்டை செட்டியார்களும்,
அடுத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்துள்ளார்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர்,
பறையர், சக்கிலியர்கள் 10 விழுக்காடு அளவில் வாழ்ந்துள்ளார்கள். தெலுங்கு மொழியைத்
தாய் மொழியாகக் கொண்ட ராஜூ மக்கள் அரை விழுக்காடு.
கற்றவர்கள் விழுக்காடு
அன்றைய புள்ளி விபரத்தின் படி கல்விக் கற்றவர்கள்
புதுக்கோட்டை நகரப் பகுதியில் அதிகம். அதாவது மொத்த நகர மக்கட்தொகையில் பாதி பேர்.
அடுத்ததாக ஆலங்குடியில் 44 விழுக்காட்டினர். குறைவான கல்வி விழுக்காடு கொண்ட பகுதியாக
பொன்னமராவதி இருந்துள்ளது. ஆங்கில அறிவு அதிகம் கொண்ட தாலுகாவாக திருமயம். இதனை அடுத்து
ராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை நகரம் இருந்திருக்கிறது.
பெண்கள் அதிகம் கற்ற பகுதியாக புதுக்கோட்டை நகரம்
இருந்தது. மொத்தப் பெண்களில் 12 விழுக்காட்டினர். அடுத்த இடத்தில் ஆலங்குடி 7 விழுக்காட்டினர்.
திருமயம், ராமச்சந்திரபுரம் தலா 6 விழுக்காட்டினர். மிகக் குறைவாக பெண்கள் கல்விக்கற்ற பகுதியாக அரிமழம், பொன்னமராவதி, வார்பட்டு இருந்திருக்கின்றன.
அதாவது மூன்று விழுக்காட்டிற்கும் குறைவு. 1911 ஆம் ஆண்டு முதல் 1931 ஆண்டு வரையிலான
காலக்கட்டத்தில் பிறப்பு விகிதம் அதிகம் கொண்ட ஆண்டாக 1923 ஆம் ஆண்டு திகழ்கிறது. இறப்பு
விகிதம் அதிகம் கொண்ட ஆண்டு 1918.
புதுக்கோட்டையில் சாதிகள்
1931 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி இந்து மக்கள் 400,694 பேர். இவர்களில் ஆண்கள் - 191,134 பேர். பெண்கள் - 209,560 பேர். இவர்களில் சாதி வாரியாக
அகமுடையார் -
11416,
அம்பட்டர் -
5052,
ஆண்டி - 1977,
கம்பாளட்டர்-
22,
புடுபுடுகலர்
-11759,
சக்கிலியர்-
1024,
நாட்டுக்கோட்டை
செட்டியார் -
11891,
இதர செட்டியார்கள்
- 8547,
சைனீஸ் -1,
தேசாரி - 619,
தேவாங்கர்- 12,
தேவர் - 5,
டோமரா- 12,
இடையர் - 25251,
இளமகர்- 634,
ஜங்கம் - 399,
ஜெட்டி - 51,
ஜோகி - 45,
கைகோலன்- 686,
கள்ளர் -
46,743,
கம்மாளர் -
14380,
கண்டிராஜா- 138,
கபு- 4,
கரும்புரட்டார்-
3629,
காட்டு மராத்தி
- 75,
கவண்டர்- 7,
காவரை வடுகர் -
6764,
கொமட்டி - 294,
கொரங்காட்டி- 2,
குறவர் - 1562,
குறும்பர் -
5384,
குயவர் - 4970,
மலையாளி - 5,
மராத்தி- 216,
மறவர் - 5617,
மேளக்காரர்-
3060,
முத்தரையர்-
8001,
நாடார் - 2439,
நட்டமர்- 12408,
நாயக்கர் - 172,
நாயர்- 272,
உச்சார்- 322,
ஒட்டர் - 1172,
பள்ளர் - 24921,
பம்பைக்கார வைனி-
30,
பண்டாரம் -
2891,
பணிக்கார்- 200,
பறையர் - 32822,
பரிவாரம்- 9,
ராஜ்பட்- 48,
ராஜூ - 1644,
ரெட்டி - 152,
சாலெ - 88,
சடனி- 26,
சௌராஷ்டிரர் - 1210,
செனைக்குடையர் -
31,
செனியர் - 11,
சிங்கலீஸ் - 1,
சீக்கியர் - 18,
தியார் - 30,
தொட்டியர்- 265,
உப்பிலியர் -
1452,
ஊராளி - 9378,
வலையர் - 56607,
வெல்லாம்பர்-
8494,
வள்ளுவர் - 256,
வளுவாடி- 6691,
வனுயர்- 1535,
வண்ணார்- 4309,
வன்னியர் - 607,
வெலமா- 4,
வெள்ளாளர் - 16,761
கிறிஸ்தவர்கள் விபரம்
கிறித்தவர்கள் மொத்தம் - 17960 பேர்.
ஆங்கிலோ இண்டியர் - 16,
டேனிஷ் -2,
இங்கில்ஸ்- 2,
இந்திய கிறித்தவர்கள் - 17940. இவர்களில் ரோமன் கத்தோலிக் – 17450
லூதரன் - 351,
ஆங்கில கம்யூனியன் - 136 ,
இதர் - 23
இஸ்லாமியர்கள் விபரம்
லெப்பை - 4969,
மாப்பிள்ளா - 6,
மரைக்காயர் - 7,
மொகல் - 215,
பாதன் - 995,
ராவுத்தர் - 6176,
சையத் - 770,
ஷேக் - 1952,
துருக்கர் – 104 என மொத்தம் 15194 பேர் என்கிறது புள்ளி
விபரம்.
ஒடுக்கப்பட்ட சாதியினரின்
பரவல்
ஒடுக்கப்பட்ட சாதிகளான பள்ளர்கள் புதுக்கோட்டை பிரிவு, செங்கீரை, திருமயம், குடுமியான்மலை விராலிமலை பகுதியில் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
பறையர்கள் கரம்பக்குடியில் மற்ற சாதியினரை
விடவும் எண்ணிக்கையில் முதலிடத்திலும் இதற்கடுத்து ஆலங்குடி, வாராப்பூர்,
வல்லநாடு பகுதிகளில் வாழ்ந்துள்ளார்கள். விராலிமலை பகுதியில் சக்கிலியர்கள் கணிசமாக
வாழ்ந்துள்ளார்கள்.
மற்ற சாதியினரின் பரவல்
வெள்ளாளர்கள் புதுக்கோட்டை நகரத்திற்கு அடுத்ததாக
செங்கிரையிலும் கம்மாளர் செங்கீரை பகுதியிலும் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளார்கள். புதுக்கோட்டையின்
ஆதிவாசிகளாக விளங்கிய குறும்பர்கள் மலைப் பகுதிகளான குடுமியான்மலை, திருமயம் பகுதிகளில் கணிசமாக வாழ்ந்துள்ளார்கள்.
வண்ணார் சமூகத்தவர்கள் மற்ற பகுதியைக் காட்டிலும்
வாராப்பூர் பகுதியில் அதிகம். ஊராளிகள் விராலிமலை பகுதியில் மிக அதிகமாக வாழ்ந்துள்ளார்கள்.
சௌராஷ்டிரர், ராஜூக்கள் புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் மட்டும் அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிராமணர் புதுக்கோட்டை நகரத்திற்கு அடுத்ததாக திருமயம் மற்றும் செங்கீரை பகுதியில்
அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்று மறவர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக
திருமயம் தாலுகா இருந்துள்ளது. குறிப்பாக திருமயத்தில் மறவர்கள் செறிவாக வாழ்ந்துள்ளார்கள்.
நாட்டுக்கோட்டை செட்டியார்களின் செறிவான பகுதி என்பது திருமயம் தாலுகாவிற்குட்பட்ட
பிரிவுகள். இதர செட்டியார்கள் கரம்பக்குடி, ஆலங்குடி, விராலிமலை பகுதியில் அதிகம் இருந்துள்ளனர்.
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒட்டர்கள் புதுக்கோட்டை நகரத்திற்கு அடுத்ததாக பொன்னமராவதி
மற்றும் காரையூரில் அதிகம் வாழ்ந்துள்ளார்கள்.
ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட புதுக்கோட்டை நகரம்,
புதுக்கோட்டை பிரிவு, வாராப்பூர் பிரிவு, கரம்பக்குடி பிரிவு, வல்லநாடு பிரிவு, ஆலங்குடி
பிரிவு என ஆறு பிரிவுகள் உள்ளடங்கிய பகுதியில் வலையர் இன மக்கள் மிக அதிக எண்ணிக்கையில்
வாழ்ந்துள்ளார்கள். இவர்களுக்கு அடுத்ததாக கள்ளர், பறையர், இடையர், நட்டமனார், வலுவாடி,
வெள்ளாளர், பிராமனர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
திருமயம் தாலுகா உள்ளடங்கிய கிழாநிலை பிரிவு, செங்கீரை
பிரிவு, திருமயம் பிரிவு, பொன்னமராவதி பிரிவு, காரையூர் பிரிவு உள்ளடங்கிய பகுதியில் வலையர்,
நாட்டுக்கோட்டைச் செட்டியார், பள்ளர், கள்ளர், பறையர் என்கிற வரிசையில் வாழ்ந்துள்ளார்கள்.
குளத்தூர் தாலுகா உள்ளடங்கிய விராலிமலை பிரிவு, நீர்பழனி
பரிவு, கீரனூர் பிரிவு, குன்றான்டார்கோவில் பிரிவுகளில் கள்ளர்கள் அதிகம். இவர்களைத்
தொடர்ந்து வலையர், பள்ளர், ஊராளி, வல்லம்பனார், பறையர் என்கிற எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளார்கள்.
புதுக்கோட்டையின் ஆதார
சாதிகள்
புதுக்கோட்டையின் ஆதார சாதிகளாக ஐந்து சாதியினரை
இந்தக் கணக்கெடுப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அவை, வலையர், கள்ளர், பறையர், இடையர்,
பள்ளர். இந்த சாதியினர் பரவலாக புதுக்கோட்டை முழுவதும் பரவி வாழ்கிறார்கள் என்கிற செய்தி
1931 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் எடுக்கப்பட்ட சாதிவாரியான புள்ளி விபரங்களிலிருந்து
தெரிய வருகிறது.
திருமயம் தாலுகாவில் ஏன் பள்ளர்கள்
அதிகம்?
பள்ளர் சமூகத்தவர்கள் விவசாயத்துடன் தொடர்பு கொண்டவர்கள்.
குறிப்பாக நெல் சாகுபடிக்குப் பெயர்ப் பெற்றவர்கள். இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்
நடவு நடுதல், களையெடுத்தல், கதிர் அறுத்து களத்தில் சேர்ப்பதில் தொழிற்திறமை கொண்டிருந்தார்கள்.
இவர்கள் பல பிரிவினராக வாழ்ந்துள்ளார்கள். அய்யாப் பள்ளர், அம்மா பள்ளர், அப்பா பள்ளர்,
உழவுப் பள்ளர், கடகப் பள்ளர், காலாடிகள், தேவேந்திரப் பள்ளர் என்று. தந்தையை இவர்கள்
அய்யா என்றும் அப்பா என்றும் அழைக்கிறார்கள். அய்யா
என்று அழைப்பவர்கள் அய்யாப் பள்ளர்கள்
என்றும் அப்பா என்று அழைப்பவர்கள் அப்பாப்
பள்ளர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உழவுத் தொழில் ஈடுபாடு காட்டுகிறவர்கள்
உழவுப் பள்ளர்கள். கடகம் என்றால் கூடை.
விவசாயம் சார்ந்த தொழில்களில் கூடை மிக முக்கியமான ஒரு சாதனமாகும். கூடைகள் முடைந்து
விற்பவர்கள் கடகப் பள்ளர்கள் ஆனார்கள்.
ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர்கள் காலாடிகள் என அழைக்கப்பட்டார்கள்.
புதுக்கோட்டையில் பள்ளர் இனத்தவர்கள் ஏழு இனக்குழுவாக
வாழ்ந்துள்ளார்கள். இந்தக் குழுக்கள் தாம் வாழ்ந்த பகுதியின் பெயரைக் கொண்டு நாட்டினராக
அழைக்கப்பட்டார்கள்.
1. வட சிறுவாசல் நாட்டினர். இவர்கள் கீரனூர் பகுதியை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
2. தென் சிறுவாசல் நாட்டினர். இவர்கள் மதுரை, இராமநாதபுரம் பகுதியை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்
3. குலமங்கிலிய நாட்டினர். இவர்கள் செம்பாட்டூரை மையமாகக் கொண்டு வாழ்பவர்கள்.
4. கவிநாட்டினர். கவிநாடு என்பது திருக்கோகர்ணம் அதற்கும் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள்
5. பரங்கி நாட்டினர். பரங்கி மலை என்பது விராலிமலை. இப்பகுதியில் வாழ்ந்த பள்ளர்கள் பரங்கி
நாட்டினர் என அழைக்கப்பட்டார்கள்.
6. கோனாட்டு பள்ளர்கள். இவர்கள் வெள்ளாற்று கரைக்கும் வடக்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.
அதாவது புதுக்கோட்டை, அதற்கும் வட பகுதியில் வாழ்ந்தவர்கள்.
7. கானாட்டு பள்ளர்கள். இவர்கள் வெள்ளாற்று கரைக்கும் தென்பகுதியில் வாழ்ந்தவர்கள்.
இவர்களைத் தவிர சோழிய பள்ளர்கள் என்றொரு பிரிவினர் உண்டு. இவர்கள் தேவேந்திர பள்ளர்களில் உட்பிரிவினர். இவர்கள் சோழ நாட்டிலிருந்து இப்பகுதியில் குடியேறியவர்கள்.
பள்ளர் இனத்தவர்களின் தலைவர் குடும்பன் என அழைக்கப்பட்டார். ஊரின் தலைவர்
ஊர்க் குடும்பன் என்றும் ஒரு நாட்டின்
இனத் தலைவன் நாட்டுக்குடும்பன் என்றும் ஏழு நாடுகளின் தலைவன் ஏழு நாட்டுக் குடும்பன் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், பூசல்களை இவர்களைக்
கொண்டு தீர்த்துக் கொண்டனர்.
இவர்களில் பெரும்பகுதியினர் இராமநாடு பகுதியிலிருந்து
இங்கே குடியேறியவர்கள் என்கிறார் 1931 ஆண்டின்
சாதிவாரி கணக்கெடுப்பின் கண்காணிப்பாளர் ராவ்சாகிப் தண்டபாணி ஐயர். அன்றைய கணக்கெடுப்பின்படி மூன்று தாலுகாவிலும்
சேர்த்து அவர்களின் மக்கட்தொகை 24,921 பேர். இவர்கள் வலையர், கள்ளர், பறையர், இடையர்களுக்கு
அடுத்ததாக அதிக மக்கட்தொகை கொண்ட சாதியினராக இருந்துள்ளார்கள்.
1931 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஆலங்குடி தாலுகாவில்
4,047 பேர்; திருமயம் தாலுகாவில் 11,115 பேர்; குளத்தூர் தாலுகாவில் 9,759 பேர் என்கிற
அளவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக திருமயம்
தாலுகாவிற்குட்பட்ட காரையூர் பிரிவில் 2794 பேர், செங்கிரை பிரிவில் 2789 பேர், திருமயம் பிரிவில் 2856 பேர், பொன்னமராவதி பிரிவில்
1846 பேர், கீழாநிலைப் பகுதியில் 830 பேர் என்கிற அளவில் வாழ்ந்துள்ளார்கள். இவர்களில்
ஆங்கிலம் மொழி தெரிந்தவர்களாக நான்கு பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். கற்றவர்கள்
447 பேர் என்கிறது இப்புள்ளி விபரம்.
இவர்களில் பலர் விவசாயக்கூலிகளாக இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் நில உடைமை கொண்ட சாகுபடியாளர்களாகவும்
பெரும்பகுதியினர் குத்தகை விவசாயிகளாகவும் இருந்துள்ளார்கள். சிலர் பல தொழில்களின்
தொழிலாளிகளாகவும் குறைந்த எண்ணிக்கையில் கால்நடை மேய்ப்பவர்களாக இருந்துள்ளார்கள்.
பள்ளர் சமூகத்தவர்கள் இடையர், வெள்ளாளர் இன மக்களுடன்
நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இவ்விரு சாதியினர் விவசாயத்துடனும்
கால்நடை வளர்ப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.
விஜய நகர காலத்திய கல்வெட்டு குறிப்பு
விஜய நகர காலத்திய கல்வெட்டு (960) குறிப்பிடும் ஒரு செய்தியை ஆய்வாளர் வே. மாணிக்கம் அவர்கள் ஒரு வரலாற்றுச் செய்தியைக் குறிப்பிடுகிறார். மாவலி வாணதராயன் எனும் குழுவிற்குரிய பள்ளர்கள் அடிமை தொழிலிருந்து விடுபட்டு ஓடிபோய் நெருஞ்சிக்குடியில் தஞ்சம் புகுகிறார்கள். மாவலி வாணதராயன் ஆட்கள் நெருஞ்சிக்குடி ஊரவரின் மாடுகளை அழித்து ஓடிய பள்ளரையும் பிடித்துக்கொண்டு வருகையில் நெருஞ்சிக்குடி ஊரவர் பரம்பையூர் ஊரவரையும் துணைக்கழைத்துக்கொண்டு மாவலி வாணதராயரை எதிர்த்து சண்டையிட்டார்கள், என்கிறது அந்த கல்வெட்டுக் குறிப்பு. இந்தக் குறிப்புகளைக் கொண்டு பார்க்கையில் அன்றைய உழுகுடியான பள்ளர்களின் வாழ்நிலையையும் ஒடுக்குமுறைகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.
விராலிமலையும் சக்கிலியர்களும்
விராலிமலை மிகவும் வறட்சியான பகுதி. ஆற்றுப்பாசனமோ, ஏரி பாசனமோ அதிகமில்லாத பகுதி என்பதால் கிணற்றிலிருந்து
நீர் இறைத்து வேளாண்மை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. குளத்து நீர் மற்றும் கிணற்று
நீரை இறைத்து பாசனம் செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக ஒப்பந்த கூலியாக அழைத்துவரப்பட்டவர்கள்
சக்கிலியர்கள்.
சக்கிலிய இனப் பிரிவினர்
புதுக்கோட்டையில் சக்கிலியர்கள் நான்கு இனக் குழுவாக
வாழ்ந்துள்ளார்கள்.
ரெட்டி சக்கிலியர்கள்,
அனுப சக்கிலியர்கள்,
மோரா சக்கிலியர்கள்,
தோட்டிய சக்கிலியர்கள்
இவர்களில் முதல் மூன்று இனத்தவர்கள் தெலுங்கு மொழியைத்
தாய்மொழியாகக் கொண்டவர்கள். தோட்டிய சக்கிலியர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
1931 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி மூன்று தாலுகாவிலும்
சேர்த்து இவர்களின் மொத்த மக்கட்தொகை 1024 பேர். இவற்றில் ஆலங்குடி தாலுகாவில் 325
பேர், திருமயம் தாலுகாவில் 129 பேர், குளத்தூர்
தாலுகாவில் 570 பேர் என்கிற அளவில் வாழ்ந்திருக்கிறார்கள். இவற்றில் குளத்தூர் தாலுகா
விராலிமலை கோட்டத்தில் மட்டும் அதிகப்பட்சமாக 391 பேர் வாழ்ந்துள்ளார்கள். இவர்களின் வாழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் மற்ற இரு
ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர், பறையர் சமூகத்தினரை விடவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
கரம்பக்குடியில் ஏன் பறையர்கள் அதிகம்
புதுக்கோட்டையில் வலையர்கள், கள்ளர்களுக்கு அடுத்ததாக
பறையர்கள் மூன்றாவது பெரிய சாதியினராக உள்ளனர். இவர்கள் மற்ற சாதியினர் வாழும் பகுதியிலிருந்து
தனியே குடி வைக்கப்பட்டனர். இவர்கள் வாழும் பகுதி பறச்சேரி என்றும் சேரி என்றும் அழைக்கப்பட்டது.
பறையர்கள் ஊரின் எல்லையை வரையறுப்பதில் முக்கிய குடியாக
இருந்தவர்கள். ஊரின் கிழக்குப் பகுதியில் குடி வைக்கப்பட்ட இவர்கள் எல்லையோடிகள் என அழைக்கப்பட்டார்கள். பறையர்
என்றால் பறைதல். அதாவது செய்திகளைக் கடத்துபவர்கள்.
பறையர்கள் குறித்து தர்ஸ்டன்
தென்னிந்தியக்
குலங்களும் குடிகளும் எனும் நூலில் எட்கர் தர்ஸ்டன், பறையர் குறித்து இவ்வாறு
எழுதுகிறார். “பறையர்கள் ‘பவுண்டரி ரன்னர்ஸ்’ என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் செய்தியைக்
கொண்டுப்போய் சேர்ப்பவர்கள். செம்மறி ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட தோல் கருவியைக்
கொண்டு பறைக் கொட்டி செய்தி அறிவிப்பவர்களாக இருந்தவர்கள். ஒரு காலத்தில் நன்கு ஓடக்கூடியவர்கள்
மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் செய்தி அறிவிக்கும் ஊழியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.
இவர்களின் பயணம் முட்புதரும், காடும் கொண்ட பாதைகளற்ற பாதையாக இருந்திருக்கிறது.
பறையர்களில் ஒரு பிரிவினரான வள்ளுவர்கள் மருத்துவம்
மற்றும் ஜோதிடத்தில் அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் தனி கலாச்சாரத்துடன் பண்பாடு கொண்டும்
வாழ்ந்துள்ளார்கள். ஊரில் நடைபெறும் திருமணம் நிகழ்ச்சி, ஊர்த் திருவிழா நிகழ்ச்சிகளை
வழிநடத்துபவர்களாக இருந்துள்ளார்கள். இவர்கள் பிராமணர்கள் போன்று பூணூல் அணிபவராகவும்
அதேநேரம் அவர்களிடமிருந்து வேறுபட்டும் இருந்தார்கள்.
தமிழ்நாட்டினரின் பதினெட்டு சாதிகள்
பள்ளுப் பறை பதினெட்டு சாதியென்று புதுக்கோட்டையில்
ஒரு சொல்லாடல் உண்டு. இதற்கு இரண்டு பொருளுண்டு. பள்ளர்கள் பறையர்கள் இவர்களுடன் பதினெட்டு
சாதியினர் என்று பொருள்கொள்ளலாம். பதினெட்டு சாதிகளில் பள்ளர், பறையர் இல்லாமலும் பொருள்
கொள்ளப்பட்டு இவர்களுடன் சேர்த்து இருபது சாதியினர் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது.
கவியோகி சுத்தானந்த பாரதி புதுக்கோட்டை சமஸ்தான அரசு
பற்றி எழுதியிருக்கும் ஒரு கட்டுரையின் ஓரிடத்தில் பதினெட்டு சாதிகள் குறித்து இவ்வாறு
எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக நலத்திற்காகத் தொண்டு செய்தவர்
பதினெண்மர்:- நாவிதர், குலாலர், ஓலையெழுதும்
ஒச்சர், ஐங்கம்மாளரான கொத்தர், கொல்லர், தச்சர், கன்னார், தட்டார், மூவணிகரான ஒற்றைச்
செக்கர், இரட்டைச் செக்கர், இலை வாணிகர், பூக்காரர், தையற்காரர், காவற்காரர், வலையர்,
இடையர், கட்டியக்காரர்.
இவரது பட்டியலைக் கொண்டு பார்க்கையில் அன்றைக்குப்
புதுக்கோட்டையில் பெரும் சாதியினராக வாழ்ந்த பறையர், பள்ளர் மக்களை ஓர் இனமாக பொருள்கொள்ளவில்லை,
என்று புரிந்துகொள்ள முடிகிறது.
புதுக்கோட்டை ஊர், நாட்டுக் கோவில் திருவிழாக்களில்
பதினெட்டு சாதிகளில் பள்ளர், பறையர்கள் உள்ளடங்கியிருக்கிறார்கள். சில ஊர்களில் சேவை
சாதியினரான பறையர்களுக்கு முதல் மண்டகப்படி வழங்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டையின் மிக உயரமான கோபுரங்கள் கொண்ட திருவரங்குளம்
அரங்குளநாதர் கோவிலில் தேர்த்திருவிழாவின் போது யானை மீதேறி மாலை சூடி தேங்காய் உடைத்து
தேரின் வடம் பிடிப்பதாக திருவரங்குளம் செப்பேடு குறிப்பிடுகிறது. அதாவது,“ யானையேறி மாலைசூடி…தேங்காய் உடைத்து வடந்தொடும்
பறையன்” என்கிறது அந்தச் செப்பேடு.
கந்தர்வகோட்டை வட்டத்தில் சுந்தம்பட்டி எனும் ஊரில்
முதல் மண்டகப்படியாளராக பறையர்கள் திகழ்கிறார்கள். இந்த மரியாதை அங்கு பெரும்பான்மை
சமூகமாக வாழும் வெள்ளாளர் மக்களால் வழங்கப்பட்டிருக்கிறது. இது மரியாதை என்பதைத் தாண்டி
கோயில் குளங்களைச் சுத்தம் செய்து திருவிழாவிற்கு ஏதுவாக ஊரைத் தயார்ப்படுத்த வேண்டும்
என்பதற்கானதாக இருக்கிறது.
பறையர்களின் இனக்குழுக்கள்
புதுக்கோட்டையில் பல இனக்குழுக்களாக பறையர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
சோழிய பறையர்கள்,
ஆயா பறையர்கள்,
அம்மா பறையர்கள்,
பாசிகட்டி பறையர்கள்,
குதிரைக்கார பறையர்கள் இப்படியாக.
சோழிய பறையர்கள் மற்ற பறையர்களை விடவும் உயர்வானவர்களாக
காட்டிக்கொண்டார்கள். இவர்கள் வட மாவட்டத்திலிருந்து இங்கே குடியேறியவர்கள். பார்ப்பனர்களின்
குடியிருப்பிற்குள் நுழைய இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்கள்
தெரியாமல் பறையர் குடியிருப்பிற்குள் நுழைந்துவிட்டால் பறையர் இன பெண்கள் தண்ணீர் குடத்துடன்
பார்ப்பனர்களின் பின்னே சென்று முச்சந்தியில் நீர்க்குடத்தை உடைத்து திரும்பி வர வேண்டும்,
என்கிற தீண்டாமை சடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கட்தொகை
கணக்கெடுப்பில் மூன்றாவது பெரிய சாதியினராக
பறையர்கள் இருந்தார்கள். இவர்களின் அன்றைய மக்கட்தொகை 32,822 பேர். இவர்களில்
ஆலங்குடி தாலுகாவில் 16,558 பேர்; திருமயம் தாலுகாவில் 8,882 பேர், குளத்தூர் தாலுகாவில்
7392 பேர். ஆலங்குடி தாலுகாவில் கரம்பக்குடி கோட்டத்தில் மிக அதிகமாக அதாவது 5,120
பேர் வாழ்ந்துள்ளார்கள். இந்த மக்கட்தொகை அன்றைய வலையர், கள்ளர் இரு சாதிகளின் கூட்டுத்தொகைக்கு நிகரான எண்ணிக்கையாகும்.
கரம்பக்குடி பறையர்களில் பெரும்பகுதியினர் தஞ்சாவூர்
பகுதியிலிருந்து குடியேறியவர்கள். இவர்கள்
கரம்பக்குடியில் அதிகம் குடியேறக் காரணம் தஞ்சாவூர் அரசியல் ஏஜெண்டாக இருந்த வில்லியம் ப்ளாக்பர்ன் கரம்பக்குடியில் சாயப்பட்டறை,
சோப்பு தயாரிக்கும் பட்டறை, உள்ளிட்ட பல பட்டறைத் தொழில்கள் நடத்தினார். இந்தப் பட்டறைகளில்
மன்னர் குடும்பத்தாருக்கு பங்கு இருந்தது. இந்தத் தொழில் பட்டறையில் வேலை செய்ய ஒப்பந்தக்
கூலியினராக அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் இவர்கள்.
இன்று கரம்பக்குடி நகரத்தையொட்டிய வடக்குத்தெருவில்
பறையர் இனமக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். பொதுவாக நகரத்திற்கும் கிழக்குத் திசையில்தான்
பறையர்கள் குடிவைக்கப்படுவார்கள். இதற்கு உதாரணம் புதுக்கோட்டை நகரம். இங்கு பறையர்
மக்கள் நகரத்திற்கும் கிழக்கில் புதுச்சேரி என்கிற பெயரால் குடிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். இந்த
வெளியேற்றம் மன்னர் மார்த்தாண்ட பைரவர் காலத்தில் நடந்தேறியது. இந்த குடி வெளியேற்றம்
குறித்து புதுக்கோட்டை வரலாறு எழுதிய எஸ். இராதாகிருஷ்ண ஐயர் இவ்வாறு எழுதுகிறார்.
பறச்சேரி அகற்றலும் நகர் மேம்பாடும்
புதுக்கோட்டை நகரம் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும்,
தெருக்களும் வீதிகளும் பெருமளவில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தன. நகர வாய்க்கால்கள்
தூர்க்கப்பட்டு சதுப்பு நிலங்களாகியிருந்தது. பொதுப் பாதையில் வாரச்சந்தை நடத்தப்பட்டது.
இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
குறுகிய பாதைகளில் அசுத்தமான
பழக்கவழக்கங்களைக் கொண்ட பறசேரி மக்கள் குடியிருந்தார்கள். அவர்களால் நகர மக்களுக்கு
காலரா மற்றும் பெரியம்மை நோய்கள் பரவி வருடாந்திர பலிகள் அதிகரித்தன. இங்கேயிருந்து
அம்மக்களை வெளியேற்றி நகர் விரிவாக்கம் செய்யப்பட்டது. பிறகு இந்த இடத்தில் வைர விழா
வளைவு எழுப்பப்பட்டது.
மேலும் இந்த இடத்தில்
பல அலுவலகங்களும் தனியார் வாடகைக் கட்டிடங்களும் மூலைகளில் இருந்தன. இட நெருக்கடியால்
அந்த இடம் இருண்டிருந்தது. கல்லூரி கட்டிடம் போதுமான அளவிற்கு இடவசதி இல்லாமலிருந்தது.
மருத்துவமனை கட்டிடங்கள், அறுவைச்சிகிச்சை மையங்களுக்கு இடப்பற்றாக்குறை இருந்து வந்தது.
சிறைச்சாலை மோசமான இடமாகவும் நெருக்கடியிலும் தத்தளித்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி
இடம் விசாலமாக்கப்பட்டது.
இருபத்தைந்து வருடங்களுக்கு
பிறகு புதுக்கோட்டை நகரைப் பார்க்கும் யாருக்கும்
நகரில் நடந்திருக்கும் இந்த மாற்றம் தேவதையின் மந்திரக்கோலால் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
போலத் தோன்றும்.
பறையர்களின் பெயரால் ஊர்த்தெருக்கள்
கரம்பக்குடியில் நகரத்திற்கும் வடப்புறத்தில் பறையர்கள்
குடிவைக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம், அன்றைய கரம்பக்குடியின் பள்ளமான பகுதி என்பது
வடக்கு பகுதியாகவே இருந்தது. கரம்பக்குடி பல தெருக்கள் இந்த மக்களின் பெயர்களைக் கொண்டு
அழைக்கப்படுகின்றன. கண்டியன்தெரு, சேவுகன்தெரு,
கருமாலித்தெரு, சாத்தான்தெரு, என்று. இத்தெருக்கள் பறையர் மக்களின் பெயரால் அழைக்கப்படும்
தெருக்களாகும். மேலும் இப்பகுதியில் அமையப்பெற்றுள்ள பள்ளத்தான்மனை எனும் ஊர் முழுக்க
பறையர்கள் மட்டும் வாழும் ஊராக உள்ளது. பள்ளத்தான்
என்பது பறையர் இன மக்களின் தலைவன்.
கரம்பக்குடியில் நீண்டகாலம் இயங்கி வந்த சாயப்பட்டறை,
சோப்புப் பட்டறைகள் தன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டதன் பிறகு இந்த தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட
பறையர் இன மக்கள் குடிசை அமைத்து வாழ்வதற்கு இட நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக அவர்களில்
பெரும்பகுதியினரை அங்கேயிருந்து அப்புறப்படுத்தி மன்னர் குடும்பத்தாருக்கு நெருங்கிய
உறவுகொண்ட ஊரான கல்லாக்கோட்டைக்கும் அருகில் ஓர் ஊரை உருவாக்கி பெரும்பான்மை பறையர்களுடன்
கள்ளர், வலையர் உள்ளிட்ட பல சாதியினர் உள்ளடங்கி ஊராக குடியேற்றப்பட்டார்கள்.
பந்துவக்கோட்டை ஊர் பெயர்க்காரணம்
பந்த் என்பது வடமொழிச் சொல். இதற்கு சொந்தம் என்று
பொருள். பந்தம் என்பது தமிழ் மொழிச் சொல். அதாவது உறவினர். பந்துவர் என்றால் சொந்தக்காரர்கள்
என்று பொருள். பந்துவர் கோட்டை என்பது பந்துவகோட்டை என்றானது. இங்கு கோட்டை கிடையாது.
கல்லாக்கோட்டைக்கும் அருகில் இந்த ஊர் அமைந்ததால் இந்த ஊர் கோட்டை பெயருடன் அழைக்கப்பட்டது.
கரம்பக்குடி அம்புநாடு என அழைக்கப்பட்டது ஊராகும்.
அம்பு என்பது அன்பில். அதாவது அன்பில்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட நாடு. அழும்பில்
நாடு என்பதே அம்பு நாடு என்றானது. அம்பு நாட்டுக் கள்ளர்கள் பட்டங்களால் அழைக்கப்பட்டார்கள்.
பல்லவராயர், தொண்டைமனார், மணிக்கிராயர், தென்னந்திரையர், குழந்தைராயர், ராங்கியர்...இப்படியாக. கள்ளர்களைப்
போன்று இப்பகுதி பறையர்களும் பட்டங்களால் அழைக்கப்பட்டார்கள். இந்தப் பட்டங்களுக்குள்
பெண் எடுக்க கொடுக்க இருந்தார்கள். இந்தப் பட்டங்கள் அன்றைய காலத்தில் பெரிய கவுரவமாகப்
பார்க்கப்பட்டதுடன் சுயசாதி பெருமை பேசிக்கொள்ளும்படியாகவும் குல உயர்ச்சி தாழ்ச்சி
பார்ப்பதாகவும் இருந்தன.
புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலம் வரைக்கும்
இந்தப் பட்டங்களால் எதிர்வினை ஒன்றும் நிகழ்தேறிடவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதன் பிறகு புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன்
இணைக்கப்பட்டு பிறகு அதிலிருந்து புதுக்கோட்டையைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கையில்
புதுக்கோட்டை மாவட்டத்துடன் கந்தர்வகோட்டை இணைக்கப்பட்டது. கந்தர்வகோட்டை கல்லாக்கோட்டை
இவ்விரு ஊர்களின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதற்கு இந்த பட்டங்கள் பெருந்தடையாக
இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன.
பறையர்களின் பட்டங்கள்
அகத்தோழியார், அங்கன், அச்சுகாரன்,
அச்சுதன், அச்சுத்தறியார், அஞ்சான், அடங்காப்பரயர், அடியான், அண்ணமார், அம்பலப்புலி,
அம்பலம், அம்புநாட்டார், அரசகுடி, அரசுக்குடையார், அரமனார், அருகப்பணிந்தான், அருமறைக்கொடி, அருவாபிடித்தான், அறந்தன், ஆசாரி, ஆணைநடையன்(ஆணையன்), ஆணையர், ஆண்டான், ஆண்டி, ஆதன்,
ஆத்தாபறையன், ஆப்பநாட்டார், ஆவுடைபிடித்தான், ஆவுடைப்பணிந்தான், இச்சவாகு, இந்திரன்,
இருங்களன், இருங்கோலன், இருப்பரயன், இழைக்கட்டி, இழையான், இளமான், ஈசனார், ஈசன், ஈமத்தாடி,
ஈரங்கோலி, உஞ்சையார், உடையான், உலகங்காத்தான்,
உலகன், உவச்சன், ஊமாண்டி, ஊமையன், எட்டிப்பிரியன், ஏகவேணி, ஐயன், ஒட்டன், ஒண்டிப்புலி,
ஒண்டியர், கச்சிரன், கடம்பன், கடையர், கட்டகுப்பன், கட்டவெட்டி, கட்டையன், கணக்கர்,
கணக்கன், கண்டபிள்ளை, கண்டப்புலி, கண்டியர், கண்டியன், கரியர், கரியர், கருக்கன், கருக்கி,
கருங்குண்டி, கருப்பன், கருமாலி, கரும்பரயன்,
கலவடையர், கல்யாணி, கழுவெட்டி, கழுவேத்தியார், களஞ்சியர், களப்பறையன், கள்ளக்கரையன், கணியர்,கணியன், கண்ணான்,கன்னிகைகுறியான்,
கன்னிமான், காடுவெட்டி, காணியான், காத்தவராயன்,
காந்தாரி, காரியாண்டி, காருகன், காலமதி, காலாடி, காலாடிப்பறையன், காலிங்கராயன், காலிங்கன்,
காவாலி, கானன், கானியாள்(கானியான்), கிழவன்,
கிழான், கீழக்குடையான், குச்சிரர், குஞ்சாண்டி, குடியான், குண்டர், குதிரைக்காரன்,
குரும்பன், குறையான், கூத்தரன், கூத்திரார்,
கூலச்சியார், கூலியன், கொங்கன், கொடும்பறையர்,
கொண்டைகட்டி, கொண்டைபுலி, கொல்லன், கோட்டவெரி, கோட்டாச்சியன், கோட்டாளி,
கோதண்டபரயர், கோப்பாளி, கோமட்டி, கோலர், கோலி, கோலிஞான்,
சங்கரன், சடையன், சண்டியர், சம்பன், சம்பு,
சம்புகன், சம்புரான், சவியன், சாக்கியர், சாக்கை,
சாக்கையர், சாஞ்சாடி, சாத்தன், சாம்பமுதலி,
சாம்பாச்சி, சாம்பான், சாலி, சாலியன்,
சாளுவன், சிங்கப்புலி, சித்திரர், சிலுக்கவெட்டி, சிவந்தான், சிவன்(ஈசன்), சின்னநாட்டான்,
சீவிளி, சுக்கிரபரயன், சுக்கிரன், சுண்டன், சுத்தன், சுரத்தான், சூரப்புலி, சூரன்,
சூரியகுலத்தான், சூரியகுலம், சூரியமுதலி, சூரியர், செங்கான், செங்கோலி, செண்டைபிரியர்,
செம்பரையர், செம்பியன், செம்பொன்மாரி, செம்மான், செருமான், செவந்தான், சென்னியர், சேரியர்,
சேர்வை, சேர்வைக்காரன், சேவுகன், சேனாதிபதி,
சேனையன், சொக்கரன், சொக்கன், சொரப்பரையர்,சொலகுவெட்டி, சோழகன், சோழப்பரையர், ஞானவெட்டி, தங்கலான், தட்டார்,
தட்டான், தண்டல்(தண்டன்), தண்டையர், தம்பிரான்,
தலைக்கோலி, தறிக்கட்டுப்பரையன், தறிக்காரன், தறியான், தாதன், தாதன்,தாசன், திருகுதேடி,
திருவெட்டியான், தீர்த்தார், துங்கன், துண்டன்,
துரியன், துருத்தன், தெற்கத்தியான், தென்னன், தேவமுதலி, தேவன், தேவேந்திரன்,
தைலான், தொங்கன்-(துங்கன்), தொந்தியன், தோட்டி, தோட்டிக்கரான், நக்கன், நந்தன்,
நந்திக்கொடியன், நம்பாளி, நயினார், நயினான்,
நரியன், நரிவெட்டி, நல்லான், நாகர், நாச்சாரன், நாச்சியார், நாட்கமையன், நாட்டான், நெக்கத்தி,
நெசவுக்காரன், நெடுமான், நெடும்பிரியர்,
நெப்பன், நெய்கோலி, நெய்க்காரன், நெற்கட்டான்,
நெற்கத்தியான், பக்கட்டி, பஞ்சன், பஞ்சிபறையன்,
பஞ்சுப்புலி, படியான், படைவென்றான், பட்டரையர், பட்டவர், பட்டன், பட்டன்(போத்தன்),
பட்டிக்காரர், பட்டுக்கட்டி, பட்டுநூலான், பணிகொண்டான், பணிக்கர், பணிபூண்டான், பணியான், பண்டவெட்டி, பண்டவெட்டி, பண்டாரபறையன்,
பண்டாரி, பண்டாரி, பண்டிதன், பத்தன், பரங்கியர், பரதேசி, பருத்திக்கரான், பலாக்காய்வெட்டி, பழுவே,
பறைசைவன், பனையன், பாண்டுரான், பாப்பரையர்,
பார்ப்பான், பிச்சயன், பிச்சன், பிடாரன், பிடாரன், பிரமன், பிள்ளை, புஞ்சைபுலி,
புலயன், புலவன், புலவன்,
புலிக்கி, புலியன், புறவெட்டி, பூசன், பூணூலான், பூனையன், பெண்டாட்டி, பெரியகோட்டையார், பெரியநாட்டான்,
பெரியான், பேயன், பேரையன், பொட்டவளயன், பொட்டவெள்ளையன், பொண்ணன், பொதியன், பொந்தையன், பொய்உரையான், பொய்க்காரன், பொய்யன், பொரவியார், பொரையர், பொன்கோலி, போக்கன்,
போத்தன், போய(பேயன்), மசக்கி, மசக்கியர், மடஞ்சன், மடைவெட்டி,
மணிக்கிரான், மணிக்கிரிவன், மணியக்காரன், மண்ணையன், மத்தாளியர், மந்தி, மயிலட்டி(மயிலாடி), மயிலாடி, மலையான்,
மழவன், மன்றாடி, மாகாளி, மாடன், மாப்பிரியர், முகவெட்டி, முட்டுகாரன், முட்டுக்காரன்,
முதலி, மும்முடியர், முனியன், மூக்கப்பொரி, மூக்கன், மூப்பன், மெக்கினார், மெய்கொண்டான்,
மைத்துவான், மொக்கையன், மொங்கட்டியர்,
மோயன், ராமாவரம், வடுகன், வண்டியன், வயக்காரன்,
வயரர், வயிரன், வரதன், வலங்காத்தான், வலங்கான்,
வலங்கை, வலங்கைமுகத்தான், வலங்கொண்டான், வலியவன், வல்லநாட்டார், வல்லம்பர், வல்லான், வாக்கன், வாக்கரான், வாணன்,
வாண்டார், வாண்டையார், வாதிரி, வாபுலி, வாய்ப்புலி,
வாராவிநாயன், வாராவினான், வார்கட்டி, வாசி, விசலமுண்டார், வித்தகாரன், வித்தன், விரலியன்,
வினைதீர்த்தான், வின்னவன், வின்னி, வீரபத்திரன், வீரபாகு, வீரன், வீராண்டி, வீராப்பூர்நாட்டார், வெட்டன்,
வெட்டிக்காரன், வெட்டியான், வெள்ளப்பிரமன், வெள்ளாதி, வெள்ளையன், வெறியன், வேசாலி, வேம்பன், வேலம்பட்டியான், ஹொலையன்.
புதுக்கோட்டை தென்மேற்கு பறையர்கள்
புதுக்கோட்டை சோலியப் பறையர்கள் ஏழு இன குழுக்களாக உள்ளனர். சோழியப் பறையர்களில் பெற்ற தாயாரை ஆயா என்றும் ஆத்தா என்றும் அம்மா என்றும் அழைத்திருக்கிறார்கள். இதைக்கொண்டு ஆயா பறையர், ஆத்தா பறையர், அம்மா பறையர் என்று அழைக்கப்பட்டிருகிறார்கள். பறையர்களின் கூத்தாடி பறையர் என்று ஒரு பிரிவினர்
இருந்துள்ளார்கள். இவர்கள் கோவில் திருவிழாக்களுக்கு வேடம் கட்டி கூத்துக்கட்டுபவர்கள்.
புதுக்கோட்டையில் தென்மேற்குப் பகுதியில் குடியேறிய பறையர்கள் ஏழு நாட்டினராக
வாழ்ந்துள்ளார்கள்.
1. பொன்னமராவதி நாடு
2. மருங்காபுரி நாடு
3. தலைக்கா நாடு
4. குலிசை நாடு ( இலுப்பூர்)
5. மாவா நாடு ( மணப்பாறை)
6. கோணாடு ( தஞ்சாவூர்)
7. துருவ நாடு (திருச்சிராப்பள்ளி)
இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை உள்ளூர் அளவில் தீர்த்துக்கொள்ள
ஒரு தலைவரை நியமித்துக் கொண்டார்கள். இவர் ‘பெரியதனக்காரன்’ என அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் கிராம அளவிலான தலைவர். இவருக்கு அடுத்த நிலையிலிருந்தவர் ‘பட்டரைக்காரன்’. இவர்களைக் கொண்டு நாட்டார்களிடம் எழுந்துள்ள பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பறையர்களின் நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளும் இடமாக வைத்தூர் இருந்துள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் பறையர்களுக்கென்று தனி ஆடைகள் நெய்யப்பட்டு
விற்கப்பட்டிருக்கின்றன. பறை வேட்டி, பறை துண்டு,
பறை சேலை இப்படியாக. இந்த ஆடைகள் வெண்ணாடையாகவும் சாதாரண நூலால் நெய்யப்பட்ட ஆடையாகவம்
இருந்துள்ளது.
கந்தர்வகோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் திருமணம் முடிக்கப்படும் மணப்பெண்
வெண்ணாடையில் தாலி ஏற்றுக் கொள்ளும் சடங்கு இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. இது குலதெய்வ
முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் பறையர்களின் பழைய சடங்கை கடைப்பிடிக்கும் முறை
இது.
ஆதாரங்கள் –
1. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன்
2. CENSUS OF INDIA, 1931. PUDUKKOTTAI STATE REPORT BY RAO SAHIB S. DANDAPANI AYYAR
3. A MANUAL OF PUDUKKOTTAI – VENKATARAMA AYYAR
அண்டனூர் சுரா





.jpg)







கருத்துகள்
கருத்துரையிடுக