முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.

       உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவி செய்ததில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பங்கு பெரியது. 

    முதல் உலகப் போர் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது ஜனவரி 1, 1913 அன்று புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் மாட்சிமை தங்கிய ராஜச் சக்கரவர்த்தி (G.C.I.E) என்கிற  பட்டம் சூட்டப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரியில் அவர் அரியணை ஏறி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பெரும்விழா எடுக்கப்பட்டது.

 மார்த்தாண்ட பைரவர் அரசின் நிர்வாகத்தை குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிடுகிறவர். கோடையில் வெளிநாடு செல்கிறவர் குளிர்காலத்தில் சமஸ்தானம் திரும்புவார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் திரும்பியவர் சென்னையில் கொஞ்ச காலம் தங்கி பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவருக்கான ஆண்டு செலவீனத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 1,24,000/- வீதம் புதுக்கோட்டை கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை இச்சந்திப்புக்குப் பிறகு 1,74,000/- அளவிற்கு உயர்த்தப்பட்டது.

1914 பிப்ரவரி மாதம் வரையில் அவர் புதுக்கோட்டையில் தங்கி ராஜ்ஜிய காரியங்களைக் கவனித்தவர் பிப்ரவரி 23 ஆம் தேதி ஐரோப்பிய நாட்டுக்கு வழக்கமாகக் கிளம்பிச் சென்றார்.

முதல் உலகப் போர் தொடக்கம்

மார்த்தாண்ட பைரவர் வெளிநாடு சென்றால் ராஜ்ஜிய காரியங்களைக் கவனிப்பவர் அவரது சகோதரர் வி. ராஜகுமார் துரைராஜா அவர்கள். இந்த முறை பிரான்சு செல்கையில் கூடவே துரைராஜாவும் சென்றார். பிரான்சு நாட்டில் யுத்தத்திற்காக படைகள் திரட்டப்பட்டு வந்தன. வெளிநாட்டினர் யாரும் பிரான்சு நாட்டில் தங்கியிருக்கக் கூடாதென அறிவிக்கப்பட்டதால் அவர்கள் அங்கேயிருந்து பிரிட்டன் சென்றடைந்தார்கள். பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக படைகளைத் திரட்டிக்கொண்டிருந்தது.

அங்கு பிரிட்டன் மன்னரைச் சந்தித்து ஜெர்மனி நாட்டிற்கு எதிராக போருக்குத் தன் ஆதரவையும் தன் நாட்டின் ஆதரவையும் தெரிவித்தார். பிரிட்டன் வெற்றிக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்வதாக உறுதியளித்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்து பிரிட்டிஷார்கள் பெரும்உதவியை எதிர்பார்த்தார்கள். என்ன மாதிரியான உதவிகள் செய்யலாமென்று ஆலோசிக்க புதுக்கோட்டை திரும்பினார்.

போர் நிதி திரட்டல்

நவம்பர் 23 ஆம் தேதி புதுக்கோட்டை நகர் மண்டபத்தில் கூடி பிரிட்டன் தொடங்கியிருக்கும் போருக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகள் குறித்து ஆலோசித்தார். படை உதவிகள் செய்ய வழியில்லையென்றும் நிதி உதவிகள் செய்யலாமென்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, சமஸ்தான கருவூலத்திலிருந்து சென்னை போர் நிதிக்கு இரண்டு இலட்சம் ரூபாய், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் நிதிக்கு ரூபாய் பதினைந்தாயிரம், சென்னை மருத்துவக் கப்பலுக்கு மாதம் ரூபாய் 500, இம்பீரியல் ரிலீப் பண்டுக்கு ரூபாய் 64,000  வழங்குவதென முடிவெடுத்து நிதியும் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் 1939 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் போரில் இந்தியாவை ஆண்ட பிரிட்டன் நேச நாடுகள் அணியிலிருந்து அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரிட்டன. இப்போரிலும் பிரிட்டன் இந்தியர்களின் உதவியை எதிர்பார்த்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் “போர் இங்கிலாந்தின் சொந்த விவகாரம். எந்த வகையிலும் அது இந்தியாவினுடையது அன்று” என்றும் போரில் இந்தியாவை பயன்படுத்தக்கூடாது என்றும்  எதிர்ப்புத் தெரிவித்தது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இந்திய வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ பிரபு, “போரில் இந்தியா பங்களிப்பு செய்தால் போருக்குப் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரையறுப்பதில் இந்தியர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும். இந்தியாவில் பொறுப்புள்ள ஆட்சி ஏற்பட வழிவகை செய்யப்படும்” என்று உறுதியளித்தார். இதற்குப் பதிலடியாக காங்கிரஸ் இயக்கம் இரண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன்படி “உலகப் போரில் இந்தியாவைப் பங்கேற்கச் செய்வதை இந்திய மக்கள் விரும்பவில்லை. பிரிட்டன் சற்றும் தாமதிக்காமல் இந்தியர்களைக் கொண்டு ஆட்சிசெய்யும் பொறுப்புள்ள ஆட்சி ஏற்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டது.

லின்லித்கோ பிரபு இந்திய மக்களின் எண்ணங்களை, உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்பி மாகாணங்கள், முக்கிய தலைவர்கள், தனியரசு மன்னர்களை சந்தித்து விருப்பங்களைக்  கேட்டறிந்தார். சுதேச மன்னர்களில் சிலர் எந்த எதிர்பார்ப்புமின்றி தனிப்பட்ட முறையில் பிரிட்டன் போர்ப்படைக்கு  உதவ முன் வந்தார்கள். அதுபோலவே இந்திய மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்லாத சிந்து, பஞ்சாப், வங்காளம் மாகாணங்கள் எதிர்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு நீதி அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு போருக்கு உதவி செய்தார்கள். இதேபோன்று தனியரசு மன்னர்கள் போருக்கு நிபந்தனையுடனும் நிபந்தனையற்றும் போர் உதவி செய்தார்கள். புதுக்கோட்டை எந்த நிபந்தனையுமற்று போர் உதவி செய்தது.

புதுக்கோட்டை சமஸ்தான தேசீய யுத்த முன்னணி நிலயம் (PUDUKOTTAI STATE NATIONAL WAR FRONT BUREAU )

       இரண்டாம் உலகப் போரின்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் பிரகதம்பதாஸ் ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் அவர்கள். இவரது ஆட்சியிலான சமஸ்தான அரசு பிரிட்டிஷ் படையைப் பலப்படுத்த புதுக்கோட்டையிலிருந்து திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து போருக்கு அனுப்ப முன்வந்தது. போருக்கு எதிரான மனநிலையை மக்கள் கொண்டிருந்ததால் அப்படியான மனமாற்றத்தை மாற்றவும் போரின் நியாயத்தைப் பேசவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் வார பத்திரிகைகளை வெளியிட்டது. ஆங்கிலத்தில் PUDUKOTTAI STATE NATIONAL WAR FRONT BUREAU என்கிற பெயரிலும் தமிழில் ‘புதுக்கோட்டை சமஸ்தான தேசீய யுத்த முன்னணி நிலயம்’ என்கிற பெயரிலும் வாரந் தவறாது அச்சிட்டு வெளியிட்டது. இவ்விரு இதழ்கள் ஸ்ரீ பிரகதம்பாள் ஸ்டேட் பிரஸ் மூலம் வெளிவந்தன. சமஸ்தான அரசுக்குச் சொந்தமான அச்சகம் இது.



இந்த இதழ் உலகப் போரின் போக்குகள், வெற்றித் தோல்விகள், உலகத் தலைவர்களின் உரைகள், உலகப் போருக்குப் புதுக்கோட்டை செய்யும் உதவிகள், போரின் நியாயங்கள், போருக்குப் பிறகு ஏற்படும் உலகச் சமாதானம்… போன்றவற்றைச் செய்தியாக வெளியிட்டன. இந்த இதழ் 250 வாரங்கள் அளவிற்கு தொடர்ச்சியாக வெளிவந்தது.

1943 மே 21, 1943 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சமஸ்தான நிர்வாக அதிகாரி சர். அலெக்ஸாண்டர் டாட்டன்ஹாம் அவர்கள் சொற்பொழிவாற்றிய செய்தி இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. இந்த உலகப் போருக்குக் காரணமான ஜெர்மனியைக் குற்றம் சுமத்தி உரையாற்றியவர் உரையின் நிறைவில், “உங்களுக்கு வந்தனம். தரையிலும், கடலிலும், ஆகாயத்திலுமுள்ள நேசதேசப் படைகளுக்கும் ஆசி கூறுகிறேன்” என்று முடித்துள்ளார்.

ஜுலை 24, 1943 அன்று இந்திய சமஸ்தான தொழிலாளர்களின் முதன்மை அதிகாரி வாக்கர் டெல்லியிலிருந்து வந்து புதுக்கோட்டையில் தங்கி பரப்புரை செய்துள்ளார். இவரது உரையில் சென்ற நான்கு வருடங்களாக புதுக்கோட்டை சமஸ்தானம் யுத்த முயற்சிகள் செய்துவரும் நடவடிக்கைகளைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார். அப்படியென்றால் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்திலிருந்து சமஸ்தானம் போர் உதவி செய்திருப்பது புதுக்கோட்டை சமஸ்தான தேசீய யுத்த முன்னணி நிலயம் செப்டம்பர் 11, 1943 இதழின் வழியே அறியமுடிகிறது.

படைக்கு ஆளெடுக்கும் முகாம்

உலகப் போருக்கு ஆளெடுக்கும் முகாம் புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் நடந்தேறியுள்ளன. முகாம் நடைபெறும் தேதி, இடம், நேரம் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் ஊர்த் தெருவெங்கும் அடித்து ஒட்டப்பட்ட விளம்பரங்கள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. கோனாப்பட்டு, வெங்களூர், கீழாநிலை, பெருமாநாடு, புல்வயல், சடயம்பட்டி, கீரனூர், ஒலியமங்கலம், மலைக்குடிப்பட்டி, துலையானூர், வீராச்சிலை, பேராம்பூர், திருமெய்யம்,  மலம்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, மிரட்டுநிலை, அரிமளம், பூங்குடி, சத்தியமங்கலம், உடையாளிப்பட்டி, கிள்ளுக்கோட்டை, பூவரசுக்குடி, பெருங்களூர், ஆதனக்கோட்டை, வெட்டன்விடுதி, மருதன்கோன்விடுதி, முள்ளங்குறிச்சி, ராயவரம், குழிபிறை, பொன்னமராவதி, ஏம்பல், கொன்னையூர், ராமச்சந்திரபுரம், ஆலங்குடி, கரம்பக்குடி, மழையூர், வாளரமாணிக்கம், கொடும்பாளூர், வடகாடு, தீத்தான்விடுதி என்று புதுக்கோட்டை சமஸ்தானதிற்குட்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து போருக்கு ஆளெடுத்திருக்கிறார்கள். போரில் ஒரு இளைஞன் பங்கேற்றால் அந்தக் குடும்பத்திற்கு சமஸ்தான அங்காடியிலிருந்து கடனாகவும் சலுகை விலையிலும் அரிசி வழங்கப்பட்ட செய்தியும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.

இவ்விதழின் கடைசி பக்கத்தில் பிரகிருத யுத்தத்தில் அயல் நாடுகளில் சேவை புரிந்துவரும் இந்திய துருப்புகளுக்கு பொழுது போக்காய் படிக்கக்கூடிய தமிழ் புஸ்தகங்கள் தேவை. தகுதியான பழைய புஸ்தகங்கள் இனமாகக் கொடுக்கும்படி பொதுஜனங்களை கேட்டுக்கொள்ளுகிறோம். அவைகளை ஸ்டேட் அச்சாபீஸ் சூபரின்டென்டெண்ட் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர் அவைகளைச் சேரவேண்டிய இடத்துக்கு அனுப்பிவிடுவார் என்கிற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

ஹிட்லர் முசோலினி வீழ்ச்சி பாடலொன்றை எஸ்.எஸ். கிள்ளுக்கோட்டை பள்ளி தலைமையாசிரியர் பி.மரியா மைக்கேல் பிள்ளை எழுதியுள்ளார்.

       ( ஐயா சிறுபெண் என்ற சந்த மகுடம்)

வேடிக்கையிது ஹிட்லர் வாழ்வு வியர்த்தமாய் போச்சு – அவன்

விரைவில் கட்டிய மனக்கோட்டைகளுக் கனர்த்தமேயாச்சு

                                         ஞாயம்- ஜெயித்திடலாச்சு.

கோடிக் கணக்காய் வீரரோடு குதித்தெழுந்தானே – அவன்

கொண்ட எண்ணம் பூர்த்தியென்று மதித்திருந்தானே – நல்ல

ஜோடியென்று முசோலினியுடன் சுகித்திருந்தானே – பக்கத்

துணைக்கு ஜப்பான் உதவியென்று நினைத்திருந்தானே – சட்டம்

விதித்திருந்தானே – கொட்டம் – அடித்திருந்தானே

                           மிக்க மிக்க – (வேடிக்கை)

இப்படியானப் பாடல்கள்,  செய்திகள், அறிவிப்புகளுடன் இதழ் வெளிவந்து இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் இதழ் நின்றுவிட்டது.



இரண்டாம் உலகப் போரால் புதுக்கோட்டையில் ஏற்பட்ட சாதக பாதகங்கள்

      இரண்டாம் உலகப் போரினால் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு பல நன்மைகள் நடந்துள்ளன. இந்திய சுதந்திரமும் இந்திய அரசுடன் புதுக்கோட்டை இணைந்ததும் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளே. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, வணிக நோக்கில் நாடுகளைப் பிடித்து காலனியாதிக்கம் செய்துகொண்டிருக்கும் நாடுகள் காலனிய நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கி விரைவில் அங்கேயிருந்து வெளியேற வேண்டும் என்கிற முக்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்திர உறுப்பினர் நாடாக இருந்த பிரிட்டன் நிறைவேற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இதன் விளைவுதான் இந்திய சுதந்திரமும் அதற்குப் பிறகு இந்தியாவுடன் புதுக்கோட்டை இணைவும்.

சர். ஹெர்பர்ட் திட்டம்

      இரண்டாம் உலகப் போரின்போது போர்க்கருவிகள் செய்யவும் எரிபொருட்கள் தயாரிக்கவும் பிரிட்டன் படைக்கு நிறைய மரங்கள் தேவைப்பட்டன. அதற்காக பிரிட்டிஷ் இந்திய காடுகளிலிருந்து பல்வேறு வகையான மரங்கள் வெட்டப்பட்டு இங்கேயே போர்க்கருவிகள் தயாரித்தும் கப்பல் வழியே மரங்களாகவும் அனுப்பப்பட்டன. இதனால் இந்தியாவின் காட்டுவளம் பெரும் அழிவுக்கு உள்ளானது. இக்காலக்கட்டத்தில் புதுக்கோட்டை காடுகளிலிருந்து விலைமிக்க, அபூர்வ மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டன.

சர். ஹெர்பர்ட் என்கிற ஆங்கிலேயர் இந்திய மற்றும் மன்னராட்சி நிலப்பகுதிகளில் காட்டின் வளத்தைப் பெருக்க ஒரு திட்டத்தை வரையறுத்தார். இதன்படி தரசு நிலங்களையும் மானாவாரி நிலங்களையும் காடுகளாக்க அறிவுறுத்தினார். இதற்காக பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமையலுக்கு விறகு பயன்படுத்துவதற்கு மாற்றாக கரிகள் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.

மரக்கன்றுகள் வளர்க்கையில் அதை கால்நடைகள் மேய்ந்துவிட வாய்ப்புண்டு என்பதால் கிராமங்களில் மேச்சல் காட்டிற்கென்று தனி நிலத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்றைய ஊர்ப்புறங்களில் நீர் நிலைகளையொட்டியிருக்கும் மேய்ச்சல் காடுகள் யாவும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும். உதாரணமாக அண்டனூருக்கும் மேற்குபுறம் ஆதனக்கோட்டை முந்திரிக்காடு இக்காலத்தையொட்டி உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய காடு இது. இக்காட்டிற்குள் கால்நடைகள் நுழையாமலிருக்க ஊருக்கும் கிழக்குப் புறத்தில் சின்னக்காடு, பெரியக்காடு என்கிற பெயரில் மேய்ச்சல் காடுகள் ஒதுக்கப்பட்டன.

அச்சுத்துறை வளர்ச்சி

      மரங்களைக்கொண்டு வெடிப்பொருள், ஆயுதங்கள் தயாரித்ததால் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் காகித உற்பத்தி குறைந்து காகிதத் தயாரிப்பிலும் அதன் ஏற்றுமதி இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் எல்லா அரசாங்க இலாகாக்களிலும் 30 சதவிகிதம் முதல் 75 சதவிதம் வரை அதன் பயன்பாடு குறைக்கப்பட்டது.

இந்திய மாகாணம் மற்றும் சமஸ்தானங்களுக்கான காகிதங்கள் ஒதுக்கீடு செய்வது பிரிட்டிஷ் நிர்வாகம் என்பதால் இரண்டாம் உலகப் போருக்கு ஒத்துழைக்காத மாகாணங்களுக்கு காகித ஒதுக்கீட்டைக் குறைத்து ஒத்துழைப்பும் படை உதவியும் நிதி உதவியும் வழங்கிய புதுக்கோட்டை போன்ற சமஸ்தானத்திற்கு அதிக காகிதங்களை ஒதுக்கீடு செய்தது.

இதனால் அச்சுத்துறையில் புதுக்கோட்டை முதன்மையான இடத்தைப் பிடித்தது. புதுக்கோட்டை நகரிலும் திருமயம் ராமச்சந்திரப்புரத்திலும் இயங்கிய  அச்சகங்கள் அதிக நூல்கள்,இதழ்களை அச்சிட்டு அனுப்பின. அதேநேரம் புதுக்கோட்டையில் அச்சாகி  ஏற்றுமதி செய்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பிட்ட எடையளவில் மட்டுமே நூல்களை அனுப்ப அனுமதிக்கப்பட்டது. அதை அஞ்சல் வழியே கொண்டுபோய்ச் சேர்க்க தனிக்கட்டணம் முறை அமுல்படுத்தப்பட்டன. அச்சு நூல்கள், இதழ்கள் அனுப்புவதற்கென்று இராமச்சந்திரபுரத்தில் அதிக அஞ்சலகங்கள் திறக்கப்பட்டன. இதன்விளைவாக ராமச்சந்திரபுரத்தில் போஸ்ட் ஆபிஸ் வீதியென்று தனி வீதி உருவானது.

       காகிதத் தட்டுப்பாட்டால் காகிதத்தை எரிப்பவர்களுக்கும் மண்ணில் புதைப்பவர்களுக்கும் 100 பவுன்  வரையில் தண்டனை விதித்து பிரிட்டன் சட்டம் இயற்றியது. இதனால் புதுக்கோட்டையில் பொருட்களை மடிக்க காகிதம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் விளம்பரங்கள், போஸ்டர்கள் அச்சடிப்பதும் அதை சுவர்களில் ஒட்டுவதும் குறைக்கப்பட்டது.

-அண்டனூர் சுரா

குறிப்பு - இக்கட்டுரை உயிர் எழுத்து அக்டோபர் 2024 இதழில் பிரசுரமானது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...