புதுக்கோட்டை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளைக் கொண்ட நிலப்பகுதி. ஆயினும் முல்லை நிலத்தைப் பெரும்பகுதியாகக் கொண்டது. சமஸ்தான கால புதுக்கோட்டையில் மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு காடுகளாலானது. இங்கு பெரிய, சிறிய காடுகளாக அறுபது காடுகள் இருந்துள்ளன. இவற்றில் பெரியவளைக்காடு, சின்னவளைக்காடு, வாராப்பூர், சங்கிலியான்கோட்டை காடுகள் முக்கியமானவை. புதுக்கோட்டையை மக்கள் வனக்கோட்டை என்று அழைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் கூறும் காடு புதுக்கோட்டையில் பாயும் வெள்ளாற்றின் தென்பகுதி கானாடு என்று அழைக்கப்பட்டது. கானாடு பற்றி சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. புறநானூறு 150 ஆவது பாடல் குறிப்பிடும் “காட்டு நாட்டோம்” என்கிற வரியும் நற்றிணை 59 ஆவது பாடல் குறிப்பிடும் “வன்புலக் காட்டு நாட்டதுவே” என்கிற வரியும் இன்றைய புதுக்கோட்டை பகுதியைக் குறிப்பிடும் வரிகள். காட்டு நாடு என்பதே கானாடு. இந்நிலம் பெரும் உட்பிரிவுக் கொண்டு கோனாடு ஆனது. பிறகு கானாடு என்பதன் எல்லை சுருங்கி கோனாடு பெரும் பரப்பானது. கோனாடு வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சோழவளநாடு, ஜெயசிங்ககுலவளநாடு, பாண...
அண்டனூர் சுரா