1990-92 ஆம் ஆண்டு கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மரியாதைக்குரிய ஷீலாராணி சுங்கத் அவர்கள். இவரால் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டும் இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் மக்கள் இயக்கமாக மாறியது. இந்த இயக்கம் வீட்டுக்குள் நீண்டகாலமாக அடைப்பட்டிருந்த பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைத்ததுடன் சமூகப் புரட்சிக்கும் பெண் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. இந்த இயக்கத்தின் வெற்றிதான் இன்றைய தமிழ்நாடு அரசின் உயரிய திட்டமான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் விலையில்லா சைக்கிள் திட்டம் என்றும்கூட சொல்லலாம். இவருடனான நேர்காணல் குங்குமம் தோழி ஜூலை 1-15,2024 இதழில் வெளிவந்திருக்கிறது. அந்த நேர்காணல் இதோ:
"1991 இல் இந்தியாவில் கல்வி அறிவின்மை விகிதம் மிகவும் குறைவு. அதிலும் நான் மாவட்ட ஆட்சியராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. குறிப்பாக இங்கு பெண்களுக்குக் கல்வி என்பது கேள்விக்குறியாக இருந்தது. இங்குள்ள கிராமத்துப் பெண்கள் படிப்பைவிட தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்குதான் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். பெண்களை படிப்பை நோக்கி நகர்த்த வேண்டும். அவர்களை தன்னம்பிக்கை மிக்க பெண்களாக மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய அரசாங்கத்தால் தேசிய எழுத்தறிவு மிஷன் அமைக்கப்பட்டது. அத்தோடு தமிழ்நாட்டிலும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்ய திட்டமிட்டேன். காரணம் இங்குள்ள ஊர் மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். மேலும் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றக்கூட முடியாத சூழ்நிலையில் வாழ்பவர்கள். அதனால்தான் கிராமத்துப் பெண்களை ஒரு இயக்கமாக அமைக்க முடிவு செய்தேன். அதன் மூலம் அவர்கள் ஒரு செயலை சேர்ந்துசெய்ய முடியும். இது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம். நான் பார்த்தவரையில் அந்த காலங்களில் சைக்கிள் மட்டும்தான் போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பெண்களும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டால் அவர்களாலும் பல ஊர்களுக்கு சென்றுவர முடியும். குறிப்பாக தங்களின் அன்றாட தேவையான தண்ணீர் குடங்களைத் தூக்கிவர பிரச்சனை இருக்காது. அந்த நோக்கத்தில்தான் இந்த இயக்கத்தினை தன்னார்வர்களுடன் இணைந்து தொடங்கினேன்.
இயக்கம் துவங்கியாச்சு, அடுத்து சைக்கிள் வேண்டும். இங்குள்ள தனியார் வங்கி மேலாளரின் உதவியுடன் சைக்கிள் நிறுவனத்திடம் பேசி மாதம் ரூபாய் 100 என தவணை முறையில் பெண்களுக்கு சைக்கிள்களைப் பெற்றுக் கொடுத்தேன். சைக்கிளைத் தவணை முறையில் பெற்றுக்கொள்ள விரும்பிய பெண்களுக்கு சைக்கிள் பெற்றுக்கொடுத்தோம். அதன்பிறகு சிறு பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் தெருக்களில் சைக்கிளை மிகவும் ஆர்வமாக ஓட்டிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் எங்களுக்கு தரப்பட்ட சைக்கிள்கள் அனைத்திலும் ஆண்கள் பயன்படுத்தும் இடையே கம்பிஅமைப்பு கொண்டிருந்தது. இதனால் பெண்கள் புடவை மற்றும் பாவாடையில் அதில் பயணிப்பது கடினம். இருப்பினும் அந்தக் கம்பி அவர்களைத் தடுக்கவில்லை. பெண்கள் சைக்கிளை வாங்கி கற்றுக்கொள்ளவும் தொடங்கினர். இதற்கு ஆண்களே உதவியாகவும் இருந்தனர். எங்கள் நோக்கம் என்னவென்று கிராம மக்கள் புரிந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். பலர் முன்னிலையில் பகல் நேரத்தில் சைக்கிள் பழகக் கூச்சப்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் கற்றுக்கொள்ள தொடங்கினார்கள். அதனால் அவர்களாகவே பல இடங்களில் மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்தோம். பெண்களும் எல்லா வேலைகளும் தங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவானது. ஒரு ஊர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலும் பெண்கள் சைக்கிள் ஓட்ட தொடங்கினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்த சைக்கிள் பந்தயம் நடத்தினோம்.
ஒரு இயக்கம் மென்மேலும் இயங்க அதற்கான முழக்கம் அவசியம். அதன் அடிப்படையில் முத்துப்பாஸ்கர் என்பவர் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்பட்டும் தன்னம்பிக்கை குறித்து ஒரு பாடல் ஒன்று எழுதினார். 'சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி... வாழ்க்கை சக்கரத்தை சுத்த விடணும் தங்கச்சி...' என்ற வரிகளுடன் அந்த பாடல் துவங்கும். பெண்களும் அந்த பாடலை பாடிக்கொண்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தார்கள். அடுத்து இயக்கத்தால் ஒருங்கிணைந்த பெண்களுக்கு அறிவொளி இயக்கம் தன்னார்வலர்கள் உதவியுடன் எழுதப் படிக்க சொல்லி கொடுக்க ஆரம்பித்தோம். பெண்களும் ஆர்வமாக படிக்கத் தொடங்கினார்கள் அவர்கள் கற்ற கல்வி தங்களின் குழந்தைகளுக்கும் படிக்க சொல்லிக் கொடுக்க உதவியது. இதனால் அந்த மாவட்டத்தின் கற்றல் விகிதம் அதிகமானது. இது பெண்கள் சம்பாதிக்கவும் குடும்பத்தை வழிநடத்தும் உதவியது" என்கிறார் ஷீலாராணி சுங்கத்.
நன்றி - மா. வினோத்குமார், குங்குமம் தோழி இதழ்.
.jpeg)




கருத்துகள்
கருத்துரையிடுக