செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்" என்கிறது தொல்காப்பியம் சொல்லதிகாரம். தமிழகத்தின் எந்த நிலத்தின் வரலாறும் இந்த வரியிலிருந்தே தொடங்க முடியும். செந்தமிழ் நிலம் பன்னிரெண்டு கொடுந்தமிழ் நாடுகளாக இருந்தது என்பது இவ்வரி சொல்லும் பொருள். இங்கு செந்தமிழ் என்பதும் கொடுந்தமிழ் என்பதும் ஒன்றுபோலிருந்தாலும் இரு சொற்களும் ஒன்றல்ல.
செந்தமிழ் சொல்லைத் தொல்காப்பியம், நன்னூல் இரு இலக்கண நூற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளன.
1. "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு
நிலத்தும் தங்குறிப் பினவே
திசைச்சொல் கிளவி”
(தொல், சொல்லதிகாரம்)
2. "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்மொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப”
( நன்னூல், சொல்லதிகாரம்)
செந்தமிழ் என்பது தமிழகம். கொடுந்தமிழ் என்பது அதன் கிளை நிலம். இவ்விரு சொற்கள் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
"குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும்ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர"
“செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும் தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொற்கள்” என்கிறது தொல்காப்பியம் மற்றும் நன்னூல். இவ்விரு நூற்களும் செந்தமிழ் நாடு எது என்றோ, பன்னிரு கொடுந்தமிழ் நாடுகள் எவை என்றோ குறிப்பிடவில்லை. அக்காலத்திய அறிஞர்களுக்கு அப்பன்னிரு நாடுகளும் தெரிந்திருக்கலாம். இந்நூல்களுக்கு உரையெழுதிய ஆசிரியர்கள் தமிழ் நிலத்தை பன்னிரெண்டு கிளை நிலமாக வரையறுத்தார்கள்.
"தென்பாண்டி குட்டம் குடம் கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன் வடக்கு- நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்”
அதாவது தென்பாண்டி நாடு, குட்ட நாடு, வேணாடு, குட நாடு, கற்கா நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, புனனாடு ஆகிய பன்னிரு நாடுகள். இதையே உரையாசிரியர் சேனாவரையர் வேணாடு, புனனாடு இரு நாடுகளுக்குப் பதிலாக பொங்கர் நாடு, ஒளி நாடு என்று சொல்கிறார். புலியூர்க்கேசிகன் இதையே வழிமொழிகிறார்.
உரையாசிரியர்கள்
பிற்கால சோழ, பாண்டிய கால கல்வெட்டுகளைக் கொண்டு நாடுகளை ஆராய்ந்தார்கள். தொண்டை நாட்டின் தென்பகுதியில் கடல் சார்ந்த நிலம் அருவாநாடென கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதாவது அருவா நாடும் அருவா வடதலையும் தொண்டை நாட்டைக் குறிக்கும். கற்கா நாடென்பது கன்னட நாட்டைக் குறிக்கும். திண்டுக்கல்லுக்கு மேற்கிலுள்ள குன்றுகளுக்கு பன்றி மலை என்று பெயரிருப்பதால் பழனிமலையை மையமாகக் கொண்ட நிலம் பன்றி நாடு. தேனி, கம்பம், கூடலூர் ஊர்ச்சாந்த நிலம் பூழி நாடு. இந்த
நிலப்பகுதியை கல்வெட்டுகள் அளநாடு என்றதால் கேரளா மலபார் பகுதி பூழி நாடென வரையறுத்தார்கள். மலாநாடென்பது திருக்கோயிலூர் மேற்குப் பகுதி என்கிறது ஒரு கல்வெட்டு. காவிரி பாயும் நீர்நாடு முன்னோர் சீதநாடு என்றார்கள். பொங்கர் நாடு என்பதைத் தெய்வச்சிலையார் வையாற்றின் தென்கிழக்கு பகுதியென்றார். வேணாடு என்பதை கொல்லத்துக்கும் பொதியின் மலைக்கும் இடைப்பட்ட பகுதி என்றனர். புனனாடென்பது புன்னாடு என கொங்கு நாட்டின் வடபகுதியுள்ள நாடு என்று கன்னடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து பிற்கால உரையாசிரியர்கள்
தென்பாண்டி நாடு
- திருநெல்வேலி
பகுதி;
குட்டநாடு - கேரளம் கொல்லம் பகுதி;
குடநாடு - வட மலபார் பகுதி;
கற்கா நாடு - கர்நாடகம் ஒட்டிய கோயம்புத்தூர் பகுதி;
வேணாடு - திருவிதாங்கூர் பகுதி ;
பூழி நாடு - கோழிக்கோடு,
அருவா நாடு - ஆற்காடு செங்கல்பட்டு பகுதி;
அருவாவடதலை நாடு - தமிழகத்தின் வடபகுதி,
மலாடு - மலையமான் நாடு அதாவது திருக்கோவிலூர் பகுதி,
சீத நாடு - நீலகிரி பகுதி;
புனல் நாடு
- தஞ்சாவூர், திருச்சி பகுதி,
பன்றி நாடு என்பது காட்டுப் பன்றியோடும் பன்றி மலையோடும் தொடர்புகொண்டிருக்கிறது. உரையாசிரியர் குறிப்பிடும் பன்றி நாடென்பது பழனிமலையை மையமாகக் கொண்டது. இந்நாட்டின் பரப்பு புதுக்கோட்டை வரைக்கும் இருந்தது என்று ஒரு சாராரும் புதுக்கோட்டைக்கும் பன்றி நாட்டுக்கும் தொடர்பில்லை என்றும் மற்றொரு தரப்பினரும் எழுதியுள்ளார்கள். பன்மொழி புலவர் கா. அப்பாத்துரையார் பன்றி நாடு என்பது பழனி மலை என்கிறார்.
பன்றி நாடு வரைபடம்
ஆயிரத்தெண்ணூறு
ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் எனும் நூலில் வி.கனகசபை, “தமிழகம் 12 நாடுகளாக இருந்தன.
பாண்டி, தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, வடதலை, சீதம்,
மலாடு, புனனாடு ஆகியவை. இவற்றில் பாண்டியநாடு என்பது தற்போதுள்ள மதுரை மாவட்டத்தை உள்ளடங்கி
இருந்தது. இதுவே தமிழகத்தின் உயிர்நிலையான பகுதி இது. தூய செந்தமிழ் பேசப்பட்ட இடமாக
கருதப்படுகிறது. இந்நாட்டின் முக்கிய நகரம் மதுரையே. பாண்டிய நாட்டின் வடக்கே வேட்டுவர்
அல்லது வேடர் நாடு இருந்தது. இது பன்றி நாடு அல்லது பன்றிகள் நிறைந்த நாடு என்று குறிக்கப்பட்டது.
இதன் தலைநகரம் நாகை அல்லது நாகப்பட்டினம் என்கிறார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள வரைபடம் பன்றி நாடு என்பது வடக்குத் திசையில் புனல் நாடு, வடமேற்கில் உறையூர், தெற்கு மற்றும் தென்மேற்கில் பாண்டிய நாடு, தென்கிழக்கில் சாலியூர், கிழக்கில் குணக்கடல் எனும் வங்காள விரிகுடா இதற்குட்பட்ட மையப்பகுதி என்று காட்டுகிறது. புதுக்கோட்டை இந்த எல்லைகளுக்கு உட்பட்ட ஊராக இருப்பதால் புதுக்கோட்டை ஒரு காலத்தில் பன்றிநாடாக இருந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.
பன்றி நாடும் புராணக் கதையும்
ஒரு
முறை தென்னிந்திய பகுதியில் அசுரர்கள் அங்கு வசிப்பவர்களுக்கு நிறைய இன்னல்கள் கொடுத்துவந்தனர்.
அந்த சமயத்தில் சிபி சக்கரவர்த்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது
வெள்ளை வராகம் ( பன்றி) தோன்றி அவர்களுக்கு நிறைய இன்னலகள் கொடுத்தது. சிபி சக்கரவர்த்தி
படைவீரர்கள் எவ்வளவு முயன்றும் வராகத்தைப் பிடிக்க முடியவில்லை. சிபி சக்கரவர்த்தியே
அதைப் பிடிக்க முயன்றார். அது தப்பித்து மலை மீதுள்ள புற்றில் மறைந்துகொண்டது. சிபி
சக்கரவ்த்தி அதைப் பிடிக்க மலையைச் சுற்றி வந்தார். அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய
முனிவரைக் கண்டார். அவர் கடும் தவம் புரிந்துகொண்டிருந்தார். விசயத்தை மார்க்கண்டேய
முனிவரிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அப்போது மனம் மகிழ்ந்த முனிவர் பன்றி உருவில்
வந்தது, “ ஸ்ரீமன் நாராயணன்” என்றார்.
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்ணடரீகாட்ச
பெருமாள் கோவில்மீது இப்படியான புராணக்கதை சொல்லப்படுகிறது. புராணக்கதை என்பது கற்பனை
என்றாலும் புனையப்படும் காலத்தையொட்டி நிலவும் நிலம் சார்ந்த தொன்மங்களைக்கொண்டே புராணம்
புனைப்படுகிறது. இதிலிருந்து பன்றி நாடு என்பது திண்டுக்கல்லை மையமாகக் கொண்டது என்றும்
அது திருச்சி வரைக்கும் பரவியிருந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.
பன்றி நாடு குறித்து எஸ்.
இராதாகிருஷ்ணன்
பன்றி நாடு என்பது வராகமலையெனப்படும் பன்றி மலை அல்லது பழனிமலையுள்ள
நாடு அல்லது பன்றிக்குறும்பர் பன்னிருவர் இருந்து
வந்த நாடு. தில்லையின் திருவிளையாடற்புராணம் பாடல் 59 பன்றிக்குறும்பர்களைப் பற்றி
பாடியுள்ளது. பழனி என்பது பன்றியென்பதன் சாரம் என்கிறார் எஸ். இராதாகிருஷ்ண ஐயர் அவர்கள்.
அபிதான சிந்தாமணி
அபிதான சிந்தாமணி பன்றி நாடு என்பது சிவகங்கை, இராமநாதபுரம் முதலிய சேர்ந்தது என்கிறது. இராமநாதபுரத்தின் ஒரு பகுதியே புதுக்கோட்டை. ஆகவே பன்றி நாடு புதுக்கோட்டையின் கடைசி எல்கையாக இருந்துள்ளது. பன்றி நாட்டின் அடுத்த நாடு புனல்நாடு. புதுக்கோட்டை மாவட்டத்தின் வட எல்லையில் தஞ்சாவூரையொட்டி புனற்குளம் என்றோர் ஊர் உள்ளது. பன்றி நாடும் புனல் நாடும் சந்திக்கும் நிலப்பகுதியாக புதுக்கோட்டை நிலப்பகுதி இருந்துள்ளது.
பன்றி
நாடு கல்வெட்டுகள் உள்ளதா?
பொ. ஆ 200 வரை கொண்டது சங்கக்காலம். சங்க கால ஊர்களும் பெயர்களும் அதற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன. உதாரணமாக புதுக்கோட்டை நிலத்திலுள்ள அழும்பில், ஒல்லையூர், இடையாற்றூர் ஊர்கள். இந்த வரிசையில் பன்றி நாடு புதுக்கோட்டை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதா என்று தேடுகையில் புதுக்கோட்டையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள்
சங்கக் காலத்திற்கும் பிந்தைய பிற்கால சோழ, பாண்டிய அதாவது பொ.ஆ 800 முதல் பொ.ஆ 1300 வரையிலான காலமென்று சொல்கின்றன.
INCRIPTIONS
(TEXTS) OF THE PUDUKOTTAI STATE ARRANGED ACCORDIG TO DYNASTIES எனும் புதுக்கோட்டை கல்வெட்டு ஆவணநூல், மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்ட புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் ( புதிய கண்டுபிடிப்பு) – கரு. இராசேந்திரன் மற்றும் தஞ்சாவூர் தொல்லியல் கழகம் வெளியிட்டு வரும் ஆவணம் இதழ் இவற்றைக்கொண்டு தேடுகையில் புதுக்கோட்டை நாடுகளும் ஊர்களும் இவ்வாறு இடம்பெற்றுள்ளன.
புதுக்கோட்டை கல்வெட்டு நாடுகள்
தென்கோனாடு கூடலூர் நாட்டு
செவ்வலூர்
இராஜராஜவளநாட்டு வடபற்று நாட்டு திருபூவாலைக்குடி
இராஜராஜவளநாட்டு பாலையூர் நாட்டு திருப்பழங்கரை
தென்கோட்டு ஒல்லையூர் கூற்றத்து சுந்தரசோழபுரம்
தென்கோட்டு ஒல்லையூர் கூற்றத்து ஒல்லையூர்
சோழவளநாட்டு குன்றுசூழ் நாட்டு புன்னங்குடி
கேரளவளநாட்டு அதளையூர்நாட்டு திருக்குரம்பூர்
கல்வாயல்நாட்டு சுந்தபாண்டிபுரம்
புறமலைநாட்டு பூலாங்குறுச்சி
செங்குன்ற நாட்டு ஆன்குடி
இராசராசவளநாட்டு வல்லநாட்டு உடையார் திருவரன்குளம்
பாண்டிய வளநாட்டு அறந்தாங்கி
செயசிங்ககுலகாலநாட்டு வளநாட்டு தென்னங்காட்டுநாட்டு மாந்தன்குடி
சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர்
பன்றியூர் நாட்டு அழும்பில்
தென்சிறுவயல்நாட்டு வெள்ளைநல்லூர்
ஜெயசிங்ககுலகால குலவளநாடு
சோழவளநாட்டு ஒல்லையூர் கூற்றத்து இடையாற்றூர்
ஜெயசிங்ககுலகால பெருவாயில்நாட்டு திருவேங்கைவாசல்
சிங்கவளநாட்டு கல்வாயில் நாட்டு நெல்வாயல்
சோழவளநாட்டு தென்கோனாட்டு அண்ணல்வாயில் கூற்றம் விசலூர்
வடசிறுவாயில் நாட்டு கீரனூர்
வடபனங்காட்டுநாட்டு திருகுன்றாக்குடி
ஜெயசிங்ககுலநாட்டு வடபனங்காட்டு நாட்டு தெம்மாவூர்
கானாட்டு விருதராஜபயங்கரவளநாட்டு பெருந்துறை
சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து வடகோனாட்டு நீர்பழனி
சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து காரையூர்
சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து நல்லூர்
சோழவளநாட்டு வயலகநாட்டு வயலகம்
இராசராசவளநாட்டு புன்றில் கூற்றத்து திருமணஞ்சேரி
சிங்கக்குலகாலவளநாட்டு பெருவாயில்நாட்டு சிறுசுனையூர்
சிங்கக்குலகாலவளநாட்டு வடபனங்காட்டுநாட்டு திருக்குன்றக்குடி
விருதராஜபயங்கர வளநாட்டு ஆதனூர்
விருதராஜபயங்கர வளநாட்டு மெலூர்
விருதராஜபயங்கர வளநாட்டு கானநாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை
சோழவளநாட்டு ஒல்லையூர்கூற்றத்து ஒல்லையூர் மங்கலம்
இராசராசவளநாட்டு செங்காட்டு நாகுளக்குடி
வடசிறுவாயில் நாட்டு கீரனூர்
வல்லநாட்டு கவிப்பால் திருவெட்பூர்
சோழவளநாட்டு குன்றியூர் நாட்டு உறையூர்
சோழவளநாட்டு குன்றிசூழ் நாட்டு திருநலக்குன்றம்
ஜெயசிங்ககுலகால வளநாட்டு கற்குறிச்சி
ஜெயசிங்ககுலகால வளநாட்டு பெருவாயில்நாட்டு மயிலாப்பூர்
செங்காட்டு நாடு நெமக்கோட்டை
விருதராஜ பயங்கர சிறுசுனையூர் சதுர்வேதி மங்கலம்
சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து தெந்கோனாட்டு
மிய்செங்கிளி நாட்டு நல்லூர்
வடசிறுவாயில்நாட்டு தானையிக்குடி
வடசிறுவாயில்நாட்டு கானூர்
சோழவளநாட்டு பொன்னமமராபதி நாட்டு தென்பற்றுஆற்றூர்
கூடலூர் நாட்டு பனையூர் குளமங்கலம்
விருதராச பயங்கர வளநாட்டு கானாட்டு பெருநல்லூர்
கானாட்டு பெருநல்லூர் பொன்னமராவதி நாட்டு வடபற்று பனைஊர்
கேரளசிங்கவளநாட்டு பிறம்பா நாட்டு இலுப்பைக்குடி
கல்வாயில்நாட்டு சுந்தரபுரம்
சோழவளநாட்டு கூடலூர் நாட்டு பெருங்கூற்குடி
சோழவளநாட்டு ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி
புறமலைநாட்டு பொன்னமராவதி
இப்படியான
நாடுகள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து பார்க்கையில் புதுக்கோட்டை நிலப்பகுதியை உள்ளடங்கி கீழ்காணும் நாடுகள் இருந்துள்ளன. ராஜராஜ வளநாடு, ஜெயசிங்ககுலகால வளநாடு, கானாட்டு விருதராஜ பயங்கரவளநாடு,
வடபனங்காட்டு நாடு, தென்பனங்காட்டு நாடு, தென்கோனாடு, வடகோனாடு, பாண்டிய வளநாடு,
கங்கைகொண்ட சோழவளநாடு, இராசராச வளநாட்டு செங்காடு, கேரளந்தக வளநாடு, கேரள சிங்க சோழவளநாடு, விக்கிரமசோழ வளநாடு, பாண்டிகுலோசனி வளநாடு,
சுந்தரபாண்டிய வளநாடு,...
இந்நாடுகள்
பிற்கால சோழ, பாண்டிய கால பெயர்களாகும். இதிலிருந்து பன்றி நாடு என்கிற பெயர் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை என்பதை உறுதிபட அறியமுடிகிறது.
பன்றியூர் நாடு
பன்றி நாடும் பன்றியூர் நாடும் ஒன்றல்ல. பன்றி நாடு தொல்காப்பியர்
காலத்தியது. அதாவது கி.மு 300. பன்றியூர் நாடு என்பது கி.பி 800 – 1300 ஆண்டுகளுக்கு
இடைபட்ட பெயராகும். இன்றைய கரம்பக்குடி பகுதி முதலில் பன்றியூர் நாடு என்று அழைக்கப்பட்டு
பிறகு அழும்பில் நாடு என்று என்றானது. பன்றியூர் என்கிற பெயர் பன்றி நாட்டிலிருந்து
திரிந்து மருவியிருக்க வாய்ப்புண்டு.
பன்றி
நாடு என்கிற பெயரில் கல்வெட்டு இல்லையே தவிர பன்றியூர் பெயரால் ஓர் ஊர்
கல்வெட்டுகளில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை கரம்பக்குடிக்கும் அருகில்
அம்புக்கோவிலில் கிடைத்த ஒரு கல்வெட்டு ‘பன்றியூர் நாட்டு அழும்பில்’ எனக் கொண்டுள்ளது. இந்த அழும்பில்
சங்கப்பாடல்களிலும் பிற்கால கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது. உரையாசிரியர் பொ.வே.சோமச்சுந்தரனார் அவர்கள் புதுக்கோட்டை பகுதியிலுள்ள அம்புக்கோவில் என்று வழங்கப்படும் ஊரே அழும்பில் என்று அவரது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஊரும் பேரும் எனும் நூலில் ரா.பி. சேதுப்பிள்ளை “புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக்கோயில்” என்று குறிப்பிட்டுள்ளார். அழும்பில் பன்றியூர் நாடென்று குறிக்கப்படுவதால் பன்றி நாடு
அழும்பில் வரைக்கும் பரவி இருந்ததா? பன்றி நாடும் பன்றியூர் நாடும் ஒன்றா, வேறு?
என்கிற கேள்விகள் இங்கு எழுகின்றன.
அழும்பிலைப்
பாடும் இலக்கியங்கள்.
அழும்பில் எனும்
ஊர் அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி,
சிலப்பதிகாரம் நான்கு இலக்கிய
நூல்களில் பாடப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் பலரும் அழும்பில் ஊரை
அகநானூறு அல்லது புறநானூறிலிருந்து மேற்கோள் காட்டியதோடு விலகிக்கொள்கிறார்கள்.
2012 ஆம் ஆண்டு அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைக்க வைத்த அன்றைய முதல்வர்
ஜெ.ஜெயலலிதா அவர்கள் தன்து உரையில் அகநானூற்றில் பாட்டப்பட்ட அழும்பில் எனும்
அம்புக்கோவில் என்று குறிப்பிட்டு உரையாற்றினார். இந்த நான்கு இலக்கியங்கள்
குறிப்பிடும் அழும்பில் பற்றிய பாடலின் பொருளை வரிசைப்படி உள்வாங்குகையில் அவ்வூர்
பற்றிய ஒரு முழுமையான வரலாறு கிடைக்கிறது.
புறநானூறு – அகநானூறு
–சிலப்பதிகாரம் – மதுரைக்காஞ்சி வரிசையில் இப்பாடல்களை அணுகுவோம். புறநானூறு 283 ஆவது பாடல்
அடைநெடுங்கல்வியார் எனும் புலவரால் பாடப்பட்டது. தும்பைத் திணை.
இப்பாடலின் பாட்டுடைத் தலைவன் அழும்பிலன்.
ஆகவே இப்பகுதி அழும்பிலன் எனும குறுநில மன்னனால் ஆளப்பட்டிருக்கிறது. இவன் போரில்
இறந்துவிடுகிறான். மாய்ந்த வள்ளலை நினைந்து பாணர் வருந்திப் பாடியதைப் போல அமையப்பெற்ற இப்பாடலில் உவமையாக நீர்நாய்,
முதலை, வரால் மீன்,
வாளை மீன் இடம்பெறுகின்றன. அழும்பில் என்கிற இன்றைய அம்புக்கோவில் அக்னியாற்றாங்கரையில் அமைந்துள்ளது.
மேலும் சுற்றிலும் கண்மாய்,
குளங்கள் கொண்ட ஊர்.
இங்கு முதலை,
மீனினங்கள், நீர்நாய் இருந்திருக்க வாய்ப்புண்டு.
நீர்நாயும் முதலையும் சண்டைப்போடுவதைப் போல அழும்பிலன் தன் நண்பனுக்காக எதிரியிடம் சண்டையிடுகிறான்.
நீர்நாய் வாளை மீனைச் சாப்பிட்டு வரால் மீனுக்கு காத்திருக்கிறது.
நீர்நாயை வேட்டையாட அந்த நீர்நிலையிலிருந்து முதலை வருகிறது.
நீர்நாய், முதலைக்குமிடையே சண்டை
நடக்கிறது. இருவரில் யார் தோற்று இறந்தாலும் அவர்களுக்காக இன்னொருவர் வருவார் என்பதே இப்பாடல் சொல்லும் செய்தி.
அதாவது நீர் நாயை முதலை வீழ்த்திவிட்டால் முதலையோடு சண்டையிட
அடுத்த நீர்நாய் வரும். முதலை தோற்றுவிட்டால் அடுத்த முதலை வரும். இங்கு அழும்பிலன் நீர்நாயோடு ஒப்பிடுவதன்மூலம் பலம் பொருந்திய முதலையொத்த எதிரியிடம் போர் புரிந்திருக்கிறான்
என்று அறியமுடிகிறது. தன் நண்பன் மீது பாயவரும் வேல்களை
அழும்பிலன் தன் நெஞ்சினில் வாங்கி நண்பனைக் காக்கிறான்.
அந்த வேல் எப்படியிருக்கிறயென்றால் வண்டிச் சக்கரக் குடத்தின் ஆரக்கால்கள்போல இருக்கிறது.
இவனைப் புறநானூறு 'அழும்பிலன் அடங்கான் தகை'
என்கிறது. இவன் கோசர் குடியைச்
சேர்ந்தவன்.
அழும்பிலன் நண்பனுக்காக உடலைக்கொடுத்து உயிரையும் கொடுத்தவன்.
ஆகவே இவனது பெயரால் இவ்வூர் அழும்பில் என்று பெயர்ப்பெற்றிருக்க வேண்டும்.
இப்பாடலில் அழும்பிலனின் நண்பன் யார் என்பதோ,
யாரை எதிர்த்து போர்ப் புரிந்தான் என்பதோ குறிப்பிடப்படவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் அகநானூற்றில் கிடைக்கிறது.
அடுத்ததாக அகநானூறு பாடலுக்கு வருவோம்.
அகநானூறு 44 ஆவது பாடல் குடவாயில்கீரத்தனார் முல்லை திணையாக பாடியுள்ளார்.
போருக்குச் சென்ற தலைவன் அப்போர் முடிந்ததும் தன் தலைவியின் நினைவு மேலெழத் தன்
தேர்ப்பாகனிடம் தேரை விரைந்து செலுத்துமாறு தூண்டுகிறான்.
இப்பாடலின்
பாட்டுத்தலைவன் பெரும்பூட்சென்னி எனும் சோழன். இவனது அழும்பில் எனும் ஊர் நீங்காத
புது வருவாயைக் கொண்டும் மிகுந்த பழைய நெல்லினைக் கொண்டு பல குடியிருப்பைக்
கொண்டிருக்கிறது. இத்தகையச் சிறப்புகளைக் கொண்டவன் பெரும்பூட்சென்னியின் தலைவி
என்பது இப்பாடல் தரும் பொருள்.
புறநானூறு, அகநானூறு
இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அழும்பிலன் பெரும்பூட்சென்னியின்
நண்பன். இவனுக்காகவே அழும்பிலன் எதிரியிடம் போரிட்டு தன் இன்னுயிரைக் கொடுத்துள்ளான்.
அப்படியென்றால் அழும்பிலனை வீழ்த்தியவன் யாராக இருக்கும்? அவன் தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!
அடுத்ததாக
சிலப்பதிகாரத்திற்கு வருவோம். சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நடுகல் காதையில் சேரன்
செங்குட்டுவனின் அமைச்சர் கையில் இடம்பெற்றிருக்கும் வேள் அழும்பில் வேளாக
இருக்கிறது. கனக விசயரை சிறை வைத்த சேரன்செங்குட்டுவன்
அவனது அமைச்சர் வில்லவன் கோதையிடம் சொல்கிறான், “கனக விசயரைச் சிறையிலிருந்து விடுவி.
இனி தன் நாட்டாரும் பகை நாட்டாரும் இறைப்பொருள்
செலுத்த வேண்டாம்.” இச்செய்தியை அமைச்சர்
கையில் அழும்பில் வேள் கொண்டு மூதூர் தோறும் அறிவித்து
திரும்புகிறான். இங்கு அழும்பில் வேள் என்பது அழும்பிலன் கையில் வைத்திருந்த வேள்
என்றும் அழும்பிலனை வீழ்த்திய பாண்டியனின் வேல் என்றும் பொருள்கொள்ள இடமுண்டு.
அடுத்து
மதுரைக்காஞ்சிக்கு வருவோம். இங்கு மானவிறல்வேள் என்னும் குறுநில மன்னன் அழும்பில் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிப்புரிகிறான்.
அவ்வூர் மிகுதியான நிலம், செழிப்பான வளங்களைக்
கொண்டிருக்கிறது. அவ்வூரின் செழிப்பைப் பொறுக்கமுடியாத பாண்டியன் அவ்வூரை
அழிக்கிறான். ஆகையால் இக்குறுநில மன்னன் நாடு இழந்து நின்றான்.
இவனை நெடுஞ்செழியன் தன் பாண்டிய நாட்டில் சிறப்புற வாழ வைத்தான் என்று
மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
அப்படியென்றால்
அழும்பில் என்கிற ஊர் அழும்பிலன் எனும் கோசர் குடி குறுநில மன்னன் அடுத்து சோழன்
பெரும்பூட்சென்னி, இவனையடுத்து மானவிறல் எனும் வேள் மன்னன் இவனுக்கு அடுத்ததாக
பாண்டிய மன்னனால் ஆளப்பட்டிருப்பது தெரியவருகிறது.
அதாவது கடைசியில் அழும்பில் பாண்டியன் வசம் வந்தடைகிறது. இதன்பிறகு பன்றிநாட்டார்கள் இப்பகுதியில் குடியேறுகிறார்கள். பிறகு இவ்வூர் பன்றியூர் அழும்பில் என்றாகியிருக்கிறது. இச்செய்திக்கு வலுசேர்க்கும்படியாக சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அழும்பில் பாண்டிய நாடு என்கிறார்.
பன்றியூர் காலம்
சோழமண்டல சதகம் எனும் நூல் பன்றீயூர், புன்றில் கூற்றம்
இரண்டு பயன்பாட்டுச் சொற்களும் விருதராச பயங்கர வளநாடாக இருந்து இராசேந்திர
சிம்மவளநாடாக பிரிக்கையில் உருவான கிளை நாடுகள் என்கிறது. அழும்பில் பன்றியூர்
நாடாகவும் இவ்வூருக்கு அருகிலுள்ள திருமணஞ்சேரி புன்றில் கூற்றமாகவும்
இருந்துள்ளது. புன்றில் கூற்றத்தின் தலைமையிடம் பட்டுக்கோட்டை பகுதி.
பன்றியூர் அழும்பில் எனும் ஊர் பிற்கால சோழர் இராசேந்திரன் காலத்தியது என்றாலும் அம்புக்கோவில் பக்தலலிதேஸ்வரர் ( அடியாருக்கு நல்லவர்) – தயாபுரநாயகி ( தாயினும் நல்லவள்) கோவிலில் கிடைத்த ஒரு கல்வெட்டு ( புதுக்கோட்டை கல்வெட்டு– 369) பல்லவராயன் எழுத்து என்கிறது. அப்படியென்றால் இப்பெயர் பல்லவராயன் ஆட்சிக்காலம் வரைக்கும் பெயர்க்கொண்டிருந்தது என்கிற புரிதலுக்கு வரமுடிகிறது.
பன்றிகொன்றான்
இப்பகுதியில்
பன்றிகொன்றான் எனும் பட்டப் பெயர்கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் பன்றிகொன்றன்விடுதி என்கிற ஊரும் இருக்கிறது. அவ்வூர் தற்போது பணிகொண்டான்விடுதி என அழைக்கப்படுகிறது. இவர்கள் பல்லவராயன் காலத்தவர்கள். இவர்கள் பன்றி நாட்டுப்
பகுதியிலிருந்து இங்கே குடியேறி இப்பட்டப்பெயரைப் பெற்றிருக்கலாம். அல்லது
இப்பகுதி காட்டுப்பன்றியை வீழ்த்தி இப்பெயரைப் பெற்றிருக்கலாம். எப்படியாயினும்
சங்கக் கால அழும்பில் பிற்காலத்தில் பன்றியூர் அழும்பில் என்று அழைக்கப்பட
குடியேற்றமே முக்கிய காரணம் என்று அறியமுடிகிறது.
பன்றி நாடும் குறும்பர்களும்
புதுக்கோட்டையின் பூர்வீகக்குடிகள் குறும்பர்கள். குறும்பர் குறித்து தர்ஸ்டன் இவ்வாறு எழுதுகிறார்: பல்லவ அரசர்களின் சந்ததியார் இவர்கள். கோங்கர், சோழர், சாளுக்கியர்களால் துரத்தப்பட்டு மலைநாடு முதலிய இடங்களில் ஒளிந்து பலவித தொழில்செய்து பிழைக்கின்றவர். சிலர் வர்த்தகம் செய்கின்றனர். குறும்பர் நாடு மலை நாட்டில் ஒரு பிரிவு. இவர்களில் சிலர் கன்னடம் பேசுபவர்.
புதுக்கோட்டையில் குறும்பர்கள் வாழ்ந்த சுவடுகளும் அடையாளங்களும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. குறும்பர்கள் ஆடுகள் வளர்த்து பிழைத்து வந்தவர்கள். செம்மறியாட்டின் ஒரு வகை இவர்களின் பெயரால் குறும்பா ஆடு என்று அழைக்கப்படுகிறது. குறும்பாடு என்றும் சொல்வர். குறும்ப கம்பளி என்றொரு கம்பளி வகை உண்டு.
பன்றிக்குறும்பர்கள்
குறும்பர்கள் பன்னிருவர். அவர்களில் சிறந்தவர்கள் பன்றிக் குறும்பர்கள். இவர்கள் புதுக்கோட்டை பெருமாநாடு பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியில் பன்றியான்பள்ளம் என்றோர் இடமிருக்கிறது. இந்த இடத்தை புதுக்கோட்டை கல்வெட்டு – 359 குறிப்பிடுகிறது.
பன்றியான் பள்ளம் என்பது பன்றிகளை விரட்டிவந்து பள்ளத்தில் இறக்கி வலை விரித்துப் பிடிக்குமிடம் என்று பொருள்கொள்ளலாம்.
முதுக்குடுமி உக்கிரப் பெறுவழுதி காலத்தில் வெள்ளாளர்கள் வட பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்டு புதுக்கோட்டை பகுதியில் குடியமர்த்தப்பட்டார்கள். அப்பொழுது இங்கேயிருந்து வெளியேற்றப்பட்ட குறும்பர்கள் மலை நாடான கன்னடம் பகுதியில் குடியேறி அங்கு குறும்நாட்டை உருவாக்கிகொண்டார்கள்.
புதுக்கோட்டையில்
ஒரு சில குறும்ப மக்கள் குறும்ப மொழி பேசியிருக்கிறார்கள். 1901 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மக்கட்தொகை கணக்கெடுப்பில் குறும்ப மொழி இடம்பெற்றுள்ளது. அடுத்த 1911 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பில் அம்மொழியை கன்னட மொழியோடு சேர்த்து கணக்கெடுக்கப்பட்டது. இவ்வாண்டின் கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டையில் குறும்பர்கள் 5560
பேர் இருந்துள்ளார்கள்.
தற்போது இவர்கள் புதுக்கோட்டை பெருமா நாட்டுப்பகுதியில் செல்லுக்குடி, ஆரணிப்பட்டி, மாங்குடி பகுதிகளில் செறிவாக வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் வீரலெட்சுமி எனும் தெய்வத்தை குலதெய்வதாக வழிபடுகிறவர்கள். செல்லுக்குடி எனும் ஊர் குறும்பர்களுக்கு இனாமாக வழங்கப்பட்டதாக என் நடராசன எழுதிய புதுக்கோட்டை கையேடு எனும் நூல் குறிப்பிடுகிறது. தற்போது இவர்கள் கவுண்டர்களாக, நாயக்கர்களா வாழ்ந்துவருகிறார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக