முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டைக்கு காவிரிநீர் முயற்சிகள்; மன்னராட்சியிலிருந்து இன்று வரை.

காடாரம்பம் – புதுக்கோட்டைக்கு இப்படியாக ஒரு பெயருண்டு. அதாவது நீர்ப்பாசனமற்ற ஊர். புதுக்கோட்டையின் நீராதாரம் என்பது மழைதான். ஆகவே மானாவாரிப் பூமி என்றும் சொல்வர். புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 4,50,476.195 ஹெக்டர். இதில் நஞ்சை நிலம் 96,705.195 ஹெக்டர். புஞ்சை நிலம் 1,93,286.700 ஹெக்டர். மீதமுள்ளது அரசின் வனப்பகுதி. இந்தப் புதுக்கோட்டையை பொன் விளையும் பூமியாக்க மன்னர் காலம் தொட்டு இன்று வரை காவிரி நீரைப் புதுக்கோட்டைக்குக் கொண்டுவரும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ முயற்சிகள், எத்தனை வகைவகையான போராட்டங்கள். இருந்தென்ன காவிரி வருவேனா என்கிறது. அழைத்ததும் வந்துவிட காவிரி என்ன அத்தனை குறுகிய ஆறா?

உலக ஆறுகளில் தமிழகத்தில் ஓடும் காவிரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலான ஆறுகளின் தண்ணீர் பொதுமக்களுக்கு சிறிதளவே பயன்பட்டு பெரும்பகுதி கடலில் கலந்துவிடுகிறது.  காவிரி நீர் அப்படியல்ல. இவ்வாற்றின் 95 சதவிகிதம் நீர் மக்களுக்கு குடிநீராக, பாசனமாகப் பயனளிக்கிறது. உலகில் வேறெந்த ஆறும் இந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்படவில்லை. இதுவே காவிரியின் சிறப்பு.

நாட்டில் ஓடுகிற ஆறுகளில் காவிரி மட்டுமே அகன்ற காவிரியாக ஓடி படிப்படியாகச் சுருங்கி கடலில் கலக்கும் இடத்தில் குறுகி கலக்கிறது. மற்ற எல்லா ஆறுகளும் முதலில் சுருங்கி பின்னர் போகப் போக விரிந்து கடலில் கலக்கிறது. காவிரி ஒரு காலத்தில் சென்னையையொட்டி பாய்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆய்வுக் குறிப்பு கல்லணை கரிகால்சோழன் மணி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டையில் ஓடுகிற வெள்ளாறு ஒரு காலத்தில் காவிரியாக ஓடியிருக்க வாய்ப்புண்டு.



காவிரி தோற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி என்றும் பிரம்ம கபாலம் என்றும் வழங்கப்படும் சைய மலையின் சிகரத்திலிருந்து தோன்றும் காவிரி குடகு மலை தலைக்காவிரியாக உற்பத்தியாகி நானூற்று எண்பது மைல்கள் ஓடி கடலில் கலக்கிறது. கடலை நோக்கி ஓடுவரும் காவிரியுடன் ஹேமாவதி,  இலட்சுமண தீர்த்தம், லோகபவானி, கபினி, சுவர்ணாவதி,  ஷிம்ஷா,  அர்க்காவதி,  சின்னாறு எனும் சனத்குமார நதி, தோப்பூராறு, பவானி, நொய்யல்,  திருமணி முத்தாறு எனும் சேலம் ஆறு, அமராவதி ஆகிய கிளை ஆறுகள் காவிரியுடன் இணைந்து பின்னர் கொள்ளிடம்,  வடவாறு, வெண்ணாறு,  நெட்டாறு, வெட்டாறு, திருமலைராசன்,  பாமணியாறு முதலிய கிளை ஆறுகளைக் கொண்டு தஞ்சை நிலத்தை வளமாக்குகிறது.




காவிரிபூம்பட்டினத்திலிருந்து திருவரங்கம் வரை சுமார் நூறு மைல் தூரத்திற்குக் காவிரியின் இரு கரைகளையும் தான் வென்று கைது செய்திருந்த பன்னிரெண்டாயிரம் சிங்களவரையும் தனது சிற்றரசர்களையும் கொண்டு பலப்படுத்தினான் சோழன் கரிகாலன். நீர் பெருகி நிலங்களை அழிக்காமல் காக்கவும் நீர் விரைந்து பாயவும் இதைச் செய்தான்.

இவனுக்குப் பின்னர் பிற்காலச் சோழர்கள் பல புதிய ஆறுகளை வெட்டினார்கள். முதலாம் பராந்தக சோழன் தஞ்சைக்கு வடக்கே வீரசோழ வடவாற்றையும், திருப்பனந்தாளுக்கு வடக்கே மதுராந்தக வடவாற்றையும் வெட்டினான். மேலும் இவன் சிதம்பரத்திற்கு மேற்கே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் வீர நாராயணன் ஏரி ஒன்றை அமைத்தான். இதுதான் இன்று வீராணம் ஏரி என்று பெயர் விளங்குகிறது.

பராந்தக சோழனின் மகன் கண்டராதித்தன் உலகப்புரத்திலுள்ள கண்டராதித்தப் பேரேரியை வெட்டினான்.  இவருக்கும் புதுக்கோட்டைக்கும் ஒரு தொடர்பு உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை இவனது பெயரால் கண்டராதித்தன் கோட்டை - கண்டரகோட்டை என்று அழைக்கப்பட்டு தற்போது கந்தர்வகோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது.  இவனுடைய மனைவி செம்பியன்மாதேவி திருச்சி மாவட்டத்தில் திருமழப்பாடிக்கு அருகில் செம்பியன் மூதேவி பேரேரியை உருவாக்கினாள்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் பேரேரியை கண்டராதித்தன் மகன் உத்தமசோழன் வெட்டினான். வட ஆற்காடு மாவட்டத்தில் பிரம்மதேசம் எனும் ஊரில் சுந்தர சோழப் பேரேரியை இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் தோண்டுவித்தான். இவனுடைய மகள் குந்தவைப் பேரேரியை அமைத்தாள். முதலாம் ராசராசன் உய்யக்கொண்டான்,  கீர்த்திமான் ஆகிய ஆறுகளை வெட்டினான்.

முதலாம் ராசேந்திரன் முடிகொண்டான் ஆற்றையும், விக்கிரம சோழன் விக்கிரமன் ஆற்றையும் வெட்டினான். கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மேற்கே சோழ கங்கம் எனும் பேரேரியை முதலாம் ராசேந்திர சோழன் தன்னுடைய கங்கைப் படையெடுப்பின் வெற்றிச் சின்னமாக அமைத்தான். வீரராசேந்திரன் நீர்பாசன வசதிகளைப் பெருக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்கே கோவிலடிக்கு அருகில் பெரிய அணை கட்டினான். இந்த அணை தஞ்சை தரணிக்கு நீர்வளம் பெருக பெரிதும் பயன்பட்டது. மேலும் கும்பகோணத்திற்கு கிழக்கே மணஞ்சேரிக்கு அருகில் காவிரியிலிருந்து பிரிந்துசெல்லும் வீரசோழன் ஆற்றை உருவாக்கினான். முதலாம் குலோத்துங்கன் தஞ்சைத் தரணியில் பாபநாசம் வட்டம் முனியனூரில் குலோத்துங்க சோழப் பேரேரியை வெட்டினான். காவிரி ஆற்றை பகை அரசன் ஒருவன் அடைத்தபோது அவனை வென்று காவிரியின் அடைப்பை நீக்கி காவிரி நீரை சோழ நாட்டிற்குக் கொண்டுவந்தான் இரண்டாம் ராசராசன். சோழர்கள் காவிரியிலிருந்து பல வாய்க்கால்களை உருவாக்கினார்கள்.

மேலணை அணைக்கட்டு

காவிரி குடகு மலையிலிருந்து பல கிளை ஆறுகளின் நீரை உள்வாங்கி கிழக்கு நோக்கி ஓடிவருகையில் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே திருப்பராய்துறையின் அருகில் உள்ள எலமனூர் என்னுமிடத்தில் காவிரியிலிருந்து கிளை ஆறு கொள்ளிடம் என்கிற பெயரில் பிரிந்து தேவிப்பட்டனம் என்கிற இடத்தில் கடலில் கலக்கிறது. கொள்ளிடமே முதல் முதலாக காவிரியிலிருந்து பிரியும் கிளை ஆறு ஆகும். கொள்ளிடம் பிரிவதற்கு முன்னர் காவிரி அகண்ட காவிரியாக சுமார் ஒரு மைல் அகலமுடையதாக கண்ணுக்கு எட்டிய தூரம் நீர் பரப்பாக காட்சியளிக்கிறது.




1836 ஆம் ஆண்டு சர். ஆர்தர் காட்டன் என்பவர் எலமனூர் எனுமிடத்தில் கொள்ளிடத்தின் குறுக்கே ஓர் அணை கட்டினார். அந்த அணை மேலணை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆணை ஆற்றைக் கடக்கும் பாலமாக நாற்பது அடி அகலமும் ஐம்பத்தைந்து கணவாய் கொண்டதாகவும் உள்ளது. காவிரியின் தென்கிளையாக சுமார் பதினேழு மைல்தூரம் ஓடியபின் வட கிளையாகிய கொள்ளிடம், காவிரியின் அருகில் நெருங்கி ஓடுகிறது. இதனால் காவிரிக்கும் கொள்ளிடத்திற்குமிடையே ஓர் தீவு ஏற்படுகிறது. இத்தீவில்தான் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் என்ற ஊர்கள் உள்ளன.



கல்லணை

காவிரியையும் கொள்ளிடத்தையும் உள்ளாறு என்கிற ஆறு இணைக்கிறது. இங்கு கொள்ளிடத்தின் மட்டம் கவிரியின் நீர் மட்டத்தை விடத் தாழ்வாக உள்ளது. இதனால் காவிரியின் நீர்பெருக்கு முழுவதும் கொள்ளிடத்தில் கலந்து வீணாக ஓடிக் கடலில் வீழ்ந்துகொண்டிருந்தது. இதன் காரணமாக காவிரியின் நீர்ப்பெருக்கை இழந்த தஞ்சைத் தரணியில் உழவுத்தொழில் வளம் குறையவே கரிகால் சோழன் உள்ளாற்றின் குறுக்கே காவிரியின் வடகரையில் மிகப் பெரியதோர் அணையைக்கட்டி காவிரியின் நீர் கொள்ளிடத்தில் பாயாதவாறு தடுத்து திருப்பினான். அவ்வாறு அமைந்த அணையே கல்லணையாகும். அக்காலத்தில் இந்த அணை 1080 அடி நீளமும் 15 முதல் 18 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டதாக வளைந்து பாம்பு போல அமைந்திருந்தது. இது கற்களாலும் களிமண்ணாலும் அமையப்பெற்றது. காவிரிக்கு குறுக்கே அமைந்த அணைகளிலே இதுவே பழமையானதாகும். இந்த அணையைப் பார்த்தே 1836 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் கோதாவரியின் குறுக்கே தவலேசுவரம் அணை கட்டப்பட்டது.

தற்போது காட்சியளிக்கும் கல்லணை கரிகால் சோழன் கட்டியது அல்ல. அவன் கட்டிய அணை காலத்தால் சிதைந்து மணற்மேடுகளால் மூடப்பட்டிருந்திருக்கிறது. 1840 ஆம் ஆண்டு இதே இடத்தில் அணை கட்டுவதற்காக அடித்தளம் தோண்டும்பொழுது அடியில் இதற்கு முன்பு கட்டியிருந்த அணையின் சுவடுகள் தெரியவர அந்த அணை கரிகால்சோழன் கட்டியது என்று தெரியவந்தது. அந்த அணை ‘ப’ வடிவில் கட்டப்பட்டிருந்தது. அந்த அடித்தளச் சுவடுகளை விடுத்து அதற்கும் அருகில் அதே வடிவில் சர். ஆர்தர் காட்டன் பாலத்துடன் கூடிய ஓர் அணை கட்டினார். இந்த அணை ‘கிராண்ட் அணைக்கட்டு’ என்று அழைக்கப்படுகிறது.


கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் என்று நான்கு ஆறுகள் கொண்டதாக இந்த அணை விளங்குகிறது. அணையின் இடதுபுறம் ஒதுங்குவது கொள்ளிடம். இது பரந்த மணற்பரப்பைக் கொண்டது. எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் நீரை வாங்கிக்கொள்ளும் படியான ஆறு அது. நேராக பாய்வது காவிரி. அதையொட்டி வலதுபுறம் கரிகாலச்சோழன் வெண்ணிப் போர் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு வெட்டப்பட்ட ஆறு வெண்ணாறு. இதற்கு வலதுபுறம் பக்கவாட்டிலிருந்து வெட்டப்பட்டது கல்லணைக் கால்வாய். புதுக்கோட்டை நிலப்பரப்பில் கொஞ்சதூரம் பாய்வது இந்த ஆறுதான். இந்த இடத்தில் கரிகாலச் சோழன் அளவிற்கு ஆங்கிலேயர்கள் ஆர்தர் காட்டனும் எல்லீஸ் பிரபும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.



கீழணை

1836 ஆம் ஆண்டு மேலணை, 1840 ஆம் ஆண்டு கல்லணை இரண்டும் கட்டப்பட்டதால் காவிரி பாய்ந்த வடக்குப் பகுதி தண்ணீரில்லாமல் பாழ்ப்பட்டது. ஆகவே 1845 ஆம் ஆண்டு கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்ட மேலணை போன்று காவிரியின் குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டது. அதாவது மேலணைக்கு கிழக்கே 67 மைல் தூரத்தில் கொள்ளிடத்தின் கிழக்கே கீழணை கட்டப்பட்டது. மேலணை போன்றே அமைக்கப்பட்ட இந்த அணை 33 அடி அகலமுள்ள 70 கண்களைக் கொண்டது. இந்த அணையினால் கடலூர் மாவட்டம் பாசன வசதி பெற்றதுடன் தஞ்சையின் வடகிழக்குப் பகுதிகள் வளம் பெற்றன.

மேட்டூர் அணை

சேலம் மேட்டூரில் காவிரி பாயும் இரு மலைகளுக்கிடையில் பொறியாளர் கர்னல் எல்லிஸ் மேட்டூர் அணை கட்டும் திட்டத்தை அரசுக்கு அளித்தார். இந்த திட்டத்தை சென்னை கவர்னர் 20.07.1925 அன்று தொடங்கிவைத்தார். 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை கவர்னர் சர் பிரடெரிக் ஸ்டான்லி இதைத் திறந்துவைத்தார். ஆகவே இது ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.

காவிரியின் கிளை ஆறுகள்

கல்லணையிலிருந்து காவிரியாக ஓடும் ஆறு திருக்காட்டுப்பள்ளி என்னுமிடத்தில் குடமுருட்டி என்ற கிளை ஆறாகப் பிரிந்து மேலும் சென்று கபிஸ்தலம் என்னுமிடத்தில் அரசலாறு என்ற கிளை ஆறாகவும் அடுத்து கும்பகோணத்திற்கும் கிழக்கே மணஞ்சேரி என்னுமிடத்தில் வீரசோழன் ஆறாக பிரிகிறது. தொடர்ந்து கிழக்கே நோக்கி பாய்ந்து திருவாலங்காடு என்னுமிடத்தில் விக்ரமன் ஆறு பிரிகிறது. பிறகு ஓடி தரங்கம்பாடிக்கு வடக்கே பத்துமைல் தூரத்தில் உள்ள பூம்புகார் என்னுமிடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும்முன் மேலையூர் என்னுமிடத்தில் பாசனத்திற்கான கடைசி அணை உள்ளது. காவிரி கடலுடன் கலக்குமிடம் முப்பது அடி அகலமுள்ள ஒரு சிறிய கால்வாய் போன்று காட்சியளிக்கிறது.

காவிரியின் கிளை ஆறுகள்

காவிரி – 75 மைல்,

குடமுருட்டி – 37 மைல்,

அரசலாறு – 44 மைல்,

வீரசோழன் – 52 மைல்,

விக்ரமன் - 9 மைல்,

திருமலைராசன் – 42 மைல்,

முடிகொண்டான் – 29 மைல்,

சோழசூடாமன்னியார் – 9 மைல்,

புத்தார் – 31 மைல்,

வளப்பார் – 21.5 மைல்,

நாட்டார் – 27 மைல்,

வாஞ்சியார் – 12 மைல்,

நூலார் – 9.4 மைல்,

கீர்த்திமனார் – 8 மைல்,

புதுமன்னியார் – 20.6 மைல்,

அய்யாவையனார் – 10 மைல்,

பழவார் – 29 மைல்,

நண்டலார் – 33.3 மைல்,

தெற்குராசன் 25 மைல்,

குமுக்கி மண்ணியார் – 8 மைல்.

இந்த ஆறுகளிலிருந்து ஏ பிரிவு வாய்க்கால்கள் பிரிகின்றன. இதிலிருந்து பி, சி, டி வாய்கால்கள் பிரிகின்றன. மொத்தத்தில் இந்த ஆறு பார்க்க சிலந்தி வலை போல பின்னி நாகை, பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் பாய்ந்து கடலில் கலக்கிறது.

வெண்ணாறு

வெண்ணாறு கரிகால்சோழன் வெண்ணி போர் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு வெட்டிய ஆறாகும். கல்லணையிலிருந்து 17 மைல் ஓடி தென் பெரம்பூரில் வடவாறு, வெட்டாறு என்று பிரிகிறது. மேலும் தொடர்ந்துசென்று நீடாமங்கலத்தில் கோரையாறு, பாமினியாறு என்று பிரிகின்றன.  மேலும் ஏழு மைல் ஓடி திருவாரூருக்கும் அருகில் பாண்டவையாறு என்று பிரிந்து அடுத்தடுத்து வெள்ளையாறு, ஹரிசந்திரா ஆறு என்று பிரிந்து கடலில் கலந்துவிடுகிறது.

கல்லணையிலிருந்து 57 ஆவது மைலில் கோரையாறிலிருந்து ஹரிசந்திர ஆறும் முல்லையாறும் பிரிகின்றன. முல்லையாற்றிலிருந்து அடப்பார், அய்யனார், மரக்கா கோரையாறுகள் பிரிகின்றன. வெட்டாற்றிலிருந்து ஓடம்போக்கி ஆறும், அதிலிருந்து கருவையாறும் பிரிகின்றன. இவைத்தவிர காட்டுவாரி, தென்பாறை வடிகால், காட்டுவாய்க்கால் போன்ற வடிகால் ஆறுகள் கிளைகளாக உள்ளன.

வெண்ணாறும் அதன் முக்கிய கிளை ஆறுகளும்

 வெண்ணாறு – 70 மைல்,

வெட்டாறு – 63 மைல்,

வடவார் – 18 மைல்,

பாமினியாறு - 33 மைல்,

கோரையாறு – 41.4 மைல்,

ஹரிசந்திரா நதி – 25 மைல்,

அய்யனார் – 5.4 மைல்,

அடப்பார் – 25 மைல்,

ஓடம் போக்கி – 24 மைல்,

கடுவையாறு – 26 மைல்,

காட்டாறு – 10 மைல்,

வெள்ளையாறு – 23 ,

கல்லனாறு – 18 மைல்,

பாண்டவயாறு – 24.3 மைல்,

முல்லியாறு - 27 மைல்,

ஜி.ஈ. கால்வாய் – 50 மைல்

வெண்ணாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட நிலங்களை வளப்படுத்துகின்றன.

கல்லணைக் கால்வாய்



கல்லணையில் காவிரி பிரிந்து கல்லணைக் கால்வாய் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓடி பாசனத்திற்குப் பயன்படும் இக்கால்வாய் 1927 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட ஆறாகும். மொத்தம் 147 கிலோ மீட்டரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 கிலோ மீட்டரும் ஓடி மணமேல்குடிக்கும் அருகில் வெள்ளாறு கடலில் கலக்குமிடத்திற்கு அருகில் உள்ள மும்பாலை ஏரியில் கலந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கிறது. கல்லணைக் கால்வாய் மக்களால் ‘புதுஆறு’ என்று அழைக்கப்படுகிறது. இக்கால்வாயிலிருந்து இரு கால்வாய்கள் கே.பி கெனால், ஆர்.பி கெனால் என்கிற இரு  ரெகுலேடர் அணை மூலம் பிரிக்கப்படுகின்றன.  இக்கால்வாயிலிருந்து 327 கிளை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இந்தக் கால்வாய்கள் பாசனத்திற்காக பயனிக்கும் தூரம் 1232 கிலோ மீட்டர்.

தரைக்கு மேல் காவிரி

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குத் தென்புறம் தரையை ஆழத்தோன்றி கல்லணைக் கால்வாய் கொண்டுவரப்படுகிறது. ஆறு தரை மட்டத்திற்கும் கீழ் பல அடி ஆழத்தில் பாய்வதைப் பார்க்கலாம். இந்த ஆற்றை இவ்வளவு ஆழத்தின்கீழ் கொண்டுசென்றதன் மூலமே புதுக்கோட்டை மாவட்டம் வெட்டுவாக்கோட்டை பகுதி வழியே தஞ்சை மாவட்டப் பகுதிக்கு தண்ணீர்க் கொண்டுசெல்ல முடிந்தது. இங்கு சமநிலை என்பது ஆழம் = உயரம். கல்லணைக் கால்வாயின் வியப்பான தொழிற்நுட்பம் இது.

கல்லணைக் கால்வாயிலிருந்து பிரியும் முக்கிய கிளை வாய்க்கால்கள்

சக்கரா வாய்க்கால் – 6.24 கி.மீ,

என்.டி. வாய்க்கால் – 18.50 கி.மீ,

வி.வாய்க்கால் – 16.50 கி.மீ,

கே.பி. கால்வாய்- 29.00 கி.மீ, 

ஆர். பி கால்வாய் – 10 கி.மீ,

உளவயல் – 27.50 கி.மீ,

அக்ரவாட்டம் – 2.55 கி.மீ,

அலிவலம் வாய்க்கால் – 12.25 கி.மீ,

காயாவூர் வாய்க்கால் – 8.63 கி.மீ,

நடுவிக்கோட்டை வாய்க்கால் – 4.23 கி.மீ,

பண்ணைவயல் வாய்க்கால் – 8.30 கி.மீ,

புதுப்பட்டிணம் வாய்க்கால் – 5.30 கி.மீ,

சேதுபாவா சத்திரம் வாய்க்கால் – 15.84 கி.மீ,

ஆனந்த வல்லிபுரம் வாய்க்கால் – 14.38 கி.மீ,

கழனிவாசல் – 1.57 கி.மீ, 

பின்னவாசல் வடபாதி வாய்க்கால் – 3.39 கி.மீ,

பின்னவாசல் தென்பாதி வாய்க்கால் – 3.33 கி.மீ,

சொர்ணக்காடு வாய்க்கால் – 0.7 கி.மீ,

ஆயங்குடி வாய்க்கால் – 3.60 கி.மீ,

அம்மணி சத்திரம் வாய்க்கால் – 12.25 கி.மீ,

அன்னவயல் வாய்க்கால் – 25.64 கி.மீ,

திருவப்பாடி வாய்க்கால் – 13.23 கி.மீ,

கலக்கமங்கலம் வாய்க்கால் – 9.73 கி.மீ,

சிறுமருதூர் வாய்க்கால் – 4.12 கி.மீ,

குலமங்களம் வாய்க்கால் – 10.00 கி.மீ,

பருத்திக்கோட்டை வாய்க்கால் – 7.00 கி.மீ,

மேலவன்னிப்பட்டு வாய்க்கால் – 9.00 கி.மீ,

திருமங்கலகோட்டை வாய்க்கால் – 5.00 கி.மீ,

வடகாடு வாய்க்கால் – 17.00 கி.மீ

கல்லணை கால்வாயிற்கிடையில் குறுக்கே பல காட்டாறுகள் குறுக்கிடுகின்றன. சோழகம்பட்டிவாரி, முதலை முத்துவாரி, வல்லம் வாரி, மகாராஜா சமுத்திரம் ஆறு, அக்கினி ஆறு, வில்லுளியாறு, அம்புலியாறு, மருதன்குடியாறு, முடியனாறு, நரசிங்க காவிரி ஆகியன.

புதுக்கோட்டைக்கு காவிரி கொண்டுவரும் முயற்சிகள்

      இத்தகைய கிளைகளும் சிறப்புகளும் கொண்ட காவிரியை புதுக்கோட்டைக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. புதுக்கோட்டை சமஸ்தான அரசு பிரிட்டிஷாரின் நம்பிக்கைக்குரிய அரசாக இருந்த போதிலும் புதுக்கோட்டைக்குள் காவிரி கொண்டுவருவதில் பல்வேறு சாதக வாய்ப்புகள் இருந்தும் புதுக்கோட்டையின் பொருளாதார நிலையால் அத்திட்டம் தொடர் தோல்வியடைந்தது.

மன்னரும் அன்றைய கால பிரச்சனையும்

புதுக்கோட்டைக்குள் காவிரி நீர் கொண்டுவரும் முதல் முயற்சி 1837 ஆம் ஆண்டு தொடங்கியது. இது காவிரியின் குறுக்கே மேலணை கட்டப்பட்டக் காலமாகும். இந்தக் காலக்கட்டத்தில் புதுக்கோட்டையின் மன்னராக இருந்தவர் ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் ( 1825 -1839) ஆவார்.  இவர் புதுக்கோட்டையின் ஆறாவது மன்னராவார். இவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான். அவர் ஆட்சியில் இருக்கையில் இறந்துவிட ஆண் வாரிசு இல்லை என்பதால் அவரது தம்பி ராஜா ரகுநாத தொண்டைமான் ஆட்சிக்கு வந்தார். பகதூர் என்பது ஆங்கிலேயர் கொடுத்த பட்டம்.

இவர் ஆட்சிக்காலத்தில் இறந்த அண்ணனின் பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு இறந்த மன்னரின்  நினைவாக இரண்டு அக்ரகாரங்களை உருவாக்கினார். புதுக்கோட்டை நகருக்கும் கிழக்கே நான்கு மைல் தொலைவில் ஒரே அளவுகள் கொண்ட இருபது வீடுகள் கட்டி அதற்கு விஜயரகுநாதபுரம் என்று பெயர்ச்சூட்டினார். மேலும் பிராமணர்ளுக்கு நிலங்கள் வழங்கினார். பிறகு தனது பெயரும் காலத்தால் நிலைத்து நிற்கும்படியாக கடையக்குடி அக்ரஹாரத்திற்கும் எதிரே வெள்ளாற்றின் வடக்குக் கரையில் மற்றொரு அக்ரஹாரம் உருவாக்கி ‘பிரசன்னா – ரகுநாதபுரம்’ உருவாக்கினார். இவரது ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் அரசுகளுக்கிடையில் எல்லை பிரச்சனை உருவானது. இந்தப் பிரச்சனை நடுவர் மன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ளப்பட்டது. 

இவரது ஆட்சிக் காலத்தில் திருச்சிராப்பள்ளிக்கும் அருகில் கொடுமுடியிலிருந்து குளத்தூர் வழியே புதுக்கோட்டைக்குத் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டு இதற்கான கருதுகோள் மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. புதுக்கோட்டையைத் தவிர சுற்றியுள்ள பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால் சேலம், திருச்சி, தஞ்சாவூர் வரைக்கும் காவிரிப் பாதையைப் ஆழப்படுத்தி காவிரி நீர் கொண்டு வரும் செலவீனத்தை மெட்ராஸ் ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், புதுக்கோட்டை எல்லைக்குள் ஆகும் செலவை புதுக்கோட்டை சமஸ்தானம் ஏற்றுக்கொள்ளுமென்றும் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேய அரசுக்கு தெரிவித்தது. இந்த வரைவுக்கு ஆங்கிலேய அரசு ஆர்வம் காட்டவில்லை. இதற்கான மொத்த செலவீனத்தையும் புதுக்கோட்டை தனியரசு ஏற்கவேண்டுமென ஆங்கிலேய அரசு கேட்டுக்கொண்டது. இதன் திட்டச் செலவு அப்போதைய நிலைக்கு ஒரு கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. இது அறந்தாங்கி நீங்கலான உத்தேச செலவு. இவ்வளவு தொகை அன்றைய சமஸ்தான வரவு செலவுக்கு அப்பாற்பட்டது என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இரண்டாம் முயற்சி ( 1906 -07 )

தமிழகம் முழுவதும் 1906 - 07 ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. இக்காலத்தையொட்டி ஆங்கிலேய அரசு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர்பாசன வசதிக்காக காவிரி தண்ணீர்க் கொண்டுவர ஏழு திட்டங்கள் வகுத்தது. இத்திட்டங்களின் மூலம் புதுக்கோட்டைக்குப் பயன் ஏதும் கிட்டுமா என்று பரிசீலனைச் செய்தது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டைக்குக் காவிரி கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. அதாவது பெரியாறு, பவானி மற்றும் அமராவதி ஆறுகளிலிருந்து நீர் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டது. அடுத்ததாக நெருஞ்சிப்பட்டு அணையிலிருந்து 130 மைல்கள் நீளம் கால்வாய் அமைத்து காவிரி நீரை கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதன் அன்றைய மதிப்பு 2.78 கோடி என வரையறுக்கப்பட்டது. இத்திட்டமும் பொருளாதார காரணங்களால் கைவிடப்பட்டது.

நெரிஞ்சிப்பேட்டை நீர்த்தேக்கத் திட்டம்

1906 -07 ஆம் ஆண்டில் காவிரித் திட்டத்தைத் தவிர்த்து பெரியாறு, பவானி, அமராவதி போன்ற நதிகளில் பல்வேறு ஏழு திட்டங்கள் ஆராய்ந்து பார்க்கப்பட்டு அந்த வழிகள் சாதகமாக இல்லாததால் அத்திட்டமும் கைவிடப்பட்டது. பிறகு நெரிஞ்சிப் பேட்டை நீர்த்தேக்கத்திலிருந்து 130 மைல் நீளத்தில் ஒரு வாய்க்கால் 2.78 கோடி ரூபாய் செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. இது கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் வாய்க்காலுக்கு இணையாக, ஆனால் அதற்கு உயரமாக ஓடி நொய்யல் ஆற்றையும் அமராவதி ஆற்றையும் அணைக்கட்டுகளினால் தாண்டிச் செல்லவேண்டும் என்பது இத்திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆலங்குடி வட்டத்தில் பரந்த நிலங்கள் இதன்கீழ் வரக்கூடும் என 1910 ஆம் ஆண்டு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

மைசூர் – சென்னை மாகாண அரசு இடையே பிரச்சனை

1913 ஆம் ஆண்டு காவிரி ஆற்றுக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இந்த ஆண்டு காவிரி தோன்றும் மைசூர் நாட்டிற்கும் காவிரி பாயும் சென்னை மாகாணத்திற்குமிடையே இருந்துவந்த நீர் பங்கீட்டு ஒப்பந்தம் பிரச்சனையானது. இதைத் தீர்த்துக்கொள்ள பிரிட்டிஷ் அரசு ‘கிரிபின்’ என்பவரை மத்தியஸ்தராக நியமித்தது. கிரிபின் தனது அறிக்கையை 1916 ஆம் ஆண்டு அளித்தார். இந்த அறிக்கையை சென்னை மாகாண அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஆகவே சென்னை மாகாண அரசு இந்திய பிரிட்டிஷ் அரசிடம் மேல்முறையீடு செய்தது. இதன்பிறகு 1924 ஆம் ஆண்டு ஐம்பது ஆண்டுகள் நடைமுறையிலிருக்கும்படியாக மேலுமோர் ஒப்பந்தம் செய்துகொண்டு காவிரி நீரை பங்கீடு செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் 1892 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் நீட்சியாகும்.

மூன்றாம் முயற்சி:  கல்லணைக் கால்வாய் காலம்

       கல்லணைக் கால்வாய் 1927 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சில நிலப்பகுதியின் வழியே தஞ்சாவூர்ப் பகுதிக்கு காவிரி நீர் கொண்டுவருகையில் ஆலங்குடி தாலுகா கரம்பக்குடி பகுதியில் சுமரா் 8000 ஏக்கர் பாசனம் பெற திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளிடம் தண்ணீர் தீர்வையை சென்னை மாகாண அரசு நேரயாக வசூல் செய்துகொள்ளுமென நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து புதுக்கோட்டை தனியரசு இத்திட்டத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டது.

அலெக்சாண்டர் டாட்டன்ஹாம் எடுத்த முயற்சி



அலெக்சாண்டர் டாட்டன்ஹாம் புதுக்கோட்டையில் ஆட்சியாளராக இருந்த பொழுது 1934 - 35 ஆம் ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. இந்த வறட்சியைச் சுட்டிக்காட்டி கரம்பக்குடிக்கும் அருகில் ஓடும் மேட்டூர் கால்வாயிவிருந்து ஏதாவது ஒரு சாதகமான இடத்திலிருந்து முடிந்த அளவு தண்ணீர் வழங்க வேண்டுமென ஆங்கிலேய அரசுக்கும் மைசூர் அரசுக்கும் கடிதம் வாயிலாக டாட்டன்ஹாம் கேட்டுக்கொண்டார். சென்னை அரசின் வருவாய் உறுப்பினர் சி.ஏ. சொவடருக்கு எழுதப்பட்ட 11.05.1935 ஆம் தேதிட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதினார். "நாங்கள் முற்றிலுமே நிலையற்ற மழைநீரை நம்பியிருக்கிறோம். நன்செய் நிலங்களில் ஒரு சிறிய பரப்பிற்காயினும் உறுதியாய் வரக்கூடிய நீர்ப்பாசனம் கிடைக்குமெனில் அதுவே ஒரு தற்பேறாகக் கொள்வோம்."

சென்னை அரசு எழுதிய பதில்

மேட்டூர் கால்வாயிலிருந்து புதுக்கோட்டைப் பகுதிக்கு தண்ணீர் எதுவும் கொடுக்க இயலாது என சென்னை அரசாங்கம் தெரிவித்ததோடல்லாமல் கீழ்க்கண்ட கருத்துகளையும் தெரிவித்தது.

1.   கரூரில் பாயும் அமராவதி ஆறு காவிரியுடன் கட்டளைக் கால்வாயில் கலக்கிறது. கட்டளைக் கால்வாய் அதனுடைய பாசனப் பரப்புக்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளது. இதை புதுக்கோட்டை அரசு எல்லைக்கு கொண்டுசெல்வதாக இருந்தால் இந்தக் கால்வாயை 25 மைல் நீளம் நீட்டித்து புதுக்கோட்டை ஆயக்கட்டுப் பரப்புக்கு ஏற்றவாறு அகலப்படுத்த வேண்டும். இத்திட்டம் அதிகம் செலவு பிடிக்கும் என்பதால் கட்டளைக் கால்வாய் வழியே தண்ணீர் கொண்டுவருவது எளிதான விசயமன்று.



2.   உளவயல் கால்வாயிலிருந்து பாயும் தண்ணீரில் 3,01,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மட்டுமே பாசன வசதி செய்துகொள்ள மைசூர் அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்குமேல் ஆயக்கட்டுப் பகுதியை விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் புதுக்கோட்டைப் பகுதிக்கு உளவயல் கால்வாயிலிருந்து தண்ணீர்கூட கொடுக்க இயலாது.

ஆங்கிலேய அரசு கொடுத்த இந்த இரண்டு விளக்கங்கள் புதுக்கோட்டை சமஸ்தான அரசுக்கு ஏமாற்றமளித்தது.

புதுக்கோட்டை சட்டமன்ற விவாதமும் பதிலும்

புதுக்கோட்டைக்கு காவிரி தண்ணீர் கொண்டுவருவது குறித்து மக்களின் உள்ளக் கிடக்கையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட பிரதிநிதிகள் சபையில் பிரதிபலித்து வந்தார்கள். இதுதொடர்பாக புதுக்கோட்டை சட்டமன்றத்தில் 1928, 1930, 1936, 1938, 1945 ஆம் ஆண்டுகளில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. கீழ்காணும் இந்த விவாதம் 1945 ஆம் ஆண்டு முதலாவது கவுன்சிலராக கலிபுல்லா சாகிப் இருந்தபோது நடைபெற்றது.

கைலாச அம்பலகாரர்: காவிரி நீர் தேவை அவசியத்தை நீங்கள் சிறிய பிரச்சனையாகவும் பெரிய  பிரச்சனையாகவும் பார்க்கலாம். இது அவரவர் மனப்போக்கை பொறுத்தது. புதுக்கோட்டையில் ஜனவரி மாதத்திலிருந்து நான்கு மாதங்களாக மழை இல்லை. விவசாயம் செய்ய தண்ணீர் அவசியம்.

கரூர் கட்டளை என்கின்ற கிராமத்திற்கு அருகில் அமராவதியும் காவிரியும் சேருமிடத்தில் தொண்டைமான் கால்வாய் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கால்வாயிலிருந்து திவான் பகதூர் சாமிநாத ஐயர் உய்யகொண்டான் வரை தண்ணீர் கொண்டுவர முயற்சித்தார். அந்த முயற்சியை இன்றைய அரசு தொடரலாம்.

நாராயண அய்யங்கார்;  "நமது சட்டசபையில் வெகு காலமாக புதுக்கோட்டைக்குக் காவிரி கொண்டுவரும் பொருட்டு தீர்மானங்கள் இயற்றிவருகிறோம். ஆனால் இந்தத் திட்டம் கைக்கூடி வரவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற நாம் பாடுபட வேண்டும்."

பாலகிருஷ்ண சேர்வைக்காரர்: " திவானும் முதல் கவுன்சிலரும் காவிரி நீருக்காக பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார்கள்.  காவிரி நீர் கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து போராட வேண்டும்."

சுல்தான் ராவுத்தர் : " காவிரி நீர் புதுக்கோட்டைக்கு கொண்டுவரும் முயற்சி எடுங்கள். அதற்கான முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்."

நாராயண அய்யங்கார் : “காவிரி நீர் மட்டும் நம்முடைய சமஸ்தானத்துக்கு வந்துவிட்டால் சோழ தேசத்தை விடவும் நமது நிலங்கள் பெரும் பலனடையும்."

அருணாச்சல அம்பலகாரர் : “எலெக்ட்ரிக் லைட் நமது சமஸ்தானத்துக்கு வருமோ வராதோ என்று பயந்துகொண்டிருந்தோம். ஆனால் எலக்ட்ரிக் லைட் வந்துவிட்டது. அதேபோல் ரயில் வருமா வராதா என்று எதிர்பார்த்தோம். அதுவும் வந்துவிட்டது. இதேபோல் காவிரியும் நிச்சயம் ஒரு நாள் வரத்தான் போகிறது. இந்த தர்பார் காலத்திலேயே வந்தால் நன்றாக இருக்கும். இப்பொழுது இங்கே இருக்கும் திவான் டாட்டன் ஹாம் அவர்களும் முதலாவது கவுன்சிலரும் நினைத்தால் நிச்சயமாக புதுக்கோட்டைக்குக் காவிரி நீர் கொண்டுவர முடியும். அப்படி கொண்டு வந்தால் இந்த தர்பாருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

முதலாவது கவுன்சிலர் கலிபுல்லா சாகிப் பதில் : 



நான் இங்கு வந்த காலத்திலேயே காட்டாத்தி ஊர்ப் பக்கத்தில் ஓடும் கால்வாயிலிருந்து கரம்பக்குடி பகுதிக்கு காவிரி நீர் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். இதுகுறித்து மதராஸ் கவர்மெண்டாரிடம் பேசினேன். அவர்கள் ஒரு ஏக்கருக்கு பத்து ரூபாய் நிலவரி கொடுத்தால் கரம்பக்குடி பகுதிக்கு தண்ணீர் தரமுடியும் என்று சொன்னார்கள். பிறகு ஏழு ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொன்னார்கள். ஆனால் நம்முடைய ஆயகட்டுதாரர்களும் விவசாயிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் நினைத்தால் ஆயகட்டுதாரர்களும் விவசாயிகளும் கட்டாயம் பணம் செலுத்த வேண்டுமென சொல்லியிருக்க முடியும். ஆனால் விவசாயிகளின் அபிப்பிராயத்தை கேட்டுதான் எதையும் செய்ய முடியும் என்று ஆயகட்டுதாரர்களிடம் பேசி நல்ல முடிவுக்கு வர முகமது சுல்தான் ராவுத்தர் அவர்களை பணித்தோம். அவரும் ஆயகட்டுதாரர்களிடம் பேசினார். விவசாயிகள் ஏழு ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவதில் பிரயோஜனமில்லை என்று விவசாயிகள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அப்படியாகச் சொன்னதில் விவசாயிகள் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டேன்.

இப்பொழுது சொல்கிறேன் நம்முடைய சமஸ்தானதிற்கு மேட்டூர் வாய்க்காயிலிருந்து வெறும் 150 ஏக்கர் அளவிற்குத்தான் தண்ணீர் கிடைக்கிறது. காவிரி நீரை புதுக்கோட்டைக்கு முழுமையாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்களைப் போல நானும் விரும்புகிறேன். அதேநேரத்தில் பட்டுக்கோட்டைக்கு காவிரி தண்ணீரை கொண்டு போகிற திட்டம் இருந்தது. அதுவும் தற்பொழுது கைவிடப்பட்டு விட்டது. எனவே அதிகபட்சமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தோடும் மைசூர் அரசாங்கத்தோடும் போராடி வாதாடி எப்படியாவது தண்ணீர் கொண்டுவர நாங்கள் முயற்சிக்கிறோம்.

தொண்டைமான் கால்வாய் எப்பொழுது வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. திருச்சி தாலுகாவில் பல இடங்களில் நமது சமஸ்தான அரசர்  குடும்பத்தினரின் சொந்தக்காரர்கள் இருப்பதால் அப்படியான ஒரு முயற்சி நடந்து இருக்கலாம். எனவே இப்போதுள்ள நிலைமையில் அந்தக் கால்வாயிலிருந்து தண்ணீர்க்கொண்டுவர சாத்தியமிருக்கிறதா என்று பார்க்கலாம். இன்றிலிருந்து முயற்சித்தால் பத்து ஆண்டுகளுக்குள் புதுக்கோட்டைக்குத் தண்ணீர் கொண்டுவந்துவிட முடியும். அதற்கான முயற்சியை நாங்கள் இப்பொழுது எடுக்கிறோம். எனவே ஜனங்கள் என்ன விரும்பினார்களோ அதை செய்வதற்கு நானும் திவான் டாட்டன் ஹாம் அவர்களும் தயாராக இருக்கிறோம்."

இந்திய யூனியனுடன் இணைந்தப் பிறகான முயற்சிகள்

புதுக்கோட்டை தனியரசு இந்திய யூனியனுடன் 1948 ஆம் ஆண்டு இணைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு காவிரி நீர் கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு கோட்டமாக இருந்தது. ஆலங்குடி வட்டத்திலுள்ள ஏறத்தாழ 2300 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் கிடைக்குமாறு உளவியல் வாய்க்கால் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டம் 1950 ஆம் ஆண்டில் ஒப்பளிப்புப் பெற்றது. இதற்குமேல் எதுவும் செய்யமுடியவில்லை. காரணம் இரு கர்நாடகம்- தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கிடையே உள்ள ஆற்றின் தற்காலத்து ஆயக்கட்டு நிலைகளின் பாசனத்தைப் பராமரித்தலில் பிரச்சனைகள் எழுந்தன.

கரம்பக்குடி டெல்டா பகுதியா?

தற்போது உளவயல் கால்வாயிலிருந்து கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள், கரம்பக்குடி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் பாசனம் வசதி பெறுகின்றன. கரம்பக்குடி தாலுகாவில் காவிரி பாயும் முதலிப்பட்டி, செங்கமேடு, ஒடப்பவிடுதி, வாண்டான்விடுதி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பாப்பாப்பட்டி, கீராத்தூர், காட்டாத்தி, கல்விராயன்விடுதி, தீத்தான்விடுதி, குழந்திரான்பட்டு ஆகிய பதினொரு ஊராட்சிகள் கல்லணைக் கால்வாய் மூலமாக பாசன வசதிபெறுகின்றன. ஆயினும் தஞ்சாவூர் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் இப்பகுதி விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே இப்பகுதியை காவிரி பாசனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துவருகிறது.

மேலும் கல்லணை கால்வாய் மூலமாக அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஒன்றியங்களில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்கள் கடைமடை என்பதால் பல நேரங்களில் காவிரி நீர் கிடைப்பதில்லை.

காவிரி உபரிநீர் போராட்டம்

 காவிரி உபரிநீரைப் புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கொண்டுவரும் முயற்சியின் தொடர்ச்சியாக 1981 ஆம் ஆண்டு மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. கே.எஸ். அழகிரிசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் மண்வெட்டி கூடைகளுடன் கலந்துகொண்டார்கள். காவிரி ஆறு கர்நாடகம் மாநிலத்திலிருந்து ஒகேனக்கல் அமைந்த தர்மபுரி மாவட்ட பெண்ணாகரம் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன் புதுக்கோட்டை வருகைதந்து போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். திருச்சி மாவட்ட குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா போராட்டக்காரர்களை வரவேற்று கால்வாய் அமைக்கும் வழிகளைக் கூறினார். அன்று போராட்த்தில் கலந்திருந்த அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்

1933 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நிர்வாக அலுவலராக இருந்த அலெக்ஸாண்டர் டாட்டன்ஹாம் தென்துறை கால்வாய் திட்டம் என்கிற பெயரில் கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து விராலிமலை வழியாக 70 கி.மீ திறந்தவெளி கால்வாய் அமைத்து இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 5000 குளங்கள் மூலம் சுமார் 2,00,000 ஏக்கர் (80,000 ஹெக்டர்) நிலங்களுக்குப் பாசனம் செய்யும் வரைவுத்திட்டம் வகுத்தார். இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தி கால்வாய் வெட்டும்பணி தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்து புதுக்கோட்டையின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துச்சாமி வல்லத்தரசு 1954  ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.  இதையடுத்து 1958 ஆம் ஆண்டு காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றத் திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல்வர் காமராசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.



இத்திட்டம் தற்போது உயிர்ப்பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த ஆட்சியின் கடைசி காலத்தில் 2021 ஆம் ஆண்டு காவிரி – வைகை- குண்டாறு திட்டத்திற்கு குன்னத்தூரில் வைத்து பிரமாண்ட விழாவுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. 27 தாலுகாக்களை உள்ளடக்கி 227 கிலோ மீட்டர் திறந்தவெளி கால்வாய் அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் காவிரி ஆற்றில் கதவணையும் அங்கிருந்து 256 கி.மீக்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் கதவணையிலிருந்து 70 கி.மீ தென்கிழக்கு திசையில் செல்லும். அதன்பின் வலது பக்கம் திரும்பி தென்மேற்கில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாற்றில் இணையும். இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு. அக்கினியாறு, கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழியாறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என பதினைந்து நதிகள் இணைக்கப்படும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு, “ காவிரியின் உபரிநீரை தமிழகம் பயன்படுத்த உரிமையில்லை” என்று எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி – வைகை- குண்டாறு திட்டம் நிறைவேறினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் ஆகிய வட்டங்கள் நீர்ப்பாசனம் பெறும். மேலும் கரூர், திருச்சி, சிவகங்கை. இராமநாதபுரம், விருதுநகர் , தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர்த் தேவை நிவர்த்தியாகும்.

புதுக்கோட்டைக்குக் காவிரி கொண்டுவரும் முதல் முயற்சி 1837 ஆம் ஆண்டு தொடங்கியது. நூற்றி எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இம்முயற்சி நீண்டுக்கொண்டிருக்கிறது. ‘வான் பெய்யாது பொய்த்தாலும் தான் பொய்க்காது சிறப்புடையது’  காவிரி. ஆற்றுப் பெருக்காலும் தன் ஊற்றுப்பெருக்காலும் நிலம் காக்கும் காவிரியைப் புதுக்கோட்டைக்குள் வரவேற்க விவசாயிகள் கையில் விதையுடன் காத்திருக்கிறார்கள். நடந்தாய் வாழி காவிரி!



கட்டுரையின் ஆதாரங்கள்

1.   இந்திய அரசிதழ், தமிழ்நாடு

2.   புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றுஆவணக்குழு செய்தி மலர் ஆகஸ்ட் 1989

3.   புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு மலர் – 2003

4.   நெஞ்சையள்ளும் தஞ்சை – நா. எத்திராஜ்

5.   Manual of the pudukkottai state – K.R. Venkatarama Ayyar

6.   மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும் – கே.எம்.சரீப்

7.   தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடிகள்


கருத்துகள்

  1. சிறுநூலாகவே வரவேண்டிய கட்டுரை. ஏராளமான தகவல்! பிற்பகுதியில் இன்றைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பார்க்க வேண்டிய தகவல்கள்! காவிரி ஆறு திசை மாறிய அந்த நான்கு திசை களைப் பற்றியும் எழுதுங்கள் சுரா! இனிய வாழ்த்துகள் 👍🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...