“ஓர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும். ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும். ஒரு குதிரை ஒரு வீரனைக்
காக்கும். ஒரு வீரன் ஒரு நாட்டைக் காப்பான்” என்பது துருக்கிய பழமொழி. இந்தப் பழமொழி
இந்தியாவில் கதையாக மாறியது. இரு மன்னர்களுக்கிடையில் போர். ஒரு மன்னன் தோற்றுப்போக
தோற்றதற்கான காரணமாக வீரர்கள் லாடத்திலுள்ள ஆணியைச் சொன்னார்கள். குதிரைகளோடு பழமொழியையும்
கொடுத்த நாடு துருக்கி. துருக்கி குதிரைகளைத்தான் அரேபியர்கள் இந்தியர்களுக்குக் கொடுத்தார்கள்.
குதிரைகளை இந்தியாவிற்குள் கொண்டுவருகையில் குதிரைகள்
வளர்வதற்கான சாதகச் சூழல் இங்கே இருந்திருக்கவில்லை. இமயமலைக்குத் தெற்கிலிருந்து அதற்கான
சாதகச் சூழலைத் தேடுகையில் மராட்டிய சௌராஷ்ரா பகுதிகள், தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி
பகுதிகள் குதிரைக்கான தகுந்த சூழலைக் கொண்டிருந்தன. இது குறித்து சோமநாதர் எனும் நூலில்
ரொமிலா தாப்பர் இவ்வாறு எழுதுகிறார். டாக்டர் வி.எம்.மெஹெர் – ஹோம்ஜி எனும் ஆய்வாளர்
“ சில விசித்திரமான தாவரப் புவியியல் பரவல்கள் மீதான குறிப்புகள்” எனும் நூலில் “இந்தியாவில்
சவுராஷ்டிரத்தில் வேரவால் மற்றும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இரண்டு
இடங்களில் மட்டுமே Acacia planifrons தாவரங்கள் காணக்கிடைக்கின்றன. ஆகவே குதிரைகள் இறக்குமதியான தொடக்கக்
காலத்தில் இங்கே குதிரைகள் வளர்ந்திருக்கின்றன.
இந்நூலில் இன்னொரு இடத்தில், “உருவமைப்பியல் ரீதியாக
இந்தத் தாவரம் வடகிழக்கு ஆப்பிரிக்கா, அரேபியா, ஏடன் தீபகற்பம் ஆகிய பகுதிகளில் வாழும்
Acacia Spirocarpa என்ற
தாவர வகையுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடைய ஒன்றாகும். இந்தத் தாவரம் இங்கு அறிமுகமானது
ஒரு தற்செயல் நிகழ்வாக இருந்திருக்கலாம். குதிரைகள் இங்கே இறக்குமதியாகும்போது தீவனமாக
அத்தாவரம் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். எனவே குதிரை வணிகத்துடன்
மிக நெருக்கமான தொடர்புடைய இடங்களிலும் இத்தாவரம் வேர்விட்டிருக்க வேண்டும்” என்கிறார்.
Acacia
Spirocarpa எனும்
தாவரம் வேலம் வகையைச் சேர்ந்த கருவை மரம். இந்தக் கருவையின் காய்கள் குதிரைகளுக்கான
முக்கிய தீவனங்களில் ஒன்றாகும். இம்மரம் ஆப்பிரிக்க
நாட்டிலிருந்து விதையாகக் கொண்டுவந்து இந்தியா முழுவதும் விதைக்கப்பட்டன. மகாராஷ்டிரா
சௌராஷ்ரா பகுதியிலும் தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதியிலும் இந்த விதைகள்
நன்கு முளைத்து வளர்ந்திருக்கின்றன. இப்பகுதியில்தான் குதிரைகள் முதலில் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
குதிரைகள் வளர்ப்பதற்கென்றும் பேணுவதற்கென்றும் ஒதுக்கப்பட்ட
இடங்கள் பாளையம் என அழைக்கப்பட்டது. குதிரைகளை இந்தியாவிற்குக் கொண்டுவந்தவர்கள் இஸ்லாமியர்கள்.
குதிரைகளை வளர்க்கும் கலை அறிந்தவர்களும் அவர்களே. இங்கு குதிரைகள் வணிக நோக்கத்தில்
வளர்த்து விற்பவர்கள் ராவுத்தர்கள் என அழைக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளை
விடவும் இராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் குறிப்பாக ராவுத்தர்கள் அதிகம். அன்றைய ராமநாதபுரம்
இன்றைய புதுக்கோட்டை நிலப்பரப்பை சேர்த்து உள்ளடக்கியது.
தமிழக மன்னர்களில் குதிரைகளை வணிக நோக்கிலும் போக்குவரத்துக்கான
வாகன நோக்கிலும் பயன்படுத்தியவர்கள் நாயக்கர்கள். நாயக்கர்களின் ஆட்சி 1500 இல் தொடங்குகிறது.
மதுரையை மையமாகக் கொண்டு ஆட்சிச் செய்த நாயக்கர்கள் பிறகு தஞ்சாவூரையும் ஆளத் தொடங்கினார்கள்.
இரு நகரத்து நாயக்கர்களுக்கும் குதிரைகள் பெரிதும் தேவைப்பட்டதால் இரு நாயக்கர்களும்
குதிரைகள் வளர்ப்புக்குப் பெயர்ப்போன ராவுத்தர்களை அவர்களது ஆட்சிப்பகுதியில் குடிவைத்துக்கொண்டார்கள்.
குதிரையும்
மாடும்
கரம்பக்குடி ஒரு காலத்தில் குதிரைகள் வளர்க்கும் லாயமாக
இருந்துள்ளது. இவ்வூரில் அமையப்பட்டுள்ள பங்களா குளம் இந்த வரலாற்றை இன்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
இக்குளம் குதிரைகள் தண்ணீர் பருகுவதற்கும் குளிப்பாட்டுவதற்கும் வெட்டப்பட்ட குளம்.
பங்களா என்பது உருது சொல். இதன் பொருள் வளம். துருக்கி நாட்டில் ‘வளம்’ என்பது குதிரையைக்
குறிக்கும். இதே மாதிரியான சொல் தமிழிலும் உண்டு. இங்கு வளம் என்பது மாடு. திருவள்ளுவர்
‘மாடல்ல மற்றை யவை’ என்கிறார். இங்கு மாடு என்றால் செல்வம் என்று பொருள். இதே பொருளில்தான்
பங்களா என்கிற சொல்லும் குறிக்கப்படுகிறது.
பங்களா குளம் உயரமாகவும் பரந்தும் குதிரைகள் சுற்றிவருமளவிற்குத்
வட்டமான கரையைக் கொண்டது. பங்களா குளத்தைக் காவல் காப்பதற்காக குளக்காவலர்கள் எனும்
பணியாளர்கள் நியமிப்பட்டார்கள். இன்றைக்கும் கரம்பக்குடி பேரூராட்சி அலுவலக பதிவேட்டில்
குளக்காவலர் பணியிடம் காலிப் பணியிடமாக காட்டப்பட்டு வருகிறது.
பங்களா என்பது உருதுச் சொல்லுடன் மேலும் பல சொற்கள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளன.
லாடம் – குளம்பின் அடியில் சாத்துவது,
லத்தி – குதிரையைப் பழக்க உதவும் தடி,
ஸ்தானம் - இடம்,
ஜிகினா- குதிரை அலங்கரிக்க உதவும் அலங்காரம்.
ரேக்ளா – ஒற்றைக் குதிரை,
மிராசு – குதிரை வளர்க்கும் வசதி உடையவர்,
மாஜி - முன்னாள்,
மகால் – குதிரை கொட்டிலுடன் கூடிய பெரிய இல்லம்,
பிச்சுவா – குத்துவாள்,
நவாப் – தலைவன்,
கோஷா – முகத்திரை,
உருமால் – தலைப்பாகை, யாவும் குதிரையுடன் தொடர்புடைய உருது சொற்கள்.
குதிரையுடன்
தொடர்புடைய ஊர்கள்
புதுக்கோட்டையில் நம்புரான்பட்டி என்றோர் ஊர் இருக்கிறது..
நம்பிரான் என்றால் ஊர்க்குதிரை என்று பொருள். ஊர்க்காவல் குதிரை வளர்ப்பவர்கள் நம்பிரான்
என அழைக்கப்பட்டார்கள். நம்பிரான்கள் குடியிருந்த பகுதி நம்பிரான்பட்டி. அதுவே பிறகு
நம்புரான்பட்டி ஆனது. இவ்வூருக்கும் அருகில்
கொத்தகம், கொத்தகப்பட்டி என்று இரண்டு ஊர்கள் இருக்கின்றன. கொட்டகம் என்பது குதிரை
அடைபடும் இடம்.
கொத்தகப்பட்டியில் இன்றும் குதிரைகள் வளர்த்துவருகிறார்கள்.
தற்காலத்தில் வளர்க்கப்படும் குதிரைகள் போர்க்குதிரைகள் அல்ல, நாட்டியக் குதிரைகள்.
இவ்வூரைச் சேர்ந்த மணி என்பவர் நாட்டியக் குதிரை வளர்ப்புக்குப் பெயர்போனவர். இவரது
குதிரை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த தஞ்சாவூர் எட்டாவது உலகத்
தமிழ் மாநாட்டில் குதிரை அணிவகுப்பில் இடம்பெற்றது. மேலும் திமுக மாநாட்டு ஊர்வலத்திலும்
பங்கேற்றது. இரண்டு முதலமைச்சர்களால் பாராட்டுப் பெற்ற குதிரை இது.
இவர் தனக்கான குதிரையை அந்தியூர் குதிரைச் சந்தையில்
வாங்கிவருவதாக ஒரு நேர்காணலில் பகிந்துள்ளார். தென்னிந்திய குதிரை சந்தைகளில் இரண்டாவது
பெரிய சந்தை அந்தியூர் சந்தை. இச்சந்தையின் கீழ் ஒரு கதை சொல்லப்படுகிறது. மைசூர் மன்னன்
திப்புசுல்தானுக்கு குதிரைகள் என்றால் உயிர். இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து குதிரைகளை
வாங்கிவந்து பழக்கி அவரது படையில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டார். அவ்வாறு
வெளிநாடுகளில் வாங்கி வரும் குதிரைகளை மைசூருக்குப் பக்கத்திலுள்ள காட்டுப் பகுதியில்
ஓடச்செய்து பழக்கப்படுத்தி வரும்போது மைசூரிலிருந்து அந்தியூர் மிக அருகாமையில் இருந்ததால்
அடிக்கடி அந்தியூர் பகுதியில் குதிரைகளை வனப்பகுதியில் கட்டிவிட்டு ஓய்வெடுத்து செல்வது
வழக்கமாகக் கொண்டார். மிகவும் நல்ல சீதோஷ்ண நிலை இந்தப் பகுதியில் உள்ளதால் நாளடைவில்
அந்தியூரின் சமவெளியில் ஒரு குதிரை லாயம் ஏற்படுத்தினார். அதையொட்டி புதுபாளையம் எனும்
ஊரில் குருநாதசுவாமி எனும் கோயில் இருக்கிறது.
அந்தியூருக்கு வரும் திப்புச்சுல்தான் அப்படியே புதுப்பாளையம்
குருநாதசுவாமி கோவிலுக்கும் சென்று வருவார். குதிரையில் திப்புச்சுல்தான் வருவதால்
புதுப்பாளையம் குருநாதசுவாமியின் தேரோட்டத் திருவிழாவொட்டி குதிரை சந்தை நடத்தப்பட்டது.
மன்னர் ஆட்சி முடிந்தபின் நிரந்தர குதிரை லாயம் அகற்றப்பட்டது. இருப்பினும் குருநாதசுவாமி
திருவிழாவை முன்னிட்டு பல மாநிலங்களிலிருந்து மூன்று நாட்கள் குதிரைகள் அந்தியூருக்கு
வரும் வியாபாரிகள் அங்கேயிருந்து குதிரைகளை வாங்கிச் சென்றார்கள்.
குதிரையின்
வகைகள்
குதிரைகளில் உயர்ந்த ரகம் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து
காட்டியாடி. இதற்கு அடுத்ததாக நோக்ரா, அபிலாக், சஞ்சாப் நோக்ரா. இதுதவிர மகாராஷ்ரா
மாநிலம் மலேகம் எனும் ஊர் குதிரை சந்தைக்குப் பெயர் போனது. தற்காலத்தில் வளர்க்கப்படும்
குதிரைகள் நாட்டியக் குதிரைகள். இக்குதிரைகள் ஆவணம், காசிம்பேட்டை, குளந்திரான்பட்டு,
நெய்வேலி, இடையாத்தி, மணமேல்குடி, தோப்பநாயகம், காரணிக்காடு, கொத்தகப்பட்டி ஆகிய ஊர்களில்
பெரிதும் வளர்க்கப்படுகின்றன.
கிராம கோவில்களில் அய்யனார் தெய்வத்தின் வாகனமாக குதிரை
விளங்குகிறது. குதிரைகள் சிலையாக கட்டப்படும் கோயில் அய்யனார் கோயில்களே! முன்பு அய்யனார்
வாகனமாக யானையும் குதிரைகளும் இருந்தன. அதாவது அய்யனார் குதிரையில் செல்ல அவருக்கான
சீர்வரிசை யானையில் வரும். தற்போது இக்கோயிலில் குதிரை மட்டுமே இடம் பிடித்து வருகிறது.
அய்யனார் கோவில்லாமல் முனியன், கருப்பர் கோயில்களிலும் குதிரைகள் இடம்பிடித்து வருகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபடும் குலதெய்வங்களில் குதிரை ராவுத்தர் என்றொரு சுவாமி உண்டு.
ஆசியாவிலேயே
உயரமான குதிரை சிலை
புதுக்கோட்டை அம்பு நாட்டினரின் தென்கிழக்குப் பகுதி
தானவ நாடு என்று அழைக்கப்பட்டது. தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தின்
ஒரு பகுதியும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைந்த
பேராவூரணி வட்டமும் தானவ நாடு என அழைக்கப்பட்டன. இப்பகுதியை தானன் எனும் தானவதரையர்
ஆண்டதால் இதற்கு அப்படியொரு பெயர். இந்நாட்டின் எல்லையாக ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி,
திருச்சிற்றம்பலம் உள்ளன. இந்நாட்டிற்குட்பட்ட இன்றைய குளமங்கலம் எனும் ஊரில் அமையப்பெற்றுள்ள
பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயிலில் அமைந்துள்ள குதிரைச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.
மாணிக்கவாசகரும்
குதிரையும்.
இது தவிர புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு உலாவும்
கதைகளில் மாணிக்கவாசகர் காலத்தில் நிகழ்ந்த நரி பரியாகி பிறகு பரி நரியானக் கதையைச்
சொல்லலாம். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பரி நரியாக்கிய படலம் சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில்
ஒன்றாக திகழ்கிறது.
மாணிக்கவாசகரை பாண்டிய அரசன் குதிரைகள் வாங்குவதற்குப்
பொருள் தந்து அனுப்பினார். மாணிக்கவாசகர் அப்பொருளை இறைப்பணிக்காக செலவிட்டார். இறைவன்
குதிரைகள் வருமென கூறியதால் அவ்வாறே அரசரிடம் கூறினார். ஆனால் நாட்களாகியும் குதிரைகள்
வரவில்லை. எனவே அரசன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார்.
இறைவன் நரிகளைப் பிடித்து குதிரைகளாக்கி மன்னிடம்
கொடுத்தான். மன்னன் அக்குதிரைகளை லாயத்தில் அடைத்து வைக்க உத்தரவிட்டான். இரவில் குதிரைகள்
கனைப்பதற்கு பதிலாக ஊளையிட்டன. மேலும் நரிகள் லாயத்திலிருந்து தப்பி ஓட்டமெடுத்தன.
இதனால் கோபம் கொண்ட மன்னர் மாணிக்கவாசகரை வைகை ஆற்றங்கரை பாறையில் கட்டி வைக்க உத்தரவிட்டார்.
மாணிக்கவாசகரை கட்டிவைக்க ஆற்றின் கரைக்கு இழுத்துச் செல்கையில் இறைவன் அருளால் வைகை
பெருக்கெடுத்து காவலர்களை ஓடும்படி செய்து, மாணிக்கவாசகரைக் காத்தது என்பது புராணக்
கதை.
குதிரையால்
குடியேறிய இன மக்கள்
கண்டரவகோட்டை ஜமீன், வல்லம் ஜமீன் இருவருக்கிடையில்
அவ்வபோது போர் நிகழ்ந்து வந்திருக்கிறது. அப்போரில் வல்லம் ஜமீன்களின் கை ஓங்கியிருக்கிறது.
இதற்குப் பலி வாங்குவதற்காக கண்டரவக்கோட்டை ஜமீன் தன் ஆட்களை அழைத்து, வல்லம் சென்று,
கொட்டத்து குதிரைகளைக் கடத்தி வருவாறு அனுப்பினார். வல்லம் கொத்தளத்தில் இரவு நேரக்
காவலர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கும் நேரத்தில் கொத்தளத்திற்குள் நுழைந்த
ஒருவன் குதிரையின் காலில் கட்டியிருந்த அச்சைப் பிடிங்கி குதிரையை ஓட்டிக்கொண்டு வெளியே
வந்திருக்கிறார். அப்பொழுது விழித்துவிட்ட இரவுக் காவலன் குதிரை அச்சோடு பிடுங்கிக்கொண்டது
என்று நினைத்து அச்சை ஓரிடத்தில் அடித்திருக்கிறார். அச்சு குதிரையைத் திருடச் சென்றவரின்
கையில் இறங்கியிருக்கிறது. சத்தமில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்ட திருடன் அச்சால்
அடிக்கப்பட்ட கையை வெட்டி அச்சோடு வைத்துவிட்டு குதிரையை அவிழ்த்துக்கொண்டு கண்டரவகோட்டை
வந்து சேர்ந்தார்.
அவரது வீரத்தை மெச்சிய கந்தர்வகோட்டை ஜமீன் கையைப்
பார்த்திருக்கிறார். ஒரு கையைக் காணோம். நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அந்த வீரனிடம்
உனது கைக்குப் பதிலாக எதையேனும் கேளும், என்று கேட்டிருக்கிறார். அந்த வீரன், என் மக்கள்
குடியிருக்க இடமும் கோயில் நிலமும் கேட்டிருக்கிறார். ஜமீன் கந்தர்வகோட்டை பாளையத்திற்கும்
கிழக்குப் புறத்தில் பள்ளமான இடத்தைக் காட்டி இதில் குடியேறிக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.
மக்கள் ஓரிடத்தில் சூலம் ஊன்றி கோயில் அமைத்து கோயிலைச் சுற்றி குடியேறினார்கள். அக்கோயில்
ஓடுக்கப்பட்ட மக்களால் வழிபடும் வெள்ளமுனியன் கோயில். இக்கோயிலில் குதிரைக்கென்று தனி
படையல் உண்டு.








கருத்துகள்
கருத்துரையிடுக