தமிழ்நாடு அரசின் செய்தி மக்கட்தொடர்பு துறையினரால் தமிழரசு எனும் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. 16.04.1983 நாளிட்ட தமிழரசு இதழ் வாசிக்கக் கிடைத்தது. இந்த இதழ் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு இதழாகும். இந்த இதழ் புதுக்கோட்டை சமஸ்தான காலத்திலும் அதற்குப் பிறகும் புதுக்கோட்டையில் தமிழ் வளர்த்த அமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது.
மேலைச்சிவபுரிபுதுக்கோட்டை மாவட்டத்தின் தென் எல்லையில் அமையப்பெற்ற சிற்றூர் மேலைச்சிவபுரி. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பறம்புமலையின் சாரலில் இந்த ஊர் அமைந்துள்ளது. நகரத்தார்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர். இவ்வூர் சான்றோர்கள் சிலர் கூடி தமிழ் வளர்க்கவும் தமிழ்ச்சான்றோர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் சன்மார்க்க சபை எனும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார்கள். புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் தோற்றுவித்த முதல் தமிழ்ச்சபை இதுவாகும். மேலும் இந்த சபை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தமிழ்ச்சங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
வ. பழ. சா குடும்பம்
மேலைச்சிவபுரியில் வ.பழ.சா குடும்பம் பாரம்பரியமிக்கது. இந்தக் குடும்பத்தின் மரபில் பிறந்தவர் பெருந்தகை சாமிநாதன் செட்டியார். இவரது புதல்வர்கள் அண்ணல் பழநியப்பரும், இளவல் அண்ணாமலையாரும் ஆவர். இந்தக் குடும்பத்தோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் மகிபாலன்பட்டியைச் சேர்ந்த பைந்தமிழ்ப் புலவர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்கள். மகிபாலன்பட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடிய கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர்.
மு. கதிரேசன் செட்டியாரின் தமக்கையர் மேலைச்சிவபுரியில் வாழ்க்கை பெற்றவர். கதிரேசனார் தம் தமக்கையார் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வ. பழ. சா குடும்பத்தாருடனும், மேலைச்சிவபுரி பெருமக்களுடன் மகிழ்ந்து உரையாடுவர். இவர்களின் உரையாடல் வ. பழ. சா இல்லத்தில் நடைபெறுவது வழக்கம்.
தமிழ் இலக்கியங்கள், இறைபக்தி, நாட்டு நடப்பு ஆகியவை குறித்த செய்திகள் கதிரேசனாரின் உரையாடலில் அதிகம் இடம்பெறும். பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததைச் கதிரேசனார் வ.பழ.சா குடும்பத்தாரிடம் சொல்லி உரையாடுவார். இவரது உரையாடலின் பயனாய் சாமிநாத செட்டியாரின் இளைய மகன் அண்ணாமலையார் மேலைச்சிவபுரியில் ஒரு தமிழ்ச்சபை தோற்றுவிக்க விரும்பினார். அப்போது திருநாவுக்கரசர் நாயனார் முக்தி அடைந்த திருநாள் நெருங்கி வந்தது. அத்திருநாளில் இச்செயலைத் தொடங்கினால் நலம் பயக்கும் என்று திட்டமிட்டார்.
தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ சமய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் சங்கம், `தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்று பாடிய திருநாவுக்கரசர் நாயனார் குருபூசை நாளில் துவங்குதல் பொருத்தமுடையதாக அமையும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.
சமண சமயத்திலிருந்து விலகிச் சைவ சமயம் சேர்ந்து சிவ உண்மையை அறிந்து போற்றியவர் திருநாவுக்கரசர். எனவே அவர் முக்தி பெற்ற நாளிலேயே சங்கத்தைத் தொடங்கலாம் என அண்ணாமலையாரிடம் கதிரேசனார் கூறினார். அண்ணாமலையார், கதிரேசனார் கூறியதைக்கேட்டு மகிழ்ந்தார். எனினும் `அண்ணன் பழநியப்பர் தற்பொழுது இங்கு இல்லையே கொழும்பில் உள்ளாரே ' என அவர் கவலை கொண்டார். இருப்பினும் அண்ணனிடம் மடல் வாயிலாக தகவல் தெரிவித்து குறித்த நாளில் சங்கத்தைத் தொடங்குவோம் ' என்று கதிரேசனாரிடம் அண்ணாமலையார் கூறினார்.
மேலைசிவபுரி சன்மார்க்க சபை
சித்திரைத் திங்கள் முப்பத்தோராம் நாள் (13. 5. 1909) வியாழக்கிழமை அன்று காலை மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள சுவாமிநாத விநாயருக்கு சிறப்புச் செய்து குருபூசை விழா தொடங்கப் பெற்றது. அந்நாளில் திருநாவுக்கரசர் நாயனார் புராணம் படிக்கப் பெற்றது. மேலும் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவர்க்கும் நல்லவிருந்து அளிக்கப்பெற்றது.
பிற்பகல் முன்று மணிக்கு சங்கத்தின் துவக்கவிழா தொடங்கியது. சோழவந்தானூரிலிருந்து விழாவிற்கு முதல் நாளே வந்திருந்த அரசஞ் சண்முகனார் விழாத் தலைமை ஏற்றார். வித்யாபாநு இதழாசியர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர், கீழச்சிவப்பட்டி வித்துவான் பீமகவி, தேவகோட்டை வேல்சாமி கவிராயர், வேந்தன்பட்டி புலவர் வாத்தியார் என்ற சைவப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துக்கள் கூறினர்.
துவக்கச் சொற்பொழிவுகள்
தலைமை வகித்த அரசஞ்சண்முகனாரவர்கள் `பக்தி' , `தமிழின் பெருமை' ஆகியவை பற்றியும், மு.கதிரேசன் செட்டியாரவர்கள் `ஈசுவர தரிசனம்' என்பது குறித்தும், நெடுவை இராமசாமி ஐயங்காரவர்கள் `அடியார் பெருமை' பற்றியும், யாழ்ப்பாணம் சு. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் `சயமக் குரவர்' பற்றியும் அந்நாளில் சொற்பொழிவாற்றினார்கள். சங்கத்தின் பெயர் சங்கத்தின் துவக்கவிழாவில் கூடியிருந்த அவையோர் கருத்துப்படி இச்சங்கத்திற்கு, `மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை' எனப் பெயரிடப்பெற்றது.
சன்மார்க்கம் என்பதை உண்மை நெறி எனத் தமிழில் மொழிபெயர்க்கலாம். சமய உண்மைகளையும், ஒழுக்க வகைகளையும் இச்சபை அறிவுறுத்துகிறமையால் இதற்கு சன்மார்க்க சபை என்று அறிஞர்கள் பெயர்சூட்டினார்கள்.
சங்கத்தின் பெயரோடு அதன் துவக்க நாளையும் நினைவுகூறும் பாடல்கள் பின்வருமாறு.
1. செய்ய சவுமியத்திற் சித்தரைமுப் பானொன்றிற்
றுய்யகுரு வார சுபதினமே வையத்திற்
சேமமுறு மேலைச்சிவபுரியிற் சன்மார்க்க
நாம அவை நிறுவு நாள்
2. ஆயிரத்துத் தொள்ள யிரத்தொன்ப தாங்கிலவாண்
டேயுமதி மேபதின்முன் றேய்தினமேயாயறிஞர்
சன்மார்க்க மென்னுஞ் சபை நிறுவிச் வைசமெனு
நன்மார்க்க மோர்ந்ததிரு நாள்.
இப்பாடல்களில் முதல் பாடலில் சன்மார்க்க சபை தோன்றிய தமிழ் ஆண்டு குறிக்கப் பெறுகிறது. சௌமிய ஆண்டு, சித்திரைத்திங்கள் முப்பத்தொன்றாம் நாளில் குருவாரமாகிய வியாழக்கிழமை அன்று சன்மார்க்க சவை தோற்றம் பெற்றது என்ற செய்தி முதல் பாடலில் காட்டப் பெற்றுள்ளது. சமய குருமார்களுக்கான நினைவைக் கொண்டாடும் இச்சன்மார்க்க சபை வியாழக் கிழமையான குரு வார நாளில் துவங்கப் பெற்றிருப்பது மிக்கப் பொருத்தமுடையதாக உள்ளது.
அதற்கு இணையான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பதாம் ஆங்கில ஆண்டில் மே மாதம் பதிமுன்றில் சன்மார்க்க சபை என்ற பெயருடைய சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது என்ற செய்தி இரண்டாம் பாடலில் அமைக்கப் பெற்றுள்ளது.
உ.வே. சாமிநாதர் பாராட்டு
" சன்மார்க்க சபையின் பெயர் சிறந்தது. பல மதத்தார்க்கும் ஒப்ப அமைந்துள்ளது. சன்மார்க்கர் கூட்டம் என்பது நன்கு விளங்குகின்றது.'' என்று உ. வே. சாமிநாதையர் அவர்கள் சன்மார்க்க சபைப் பெயரமைவினைப் பாராட்டியுள்ளார்.
முதல் தலைவர்
சன்மார்க்க சபையின் முதல் தலைவராக அண்ணல் பழநியப்பர் விளங்கினார். மகிபாலன்பட்டி மு. கதிரேசனார், சோழவந்தானூர் அரசஞ்சண்முகனார், மு. சா. கந்தசாமிக் கவிராயர், இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், உ. வே. சாமிநாதஐயர் போன்ற அறிஞர்களோடு இவர் நட்பு கொண்டு விளங்கினார். சன்மார்க்க சபைக்குத் தனிக்கட்டிடம் அமைப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து வாங்கி, அவ்விடத்தில் ஏற்றம் மிக்க ஓர் கட்டிடத்தை கட்டி முடித்தார். அக்கட்டிடத் திறப்புவிழாவை உயரிய சொற்பொழிவுகளோடு நிகழ்த்தினார். இவ்விழா நகரத்தார் பகுதியில் மேலும் பல கலைக்கூடங்கள் தோன்றக் காரணமாக இருந்தது.
இரண்டாம் தலைவர்
பழநியப்பரின் மறைவுக்குப் பிறகு சன்மார்க்க சபையின் தலைமை பொறுப்பை அண்ணாமலையார் ஏற்றார்.
சன்மார்க்க சபையின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் பண்டிதமணி மு. கதிரேசனார் செய்தார். சொற்பொழிவாற்றுவதற்கு உரியவரைத் தேர்ந்து அழைப்பது, சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்குத் தக்க ஆசிரியர்களை அமைப்பது போன்ற செயல்களைத் இவர் தொடர்ந்து செய்து வந்தார்.
வட மொழி அறிவைப் பண்டிதமணியார் பெற்றிருந்தமையால் அம்மொழியிலுள்ள சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்புப் பணியைத் திறம்படச் செய்தார். அவற்றை சன்மார்க்க சபையின் வழியாக வெளியிட்டார். இது குறித்த செய்திகள் இவ்வாய்வின் உட்பிரிவுகளாக விளங்கும் மொழிபெயர்ப்புப் பணி, நூல் வெளியீடு ஆகியபகுதிகளில் விளக்கப் பெற்றுள்ளன.
இவர் சன்மார்க்க சபையின் சொற்பொழிவுக் கூட்டங்களில் அறிஞர்களை அழைத்து, பேசச் செய்ததோடு தாமும் பங்கு பெற்று பல அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இவரது சொற்பொழிவினைக் கேட்டு பயன்பெற்றோர் பலர். இந்தச் சன்மார்க்க சபைக்கு வராத புலவர்களே இல்லை.
மூன்றாம் தலைவர்
சன்மார்க்க சபையின் மூன்றாம் தலைவரானார் சாமிநாதர் ஆவார். இவர் அண்ணல் பழநியப்பரின் மூத்தப் புதல்வர். இவர் முப்பத்தெட்டு ஆண்டுகள் சபைத் தலைவராக இருந்து அரும்பணி புரிந்தார்.
இவர் காலத்தில் சன்மாரக்க சபை வெள்ளிவிழா, பொன்விழா ஆகிய இருபெரும் விழாக்களைக் கண்டது. சன்மாரக்க சயைன் முன்மண்டபம் எழுப்பப்பெற்றது. இந்தச் சபையின் முக்கிய அங்கமாக தோற்றுவித்த கணேசர் செந்தமிழ்க் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழக இணைவிலிருந்து விடுதல் பெற்று தன்னாட்சி தனித்தமிழ்க்கல்லூரியாக இயங்கத் தொடங்கியது.
பொன்விழா ஆண்டு
சன்மார்க்க சபையின் பொன்விழா 3. 10. 1959 ஆம் நாளில் கொண்டாடப் பெற்றது. பொன்விழாவை அன்றைய தமிழ்நாடு மாநில முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தொடங்கி வைத்தார். டாக்டர் ராசா. சர். அ. முத்தையா செட்டியாரவர்கள் தலைமையேற்றார். இவ்விழாவைத் தொடங்கி வைத்த காமராசர், `சன்மார்க்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் மக்கள் வளமாக இருப்பார்கள். அப்போது அரசங்கம் கூடத் தேவையிராது. அதுவே அமரவாழ்வு என்று கூறுகிறார்கள். அதையே நானும் விரும்புகிறேன்' என்று கூறினார்.
சன்மார்க்க சபையின் முதல் தலைவர் அண்ணல் வ. பழ. சா பழநியப்பச் செட்டியாரவர்கள், இரண்டாம் தலைவர் இளவல் வ. பழ. சா. அண்ணாமலைச் செட்டியாரவர்கள் ஆகியோரின் உருவப்படங்களை முறையே டாக்டர் ராசா. சர். முத்தையா செட்டியாரவர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி. எம் நாராயண சாமிப் பிள்ளையவர்களும் இவ்விழாவில் திறந்து வைத்து அவர்களின் புகழை நிலைப் படுத்தினர்.
சபைத் தொடக்கவிழா தலைவர் அரசஞ் சண்முகனாரின் உருவப்படத்தை பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், மு. ரா . கந்தசாமிக் கவிராயர் உருவப்படத்தை லெ. ப. கரு. இராமநாதன் செட்டியாரவர்களும் திறந்து வைத்தனர்.
டாக்டர் வ.சுப. மாணிக்கம்
இந்தச் சபையில் தோன்றிய மற்றொரு பெரும் அறிஞர் டாக்டர். வ. சுப. மாணிக்கம் ஆவார். இவர் பண்டிதமணி கதிரேச செட்டியாரின் மாணவனார். இவர் இச்சபையின் தலைவராக பொறுப்பு வகிக்கையில் வெளிநாடு சென்று நிதி திரட்டி பெருந்தொகையை சன்மார்க்கசபையின் வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினர். இத்தொகையால் சன்மார்க்க சபை உரமும், உயர்வும் பெற்றது.
சன்மார்க்க சபையின் முன்மண்டபம் விரிவுசெய்யப்பெற்று, புதுப்பிக்கப்பெற்றமையும் சன்மார்க்க சபை வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்ச்சியாகும். இம்மண்டபம் 25. 11. 1964 ஆம் நாளில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. சொக்கலிங்கம் அவர்களால் திறக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக்கென நான்கு வகுப்பறைகள் கொண்ட தொகுப்புக் கட்டம் கட்டப்பெற்று அதன் திறப்புவிழா ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் நடைபெற்றது.
சன்மார்க்க சபையின் வைரவிழா 8. 2. 1970 ஆம் நாளில் நிகழ்வுற்றது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் காலை நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ. து சுந்தரவடிவேலு அவர்கள் தலைமை தாங்கினர்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இருபது, இருபத்தொன்று ஆகிய நாள்களில் முத்துவிழா நிகழ்வுற்றது. இவ்விழாவிற்கு குன்றக்குடி ஆதின பொன்னம்பல அடிகளார் தலைமை ஏற்றார்.
முத்துவிழா நினைவுக் கட்டிடத்தை அன்றைய தமிழ்ப்பாண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகன் திறந்து வைத்தார். செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் திருவுருவப்படத்தைக் குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்தார். இவ்விழாவிலும் பல்வேறு அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.
2008 ஆம் ஆண்டு சன்மார்க்க சபை நூற்றாண்டு கண்டதை முன்னிட்டு அந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சன்மார்க்க சபை தோன்றிய காலத்திலும், அதன் பின்னரும் கல்வி, சமய, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக பல சங்கங்கள் தோன்றின. ஆயினும் அவை காலவெள்ளத்தில் நிலைபெறாது போயின. சன்மார்க்க சபை நீடித்து, நூற்றாண்டைக் காண்பதற்கு அதன் சமுதாய நோக்க மிக்க செயல்பாடுகளே காரணமாகும்.
எனது உரை
இந்த வரலாற்று சிறப்புமிக்க சன்மார்க்க சபையில் நானும் உரையாற்றியிருக்கிறேன் என்பதை நினைக்கையில் பெருமைகொள்ள முடிகிறது. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக முனைவர் திரு. தெ. திருஞானமூர்த்தி அவர்கள் பணியாற்றுகையில் என்னை அழைத்து ஜனவரி 30, 2018 அன்று இந்த சபையில் "இன்றைய சிறுகதைகள்" எனும் தலைப்பில் உரையாற்ற வைத்தார்.
தமிழுக்குத் தொண்டாற்ற தொடங்கப்படும் எத்தனையோ தமிழ் அமைப்புகள் காலத்தில் கரைந்துபோக புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் அமைப்பு இன்றும் தழைத்தோங்கி இருப்பது சிறப்புக்குரியது. வணக்கத்திற்குரியது.
குறிப்பு -
இக்கட்டுரையின் பெரும்பகுதி ஆய்வாளர் சி. குறிஞ்சி எழுதிய மேலைசிவபுரி சன்மார்க்க சபையும் பணிகளும் - பாரதிதாசன் பல்கலைக்கழக எம் ஃபில் ஆய்வேட்டிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
மேலும் நன்றி ஏப்ரல், 1983 தமிழரசு இதழ்






கருத்துகள்
கருத்துரையிடுக