முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் முதல் நிலவரைப்படம் - 1650 @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டையிலிருந்து இருபத்தெட்டு கல்  தூரத்திலிருக்கிறது ஆவூர் எனும்  சிற்றூர். ஆ என்றால் பசு என்று பொருள்.  பசுவின் பெயரால் அழைக்கப்படும் கிராமம் ஆவூர். பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டில் இவ்வூர் பெரம்பூர் கட்டளூர் பாளையக்காரர்களின் ஆட்சியின் கீழ்  இருந்தது.

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை கிறித்தவத் திருச்சபையின் தலைவராக இருந்தவர் ராபர்ட்- டி- நோபிலி.  இவர் கிறிஸ்தவம் மதத்தை மதுரையிலிருந்து  திருச்சிராப்பள்ளி வரைக்குமாக விரிவுப்படுத்தி திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக்கொண்டு இமானுவேல் மார்ட்டின்ஸ் எனும் பாதிரியார் தலைமையில் ஒரு திருச்சபையை உருவாக்கினார். அப்பொழுது திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் வசமிருந்தது.

திருச்சியில் நாயக்கர்களுக்கும் இவர்களுக்கு முன்பு திருச்சியை ஆண்ட முகமதியர்களுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை அமைதியான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள் கத்தோலிக்க ஊழியர்கள். அதற்காக அவர்கள் அமைதியான ஓரிடத்தைத் தேடினார்கள். அப்படியாகத் தேர்வுசெய்யப்பட்ட இடமே ஆவூர்.

ஆவூர் அன்றைக்குப் பெரம்பூர் கட்டளூர் பாளைக்காரர்கள் வசமிருந்தது. இவர்களிடமிருந்து ஒரு பகுதி நிலத்தைப் பெற்று பொ.ஆ 1686 ஆண்டு ரோமன் கத்தோலிக்க திருச்சபையை அமைத்தார்கள்.

இந்தத் திருச்சபைக்கு முதல் பாதிரியராக நியமிக்ககப்பட்டவர் டி. வெனான்ஸியுஸ் புச்சே ஆவார். ஆண்டு - பொ.ஆ 1688. பிறகு இவர் பெரிய சஞ்சீவி நாதர் என்று அழைக்கப்பட்டார்.  இவர் பெரம்பூர் கட்டளூர் பாளைக்காரர்களிடமிருந்து மேலும் சில இடங்களைத் தானமாகப் பெற்று மாதாக் கோவிலும் வெளிநாட்டிலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் தங்குவதற்கு விடுதியும் சுற்றிலும் மதிற்சுவரும் எழுப்பினார். பிறகு இந்த இடத்தில் இதற்கும் முன்பிருந்த கூரை வேய்ந்த கட்டடத்தை அகற்றி உறுதியான கட்டடம்கொண்ட தேவாலயம் எழுப்பினார். இதை அவர் உள்ளூர், வெளியூர், வெளிநாடு கிறிஸ்தவர்களிடமிருந்து நிதியுதவிப்பெற்று பொ.ஆ 1697 ஆம் ஆண்டு கட்டிமுடித்தார். இந்த ஆலயத்தின் பெயரை பிறகு  வீரமாமுனிவர் 'பெரியநாயகி மாதா தேவாலயம்' என்று மாற்றினார்.

இந்தத் தேவாலயத்தைக் கட்டி நிறைவுசெய்த காலத்தில்தான்  புதுக்கோட்டை பகுதியை ஆண்ட பல்லவராயர்களிடமிருந்து நிலப்பகுதியை மீட்டு ராம்நாடு சேதுபதி மன்னர் தொண்டைமானுக்குக் கொடுத்தார். முதல் தொண்டைமானான ரகுநாத ராய தொண்டைமானின் காலம் (1686 - 1730).

டி. வெனான்ஸியுஸ் புச்சே ஆவூர் ரோம் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியராக நியமிக்கப்படுவதற்கும் முன்பு புதுக்கோட்டை சுற்றிலுமிருந்த ஆட்சி நிலப்பகுதிகளை ஆய்வுசெய்து ஒரு நிலவரைபடத்தை வரைந்தார். இதுவே புதுக்கோட்டை ஊர்ப்பெயர் இடம்பெற்ற முதல் நிலவரைபடமாகும். இந்த நிலவரைப்படம் பொ.ஆ 1650 ஆண்டில் வரையப்பட்டது. இந்த நிலவரைபடம் அன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சிகளையும் அவர்களின் நிலப்பரப்பையும் காட்டுகிறது.

வெள்ளாற்றின் தென்பகுதியான ராம்நாட்டை சேதுபதியும் வடமேற்குப் பகுதியான திருச்சியை நாயக்கர்களும் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியான தஞ்சாவூரை நாயக்கர்களும் ஆண்டிருக்கிறார்கள்மேலும் புதுக்கோட்டை நிலப்பகுதியைச் சுற்றிலும் மருங்காபுரி ஜமீன், மணப்பாறை ஜமீன், இலுப்பூர் ஜமீன், பெரம்பூர் கட்டளூர் ஜமீன்களும் மையப்பகுதியான புதுக்கோட்டை நிலப்பகுதியைப் பல்லவராயர்களும் ஆண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிலவரைபடம் காட்டுகிறது. இந்தப் படத்தில் மூன்று ஊர்கள் இடம்பெற்றுள்ளன. அவை குடுமியாமலை (குடுமியான்மலை), வாராப்பூர் மற்றும்  பெருங்களூர்.

இந்த வரைபடம் வரையப்பட்ட காலத்தில் புதுக்கோட்டையில் தொண்டைமான் காலூன்றிக்கவில்லை என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. புதுக்கோட்டை நிலப்பகுதி தொண்டைமான்களுக்கு முன்பு பல்லவராயர்களால் ஆளப்பட்டது என்பதைச் சொல்லும் ஒரே நிலவரைப்படம் இது. மேலும் இலுப்பூர், மணப்பாறை, மருங்காபுரி ஜமீன்கள் இருந்ததையும் இப்படம் காட்டுகிறது.

பொ. ஆ1650 ஆண்டு வரையப்பட்ட இந்த நிலவரைப்படத்தில்தான் புதுக்கோட்டை எனும் பெயர் முதலில் இடம்பெற்றது. ஆகவே இது புதுக்கோட்டையின் முதல் நிலவரைப்படமாகும். இதற்குப்பின் புதுக்கோட்டை நிலவரைபடங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு நபர்களால் வரையப்பட்டன. 1690 ஆம் ஆண்டு வரையப்பட்ட தொண்டைமான் கால வரைபடம், 1905 ஆம் ஆண்டு ரெத்தினசாமி ஐயர் வரைந்த நிலவரைபடம், 1931 ஆம் ஆண்டு வரைந்த தண்டபாணி ஐயர் நிலவரைபடம், புதுக்கோட்டை மாவட்டம் 1974 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்படுகையில் ஏ.பி. முத்துச்சாமி வரைந்த மாவட்ட நிலவரைப்படம் பிறகு 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பையொட்டி நா. சந்தானகிருஷ்ணன் வரைந்த நிலவரைப்படம்,... இத்தனை நிலவரைபடங்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஆவூர் பாதிரியார்   டி. வெனான்ஸியுஸ் புச்சே வரைந்த நிலவரைபடமே ஆகும்.

இந்த நிலவரைபடம் பதினேழாம் நூற்றாண்டு கால வரலாற்றைப் பேசுவதுடன் மதம் பரப்பவும் சமய ஊழியம் செய்யவும் வந்த ஊழியர்கள் சமயம் பரப்புவதுடன் அக்கால வரலாறு மற்றும் நிலவரையியலில் கவனம் செலுத்தினார்கள் என்பதையும் விளக்குகிறது. 



(இக்கட்டுரை தி இந்து தமிழ்திசை இதழில் 09.01.2025 அன்று பிரசுரமானது.)


இந்த நிலவரைபடத்தின் தெளிவான மற்றும் தமிழுரு மாற்றம் கீழ்காணும் படம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...