புதுக்கோட்டை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என்று ஐந்திணைகளைக் கொண்ட நிலப்பகுதி. ஆயினும் முல்லை நிலத்தைப் பெரும்பகுதியாகக்
கொண்டது. சமஸ்தான கால புதுக்கோட்டையில் மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு காடுகளாலானது. இங்கு பெரிய, சிறிய காடுகளாக அறுபது
காடுகள் இருந்துள்ளன. இவற்றில் பெரியவளைக்காடு, சின்னவளைக்காடு, வாராப்பூர், சங்கிலியான்கோட்டை
காடுகள் முக்கியமானவை. புதுக்கோட்டையை மக்கள் வனக்கோட்டை என்று அழைத்திருக்கிறார்கள்.
சங்க இலக்கியம் கூறும் காடு
புதுக்கோட்டையில்
பாயும் வெள்ளாற்றின் தென்பகுதி கானாடு என்று அழைக்கப்பட்டது. கானாடு பற்றி சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. புறநானூறு 150 ஆவது பாடல் குறிப்பிடும் “காட்டு நாட்டோம்”
என்கிற வரியும் நற்றிணை 59 ஆவது பாடல் குறிப்பிடும் “வன்புலக் காட்டு நாட்டதுவே” என்கிற
வரியும் இன்றைய புதுக்கோட்டை பகுதியைக் குறிப்பிடும் வரிகள். காட்டு நாடு என்பதே கானாடு.
இந்நிலம் பெரும் உட்பிரிவுக் கொண்டு கோனாடு ஆனது. பிறகு கானாடு என்பதன் எல்லை சுருங்கி
கோனாடு பெரும் பரப்பானது. கோனாடு வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சோழவளநாடு, ஜெயசிங்ககுலவளநாடு,
பாண்டிக்குலாசனி வளநாடு,…இப்படியாக. பிறகு இப்பகுதி கானாடு பனங்காட்டு நாடு, செங்காட்டு
நாடு ஆகின. பனங்காட்டு நாடு வட பனங்காட்டு நாடு, தென் பனங்காட்டு
நாடு ஆகின.
புதுக்கோட்டை
சமஸ்தானக் காலத்தில் நாட்டின் பெரிய காடுகளாக பெரியவளைக்காடு, சின்ன வளைக்காடுகள் இருந்தன. பெரிய வளைக்காடு நகரத்தின்
மேற்கிலும் சின்ன வளைக்காடு நகர்த்தின் வடக்கிலும் இருந்தன. இதன் சுற்றளவு 14 சதுர
மைல்கள். இதுதவிர 17 சதுர மைல் சுற்றளவு கொண்ட செங்கரைக்காடு பெரிய காடுகளில் ஒன்றாகும்.
புல்வயல்,
வயலோகம், பரம்புக்காடு, நார்த்தாமலைக்காடு,
திருவரன்குளம், வாராப்பூர், சக்கிலியன்கோட்டை ஆகிய பகுதிகள் சிறிய பரப்பு கொண்ட
காடுகளாகும். இதுதவிர பிரான்மலை, அம்மன்குறிச்சி, சோத்துப்பாளை, லெம்பலக்குடி, கண்ணூர்,
கோனபட்டு, இரும்பநாடு, வெண்ணாவல்குடி, ஆதனக்கோட்டை,
கிள்ளுக்கோட்டை, பெரம்பூர் ஆகிய ஊர்கள் காடுகளால் சூழப்பட்டதாகும்.
வனச்சட்டத்தில் இணைந்த புதுக்கோட்டை
1882 ஆம் ஆண்டு மதராஸ் வனச்சட்டம்
நிறைவேற்றப்பட்டது. ஜுலை 6,1882 தேதியிட்ட ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் சிறப்பு அரசிதழில்
இந்த சட்டம் குறித்த அறிவிப்பு வெளிவந்தத.
சட்ட எண் V/1882 என்று அழைக்கப்பட்ட இச்சட்டம் 1882 ஆம் ஆண்டு செப்டம்பர்
19 இல் ஆளுநருடைய ஒப்பளிப்பையும் 1882 அக்டோபர் 11 இல் ஆளுநர் தலைவர் (
Governer - General) ஒப்பளிப்பையும் பெற்று 1883 ஆம் ஆண்டு ஜனவரி முதல்
தேதியன்று அமலுக்கு வந்தது.
சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு
புதுக்கோட்டை இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதன் பிறகு தமிழ்நாடு சட்டம் XXXV/
1949, 3 ஆவது பிரிவு மற்றும் முதலாவது இணைப்புப் பட்டியல் மூலம் இணைந்தது.
தமிழ்நாடு வனச்சட்டம் ( திருத்தம்)
இன்படி, மரம் என்பது தறித்த மரத்தின் அடிக்கட்டைகளையும் மூங்கில்களையும் புதர்ப் பூண்டுகளையும் உள்ளடக்கியதாகும். வெட்டுமரம் என்பது வீழ்த்திருக்கிற
அல்லது வீழ்த்தப்பட்டிருக்கிற மரங்களையும் எல்லா மரக்கட்டைகளையும் உள்ளடக்கியதாகும்.
காட்டு
விளைபொருட்கள்
காட்டில் காணப்படும் காட்டிலிருந்து
கொண்டுவரப்படும் பொருட்கள் யாவும் காட்டின் விளைபொருளாகும். சுண்ணாம்புக் கல்லும் சங்கட்டுக்
கல்லும் உள்ளடங்கலாக கனிப்பொருட்கள், மேற்பரப்பு மண், மரங்கள், வெட்டுமரம், செடிகள்,
புல், கரித்துண்டு, பிரம்புகள், படர்கொடிகள், நாணல்கள், நார்கள்,இலைகள், பாசி, மலர்கள்,
கனிகள், விதைகள், வேர்கள், கரணைகள், வாசனைச் சரக்குகள், சாறு, கட்டெச்சூ, மரப்பட்டை,
பக்குவப்படுத்தப்படாத ரப்பர், கோந்து, மர எண்ணெய், மரப்பிசின், மெருகெண்ணெய், அரக்கு,
மரக்கரி, தேன், மெழுகு, தோல்கள், தந்தங்கள், எலும்புகள் மற்றும் கொம்புகள் யாவும் காட்டு
விளைபொருட்களாகும்.
கால்நடைகள்
கால்நடைகள் என்பது யானைகள், ஒட்டகங்கள்,
எருமைகள், ஆண் குதிரைகள், பெண் குதிரைக்குட்டிகள், பெண் குதிரைக்குட்டிகள், கோவேறு
கழுதைகள், கழுதைகள், பன்றிகள், செம்மறி ஆடுகள், செம்மறி ஆட்டுக்குட்டிகள், வெள்ளாடுகள்
மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளாகும்.
காடுகள் முதல் கணக்கெடுப்பு
1860 ஆம் ஆண்டு பிரிட்டிஷார்கள் திருச்சி மற்றும்
தஞ்சாவூர் நிலப் பகுதியிலிருந்த காடு மற்றும் அக்காடுகளிலுள்ள மரங்களைக் கணக்கெடுத்தார்கள்.
அப்படியே புதுக்கோட்டை காடுகளிலிருந்த மரங்களும் கணக்கெடுக்கப்பட்டன. இதன்படி பிரிட்டிஷார்கள் தன் ஆவணத்தில்
அரசு, ஆலமரம், இச்சி, இலந்தை, இலுப்பை, ஈச்சை, எட்டி, கருவை, கொன்னை, தென்னை,நாவல், பனை, புரசு, புங்கு, புளி, பூவரசு, மாதுளை, முருங்கை, மூங்கில், வாகை,
வாதா, வில்வம், விளா, வேம்பு ஆகிய மரங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிராண்டிஸ்
இந்தியாவின் முதல் வன அதிகாரியாக 1897 ஆம் ஆண்டு
பிராண்டிஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மெட்ராஸ் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு,
அம்மாகாணத்தில் உள்ளடங்கியிருந்த சேலம் மாவட்டத்திலுள்ள கோவிற்தோப்புகளைக் கணக்கெடுத்தார்.
அத்துடன் மாகாணத்திற்குட்பட்ட மற்ற மாவட்டங்களின் தோப்புகளையும் கணக்கெடுத்தார்.
இ.டி.எம்.கூப்பர்
பிராண்டிஸ்
கணக்கெடுப்பைத் தொடர்ந்து 1904 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மத்திய பகுதி வனக்காவலர்
இ.டி. எம்.கூப்பர், ஆங்கிலேய ஆட்சிப் பகுதியாக
இருந்த திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர் வனப்பகுதியிலுள்ள மரங்களைக் கணக்கெடுத்தவர்,
புதுக்கோட்டை வனத்திலுள்ள மரங்களைத் தர்பார் அனுமதியோடு காட்டின் மையப்பகுதிக்குள்
நுழைந்து அபூர்வமான மரங்களைக் கணக்கெடுத்தார். காட்டின் மையத்தில் தாழ்வான பகுதிகளில்
வளர்ந்திருந்த மரங்களை அவரது ஆவணத்தில் பதிவுசெய்தார். காசா, பாலை, செம்புலவு, உசிலை, டச்சிலை, காட்டெலுமிச்சை,
சுழுந்து, வெப்பாலை, வம்மரை, வேம்பு, வேலம்,
வெள்வேலம், இலந்தை, கிளா, உடைவேலா, உசிலை மரம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். இவரது
கணக்கெடுப்பின்படி, அவ்வாண்டு புதுக்கோட்டை காடுகளின் மொத்தப்பரப்பு 1356 ஏக்கர். இவற்றில்
4,45,000 மரங்களும் இருந்துள்ளன.
புதுக்கோட்டைக்குரிய தனித்துவ மரங்கள்
1903 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ராஸ் இண்டஸ்ட்ரியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் மற்ற நிலப்பகுதியில் வளராத புதுக்கோட்டையில் மட்டுமே வளரும் தனித்துவ மரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
இத்தி (Dalbergia latifolia),
உசிலை ( Albizzia amara),
உடைவேலா (Acacia latronum),
கருங்காலி (Acacia catechu),
காரை ( Canthium parviflorum ),
காசா ( Memecylon edule),
கிளா ( Carissa carandas),
குருந்தை ( Hiptage madablota),
குரை ( Zizyphus oenoplia),
செம்புலவு ( Pterospermum suberifolium ),
தாணி (Terminalia belerica ),
நரிக்கொன்னை ( Cassia nodosa),
நெய்க்கொட்டான் ( Sapindus trifoliatus ),
பாலை ( Mimusops hexandra),
புலவு ( Pterospermum heyneanum),
மயிலை ( Vitex altissima ),
மாம்பழக்கொன்னை ( Cassia fistulu), வம்பரை (Chloroxylon swietenia),
வெப்பாலை (Wrightia tinctoria ),
வெள்வேலாமரம் ( Acacia leucophlea ). இக்கண்காட்சியில் புதுக்கோட்டை மரங்களுக்கு
வெங்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாமரங்கள், பலாமரங்கள்
புதுக்கோட்டையில் வளரும் மரங்களில் மாமரம்
மற்றும் பலாமரங்கள் தனித்துவமான அடையாள மரங்களாகும். இவ்விரு மரங்களின் பெயரால் ஊர்கள்
உள்ளன. மாங்காடு என்பது மாமரத்தின் பெயராலும் பலா மரத்தின் பெயரால் பிலாவிடுதியும்
பெயர்பெற்றள்ளன. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு பலா பழத்திற்குப் பெயர்ப்பெற்றவை.
இவ்வூர் பலா பழங்கள் தனித்துவமான தித்திப்பு சுவை உடையவை. இப்பழங்களுக்குப் புவிசார்
குறியீடு பெற தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மன்னர் விருந்துகளில்
மாம்பழம்
புதுக்கோட்டை
அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்தில் மாம்பழங்கள் பறிமாறப்பட்டன. 1760,
செப்டம்பர் 16 அன்று புதுக்கோட்டை தொண்டைமான், மெட்ராஸ் பிரசிடென்சிக்கு எழுதியிருக்கும்
ஒரு கடிதத்தில் விருந்தில் பரிமாறப்படும் புதுக்கோட்டை மாம்பழங்கள் பற்றிய குறிப்பு
இடம்பெற்றுள்ளது. மேலும் புதுக்கோட்டைக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதி மற்றும்
சிறப்பு விருந்தினர்களுக்கு புதுக்கோட்டையில் விளையும் ஒட்டு வகை மாம்பழங்கள் பரிசாக
வழங்கப்பட்டன.
மார்த்தாண்ட பைரவர் தொண்டைமானின் காதல் திருமணம் ஒட்டு மாங்கன்றுடன்
ஒப்பீடு
புதுக்கோட்டை
சமஸ்தானத்தின் எட்டாவது மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான். இவர் பிரிட்டன் நாட்டில்
படித்தவர். இவர் வெளிநாடுகளுக்கு அதிகம் பயணம் மேற்கொள்கையில் ஆஸ்திரேலியா மெல்போர்ன்
நகரத்து பாரிஸ்டர் உல்ப் பிங்க் என்பவரின்
புதல்வி இ.எம்.பிங்க் என்பவரை 1915, ஆகஸ்ட் 10 அன்று திருமணம் முடித்தார். இத்திருமணத்திற்கு
அரண்மனையில் பெரும் எதிர்ப்பும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தன. திருமணத்
தம்பதிகள் நாடு திரும்புகையில் அவர்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிப்பதென்று நகர்மன்றத்தில்கூடி
ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் எஸ். நாராயணசாமி அய்யர் அவர்கள் இவ்வாறு தன்
கருத்தை பதிவு செய்த விபரம் புதுக்கோட்டை தர்பார் பேரேட்டில் இடம்பெற்றுள்ளது. இவர் புதுக்கோட்டை சமஸ்தான கல்வி இயக்குநராக இருந்து
ஓய்வு பெற்றவர். மன்னர் மார்த்தாண்ட பைரவர் மற்றும் திவான் ராஜகுமார் துரைராஜா இவர்களால்
‘பெரிய வாத்தியார்’ என்று அழைக்கப்பட்டவர். "ஆறடி உயரமும், தகுந்த உடற்வாகும் பலமும் கொண்ட நமது மன்னர் அவருக்கேற்ற
சௌந்தரியமில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்க மாட்டார். நாட்டு மாஞ்செடிக்கு
ஒட்டுக் கட்டினால், ஒட்டுக்கட்டப்பட்ட மரத்தினின்று உண்டாகும் ஒட்டு மாங்கனி எவ்வளவு
தித்திப்பாக இருக்குமோ, அதேமாதிரி பலன் இந்த
விவாஹத்தினால் ஏற்படுமென்று ஹாஸ்ய ரஸத்துடன் கூறுகிறேன்"
மைசூர் தசரா விழாவில் புதுக்கோட்டை தாவரங்கள்
புதுக்கோட்டை
நார்த்தாமலை பகுதியில் ஆயுர்வேத மருத்துவத்திற்கான மூலிகைத் தாவரங்கள், இலைகள், வேர்கள்
அதிகம் கிடைத்துள்ளன. தஞ்சாவூர் திருச்சி மதுரை பகுதியைச் சார்ந்த மருத்துவர்கள் இப்பகுதியிலிருந்து
மருத்துவ தழைகள் சேகரித்து சென்றுள்ளார்கள். மேலும் மைசூர் தசரா பண்டிகை மருத்துவக்
கண்காட்சியில் புதுக்கோட்டை மருத்துவ மூலிகை
தாவரங்கள் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது. மேலும் பி.வி. ஜெகநாதன் ராவ் சேகரிப்பில்
கொண்டு செல்லப்பட்ட புதுக்கோட்டை மூலிகை தாவரங்கள் பெங்களூர் மியூசியத்தில் காட்சிப்
பொருளாக இடம்பெற்றுள்ளது.
காடுகள் அழிவிலிருந்து காக்கும் முயற்சிகள்
சமஸ்தான காலத்தில் காடுகள் எரிபொருளுக்காக அழிக்கும்
முயற்சிகள் நடந்தன. இதிலிருந்து காடுகளை காக்க
1884 ஆம் ஆண்டு ஆற்றின் கரைகளில் பதினாறு குறுங்காடுகள் உருவாக்கப்பட்டன. இவற்றில்
வெள்ளாற்றின் கரையில் ஆறு காடுகள், பாம்பாற்றின் கரையில் நான்கு குறுங்காடுகள், அக்னியாற்றின் கரையில் நான்கு காடுகள், கோரையாறு
மற்றும் ராஜகிரியில் தலா ஒரு காடும் உருவாக்கப்பட்டன. இந்தக் காடு வளர்ப்புத் திட்டத்தின்
கீழ் அதிகமாக மாமரம் மற்றும் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டன.
ஆதனக்கோட்டை முந்திரிக்காடு
இதுதவிர
ஒன்பது சிர்கார் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
ஆதனக்கோட்டை தரிசுகளில் முந்திரி மரக்கன்றுகள் நட்டு பெரிய காடாக உருவாக்கப்பட்டது.
இன்று முந்திரி உற்பத்தியில் ஆதனக்கோட்டை தனித்த இடத்தைப் பெற்றுள்ளதுடன் பெரும் வருவாய்
ஈட்டும் ஊராகவும் வேலைவாய்ப்புக்கான ஆதார ஊராகவும் திகழ்கிறது.
சிவஞானபுரம் மாங்காடு
புதுக்கோட்டை
நகரத்திற்கும் தென்கிழக்குப் பகுதியான சிவஞானபுரம் பகுதியில் ஒட்டு மாமரங்கள் பெரிய
காடாக வளர்க்கப்பட்டன. தற்போது இக்காட்டுப் பகுதி குடியிருப்பு பகுதியாகிவிட்டன. மேலும்
ஆற்றின் கரைகளில் தேக்கு மரக்கன்று நட்டு தேக்கு காடு உருவாக்கும் முயற்சிகள் நடந்தன.
வெள்ளாற்றின் கரையோரப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இந்த முயற்சி பெரிய பலன் தரவில்லை.
காடுகளின் பெயரில் கோவில்கள்
காடுகளின்
பெயரால் புதுக்கோட்டையில் தெய்வ வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக சைவ கடவுள் சிவன்
அடவிஸ்வரர், தாளவனேஸ்வரர் என்கிற பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவில் பெருங்காட்டிற்குள்
அமைந்திருக்கிறது. அடவிஸ்வரர் எனும் அழைக்கப்படும்
சிவன் கோவில் குளவாய்ப்பட்டியில் அமைந்துள்ளது. இங்கு அடவி என்பது காட்டைக் குறிக்கும்.
காட்டின் கடவுளாக மக்கள் அடவிஸ்வரரை வழிபடுகிறார்கள்.
தாளவனேஸ்வரர்
தாளி
என்றால் பனை மரத்தைக் குறிக்கும். தாளிப்பனை பனை மரங்களில் ஒரு வகை. வைத்திக்கோவிலில்
அமையப்பெற்றுள்ள சிவனுக்கு தாளவனேஸ்வரர் என்று பெயர். பனைமரக் காட்டின் தலைவனாக தாளவனேஸ்வரர்
பெயர் விளங்குகிறார்.
வேணுவனேஸ்வரி
திருமயம்
பகுதிகள் மூங்கில் நாணற்காடுகளாக இருந்துள்ளது. திருமயம் மலைக்கோட்டையின் கீழ் அமையப்பெற்றுள்ள
சிவன் சத்தியகிரீஸ்வரர் என்றும் அம்மன் வேணுவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இக்கோயிலின்
தலவிருட்சமாக மூங்கில்மரம் திகழ்கிறது. இப்பகுதி மக்கள் வேணுவனேஸ்வரி மூங்கில் மரக்காட்டைக்
காக்கும் கடவுளாக நினைத்து வழிபடுகிறார்கள்.
இரும்பைத்
தோப்பு
கந்தர்வகோட்டையில்
அமையப்பட்டுள்ள ஆபத்சகாயஈஸ்வரர் கோவிலின் வடபகுதி இரும்பைத் தோப்பு என்று அழைக்கப்பட்டது.
சுமார் 3.15 ஏக்கர் பரப்புக் கொண்ட காட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் கொண்டு இக்கோயில்
நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. இன்று கோயில் இருக்கிறது, காட்டைக் காணோம்.
இப்படியாக
புதுக்கோட்டை ஒரு காலத்தில் வனக்கோட்டை என அழைக்கப்பட்ட முல்லை நிலமாக இருந்தது. காட்டின்
மூலமாக நிரந்தர வருமானம் கிடைத்து வந்திருக்கிறது. ஆனால் இன்று? இன்றும் காடு சூழ்ந்த
நிலப்பரப்பாகவே புதுக்கோட்டை திகழ்கிறது. தைலமரக்காடுகள்!
மரங்களின் பெயரால் உருவான ஊர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்கள் மரங்களின் பெயரைக்
கொண்டு பிறந்தவை. ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று ஆவணக்குழு செய்தி மலர்' மரம், செடி,
கொடிகளின் பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்த பிறந்த ஊர்களின் பெயர்களைக் பட்டியலிட்டுள்ளது.
இதன்படி அறந்தாங்கி என்பது அதாங்கி என்கிற மரத்தைக் கொண்டு பிறந்தது. வள்ளிக்கீரையைக்
கொண்டு வள்ளிக்காடு.
குருந்து – குருந்தடிமனை, குருந்தம்பட்டி,
முருங்கை – முருங்கைகொல்லை,
இரும்புளி – இரும்பாளி,
சூறை மரங்கள் - சூறக்காடு. பிறகு இது சூரக்காடு என்றாது.
பலா - பிலாவிடுதி.
ஓணான்கொடி – ஓணான்குடி,
இலுப்பை – இலுப்பூர்,
காட்டுமாவு – கட்டுமாவடி,
கொக்கிமுள்ளு – கொக்குமுட்டை,
கொத்தமரம் – கொத்தமங்கலம்,
கொன்னை – கொன்னையூர்,
ஆட்டான் – ஆட்டான்குடி,
விராலி – விராலிமலை, விராலிப்பட்டி,
காரை – காரையூர்,
முள்ளுக்கடம்பு – முள்ளுக்குண்டு,
பூவம் – பூவம்பட்டி,
செங்காரை – செங்கீரை,
வேலா – வேலாவயல், வேலாடிப்பட்டி,
உசிலை, உசிலம்பட்டி,
முள்ளி – முள்ளிக்காய்ப்பட்டி,
கிளாங்காய், கிளாங்காடு,
கூரைப்புல் – கூகைப்புலிக்குடி,
சூரைக்கொடி – சூரைக்காடு,
கடுக்காய் – கடுக்காய்க்காடு,
கன்னி – கன்னியாங்கொல்லை,
பேய்மிரட்டி – பேயாடிப்பட்டி,
மஞ்சள்துத்தி – மஞ்சள்கரை,
முருங்கை – முருங்கைக்கொல்லை,
குருந்து – குருந்தடிமனை, குருந்தம்பட்டி,
வள்ளிக்கீரை – வள்ளிக்காடு,
சூரைக்கொடி – சூரன்விடுதி,
ஆலமரம் – ஆலங்காடு,
புளிச்சை – புளிச்சங்காடு,
மல்லிகை – மல்லிகைநத்தம்,
மாணியம்பூண்டு – மணியம்பள்ளம்,
தினை – தினைக்குளம்,
கத்திரி – கத்திரிக்காடு,
புங்கம் – புங்கம்காட்டுப்பட்டி,
செந்தட்டி– செந்தட்டிப்பனை,
முல்லை – முல்லையூர்,
நாவல் - நாவலிங்கக்காடு, காட்டுநாவல்,
சீத்தா – சீத்தாபட்டி,
எருக்கு – எருக்கலைக்கோட்டை,
அத்தடலி – அத்தாணி,
ஆடாலி – ஆடலை,
பூவத்தி – பூவத்தக்குடி,
கம்பு – கம்பங்காடு,
பனை – மேற்பனைக்காடு,
சுரக்காய் – சுரக்காய்ப்பட்டி,
முள்ளிச்செடி – முள்ளிப்பட்டி, முள்ளிக்காய்ப்பட்டி,
நெருஞ்சி – நெரிஞ்சிக்குடி,
ஈச்சமரம் – ஈச்சம்பட்டி,
வாகை – வாகவாசல்,
புளி – புளிவயல்,
கடம்பன் – கடம்பவயல்,
பின்னை – பின்னங்குடி,
கொள்ளு – கொள்ளுத்திடல்,
அடம்பை – அடம்பூர்,
எட்டி - எட்டிச்சேரி.
தற்கால புதுக்கோட்டை காடுகளின் விழுக்காடு
இன்றைய புதுக்கோட்டையின்
காடுகளின் மொத்தப் பரப்பு 24, 103 ஏக்கர்ஸ். இவற்றில் திருமயம் பெரும்பகுதி
காடுகளைக் கொண்ட தாலுகாவாக திகழ்கிறது. 9519 ஏக்கர்ஸ். புதுக்கோட்டையின் மொத்த காடு
பரப்பில் 39.5 விழுக்காடு. அடுத்த இடத்தில் ஆலங்குடி – 7687 ஏக்கர்ஸ் ( 32 விழுக்காடு),
குளத்தூர் – 3257 ஏக்கர்ஸ் ( 13.5 விழுக்காடு), புதுக்கோட்டை – 1563 ஏக்கர்ஸ் (
6.4 விழுக்காடு), ஆவுடையார்கோவில் – 1015 ஏக்கர்ஸ் ( 6.4 விழுக்காடு), கந்தர்வகோட்டை
– 602 ஏக்கர்ஸ் ( 2.5 விழுக்காடு), அறந்தாங்கி – 473 ஏக்கர்ஸ் ( 2 விழுக்காடு).
எஸ். கார்த்திக்கேயன்
அமிர்தலிங்கம் என்கிற ஆய்வு மாணவர் 2005 ஆம் ஆண்டு
கோவிற்தோப்புகளைக் கணக்கெடுத்தார். இவரைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ். கார்த்திக்கேயன்
இவரது மாணவர் பாண்டிச்சேரி இளம் ஆய்வாளர் எ.சி.தங்கவேலு உடன் இணைந்து புதுக்கோட்டையிலுள்ள
கோவிற்தோப்புகளைத் தேடி, அத்தோப்புகளிலிருக்கும் மரங்களைப் பதிவு செய்தார். கார்த்திக்கேயன்
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி
ஓய்வு பெற்றவர். இவர்களது கணக்கெடுப்பு JOURNEY THROUGH SACRED GROVES (கோவிற்தோப்புகளினூடே ஒரு பயணம் ) எனும் நூலாக வெளிவந்தது. இவர்கள் புதுக்கோட்டையில்
ஐம்பத்தொன்று கோவிற்தோப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அத்துடன் அக்கோவில் தோப்பிலுள்ள
தெய்வங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
காட்டுக்கோவில்கள்
பழைய ஆதனக்கோட்டை - முனீஸ்வரர் கோவில்,
ஆதனக்கோட்டை - அய்யனார்,
ஆதனக்கோட்டை - கருப்பர்,
அம்மன்பேட்டை - அய்யனார்,
அரசந்தன்பட்டி - உருமையா,
அரியூர் - மசதமுனி,
ஆத்திரிப்பட்டி - சுனலியம்மன்,
எரிச்சி - மெய்யர் அய்யனார்,
இலைகடிவிடுதி - வடுவச்சி அம்மன்,
கம்மங்காடு - ஈருகாளி,
கரம்பக்குடி - முத்துக்கருப்பையா,
ஈழக்குறிச்சி - அடைக்கலங்காத்த அய்யனார்,
கிழக்குறிச்சி - அய்யனார்,
மேலக்கீழக்குறிச்சி - அய்யனார்,
கீழக்குறிச்சி - கருப்பர், சூத்திக்காரன், வெட்டிக்கருப்பர்,
கெண்டையன்பட்டி - கருப்பர்,
கெண்டையன்பட்டி - முனீஸ்வரர்,
கூத்தினிப்பட்டி, சிங்கன்பட்டி - அய்யனார்,
லெட்சுமிபுரம் - முனீஸ்வரர்,
மாந்தக்குடி - முனீஸ்வரர்,
மங்களத்துப்பட்டி - உருமநாதர்,
மலையூர் - கருப்பர், முனீஸ்வரர், செம்முனி, உருமநாதர்,
மேலவாண்டான்விடுதி - அம்மாயாண்டி, பொங்கல்மனை,
மேல்மலையூர் - கருப்பர்,
நார்த்தாமலை - அய்யனார்,
நவுளிக்காடு - அய்யனார், பஞ்சாதி கதமாரவர் காளி,
பெருங்களூர் - பிரம்மர்,
பெருங்களூர் - உருமநாதர்,
பொற்பனைக்கோட்டை கீழக்கோட்டை - அத்திமுனீஸ்வரர்,
பொற்பனைக்கோட்டை மேலக்கோட்டை - முனீஸ்வரர்,
பொற்பனைக்கோட்டை தெற்கு - அய்யனார்,
பொற்பனைக்கோட்டை வடக்கு - காளி,
புதுப்பட்டி - பம்மையா,
ரெங்கநாயகிபுரம் - குதி அய்யனார்,
சொக்கநாதன்பட்டி - திருமலை ஆண்டவர்,
திருக்கோகர்ணம் - மாலையக்கருப்பர்,
துவார் - முனீஸ்வரர்,
வாராப்பூர் - பாலடிகருப்பர்,
வடசேரிப்பட்டி - காளி, பட்டவன்,
வீப்பங்குடி - மலையாளத்துமுனி,
வீரப்பங்குடி - மெய்யம்மா ஆகிய கோவில் புதர்காடுகளைக் கொண்டதாகும்.
இக்கோவில்களில் காளி, முனீஸ்வரர், முன்னடியான், கருப்பு, வீரனார், மதுரை வீரன்,.. ஆகிய தெய்வங்கள்
குலதெய்வ வழிபாட்டின் முதன்மையான தெய்வங்களாக விளங்குகின்றன.
கோவிற்சிட்டை
தாவரங்கள்
இக்கோவிற்தோப்புகளில் பலவகையான தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன. மரங்கள், செடி, கொடி, பூண்டு, புல், கொடி என்றும் சில மரங்கள் அபூர்வ வகைமை கொண்டதாகவும் திகழ்கின்றன.
அத்தி,
அம்மான்பச்சரிசி,
அரசமரம்,
அரளி,
அரிவாள்மனைபூண்டு,
அருகம்புல்,
அரைக்கொடி,
அழிஞ்சல்,
அழுகன்னி,
ஆக்கனா,
ஆடாதொடை,
ஆத்தி,
ஆலமரம்,
ஆவாரம்,
ஆவிமரம்,
இண்டமுள்ளு,
இண்டுமுள்,
இரும்பாளி,
இலந்தை,
இலவம்,
இலுப்பை,
இன்பூரல்,
ஈச்சம்,
ஊசிதகரை,
ஊமத்தை,
ஊம்முள்,
எக்கிமரம்,
எட்டி,
எருக்கு,
எலிக்காதுசெடி,
எலுமிச்சைப்புல்,
ஒட்டந்தழை,
ஒடுகன்தழை,
ஒதியம்,
ஓணாங்கொடி,
ஓரிதழ்தாமரை,
கடம்பமரம்,
கண்டங்கத்தரி,
கண்ணுக்காட்டிமுள்,
கண்வலிப்பூ,
கத்தாழை,
கபிலப்பொடி,
கம்பளிமரம்,
கர்கொடி,
கரிசலாங்கண்ணி,
கருஊமத்தை,
கருங்சடைச்சி,
கருடகொடி,
கருந்தும்பிலி,
கருந்தும்பை,
கருநானா,
கருவேலம்,
கல்பாசி,
கல்யாணமுருங்கை,
கல்விரசு,
கள்ளிக்கொடி,
கள்ளிமுடையான்,
கனகாம்பரம்,
காட்டாமணக்கு,
காட்டுஎலுமிச்சை,
காட்டுகருவேப்பில்லை,
காட்டுகருவேப்பிலை,
காட்டுகனகம்பரம்,
காட்டுசிறுவேலம்,
காட்டுசுருளி,
காட்டுதுளசி,
காட்டுபவளம்,
காட்டுமல்லி,
காட்டுமா,
காயா,
காரை,
கானாவாழை,
கிழாநெல்லி,
கிளா,
கிளுவை,
கீரிமரம்,
குண்டுமணி,
குப்பைமேனி,
குரங்குவெத்தலை,
குருந்து,
குறுகத்திக்கொடி,
கூந்தல்பனை,
கொட்டக்கரந்தை,
கொட்டைஇலந்தை,
கொடிக்கள்ளி,
கொடுக்காப்புளி,
கொத்தன்,
கொருவி,
கோபுரந்தாங்கி,
கோரை,
கோவை,
சங்கமுள்ளு,
சடச்சி,
சப்பாத்திக்கள்ளி,
சவுண்டல்,
சித்திரமூளம்,
சிவனார்வேம்பு,
சிறுஈச்சம்,
சிறுகுறிஞ்சான்,
சிறுசின்னி,
சிறுசெடி,
சிறுசெருப்படை,
சிறுபுளிச்சை,
சிறுவல்லிக்கொடி,
சிறுவள்ளி,
சிறுவெட்டுகொடி,
சீந்தில்,
சீமைஅகத்தி,
சுண்டை,
சூரமுள்,
செம்புலிச்சான்,
செம்பொழவு,
செறுப்படை,
சேத்துப்புண்தழை,
சொக்களா,
சோற்றுக்கற்றாழை,
தக்கசெடி,
தகரை,
தண்ணீர்விட்டான்கிழங்கு,
தவசிமுருங்கை,
தனுக்கு,
தாத்தாதலைவெட்டிபூ,
தாழைமரம்,
திப்பிலி,
திருக்குகள்ளி,
துத்தி,
தும்பை,
துளசி,
துறிஞ்சமரம்,
தெரணி,
தென்னை,
தேள்கொடுக்கு,
தேன்தும்பை,
தொரட்டிமரம்,
தொரட்டிமுள்ளு,
நஞ்சருப்பான்,
நத்தைச்சூரி,
நமகொடி,
நன்னாரி,
நாகலிங்கம்,
நாய்துளசி,
நாய்வேளை,
நாவல்,
நித்யகல்யாணி,
நிலப்பனை,
நிளதுத்தி,
நீர்பிரம்மி,
நீலி,
நுணா,
நெருஞ்சி,
நேத்திரப்பூண்டு,
நொச்சி,
பலா
பழம்பாசி,
பற்பாடகம்,
பறைவல்லிக்கொடி,
பனை,
பாய்முல்லை,
பாலைக்கொடி,
பாவட்டை,
பிரண்டை,
பீசங்கு,
புங்கன்,
புரசு,
புல்லுருவி,
புலியரை,
புளி,
புளிக்கீரை,
புறாமரம்,
பூச்சிச்செடி,
பூண்டுச்செடி,
பூலாப்பூ,
பூவரசு,
பூனைக்காலி,
பெருகட்டுகொடி,
பெருகுறிஞ்சன்,
பெருங்கொடி,
பேய்குமட்டி,
பேய்மிரட்டி,
பொன்னாங்கன்னி,
மகிழமரம்,
மஞ்சள்கொன்றை,
மணிபுங்கன்,
மம்மட்டி,
மரஒட்டி,
மரக்கீரை,
மரம்நெல்லி,
மருதாணி,
மருள்,
மலநெல்லி,
மலைகொழிஞ்சி,
மலைநாரத்தை,
மலைநாவல்,
மனோரஞ்சிதம்,
மாமரம்,
மாவிளங்கம்,
மிளகரணை,
மின்னை,
முசட்டக்கீரை,
முடக்கத்தான்,
முத்தாம்கொடி,
முந்திரி,
முள்வேங்கை,
முள்ளுக்கீரை,
முள்ளுமரம்,
முன்னி,
மூக்கரட்டை,
மூக்குத்திப்பூ,
மூங்கில்,
மூள்கிளா,
மேலம்மரி.
மோதிரக்கண்ணி,
யானைநெருஞ்சி,
ரயில்பூண்டு,
வக்கனை,
வடலைக்கொடி,
வல்லாரை,
வள்ளிகிழங்கு,
வறகா,
வன்னிமரம்,
வாகை,
வாடாமல்லி,
வாதநாராயணன்,
விடதரன்,
விராலி,
வில்வம்,
விழுதி,
விஷ்ணுகிரந்தி,
வீரமரம்,
வீரிபருத்தி,
வீழிமரம்,
வெட்டாலை,
வெடிக்காய்,
வெண்தேக்கு,
வெத்திலை,
வெப்பங்கொடி,
வெப்பாலை,
வெள்வேலம்,
வெள்ளைபலா,
வேம்படன்,
வேம்பு,
வேலிகருவை,
வேலிபருத்தி,
ஜிம்க்கிபூ,
ஆகிய தாவரங்கள் இருப்பதாக பதிவு செய்துள்ளார்கள். பெரும்பாலும் காடுகள் வளர்ப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் பேசும் நாம் காட்டிலுள்ள புல், பூண்டு, செடி, கொடிகள் பற்றி பெரிதாக அக்கறைக் கொள்வதில்லை. காடுகள் என்பது வெறும் மரங்கள் மட்டுமா. காடு என்பதற்கு அடைசல் என்றொரு பொருள் இருக்கிறதல்லவா!
- அண்டனூர் சுரா
26.05.2024










அரிய...சிறந்த பல தகவல்களை தந்தமைக்கு நன்றி ஐயா...தொடர்ந்து நம் மண்ணின் மரங்களைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்...
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் ...நன்றி.
நன்றி...
பதிலளிநீக்குமிகச்சிறந்த ஒரு தேடல்..புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள்...இத்தகைய வளம் மிக்க காடுகள் இன்று யூகலிப்டஸ் காடுகளால் அழிவுக்குள்ளாகியிருப்பதை ஆசிரியர் தனது அடுத்த பதிவில் இடம்பெறச்செய்ய வேண்டுமாய் அரிமளம் பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு