முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததா இணைக்கப்பட்டதா?

தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகிறது. தமிழகத்திலேயே சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த புதுக்கோட்டை பிரதேசம் மன்னர் ஆட்சியில் இருந்தது. இந்திய சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காலம் சென்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் ஒருங்கிணைந்தது. புதுக்கோட்டை சமஸ்தானமும் முதன்முதலில் ஒருங்கிணைந்த பெருமையைப் பெற்றது. பிறகு திருச்சி மாவட்டத்துடன் இணைத்து நிர்வாகம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மக்களின் நெடுநாளைய விருப்பம் இன்று நனவாகிறது. தனி மாவட்ட ஆரம்பத்தை தமிழக முதல்வர் உயர்திரு கருணாநிதி துவக்கும் விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு மராமத்து இலாக அமைச்சர் சாதிக் பாஷா தலைமை வகிக்கிறார். அனைவரையும் மாவட்ட கலெக்டர் ராமதாஸ் வரவேற்பார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் விழா மலரை வெளியிடுகிறார். திருச்சி மாவட்ட பகுதியை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் தஞ்சை பகுதியை மண்ணை நாராயணசாமியும் ஒப்படைப்பு செய்கின்றனர்.

புதுக்கோட்டை தனி மாவட்டமாவதையொட்டி சகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அலங்கார வண்டிகள் ஊர்வலம் பிரம்மாண்ட அளவில் மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. பொதுநலக கழகங்கள் அமைச்சர்களுக்கு வரவேற்பு ஒன்றை மாலை 4 மணிக்கு நடத்த உள்ளது. எல்லா அரசு அலுவலகங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மாலையில் அண்ணா கலையரங்கில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எல்லா அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசுவார்கள். புதிதாக அமைய உள்ள கலெக்டர் அலுவலகம் முன்னாள் அரசு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்படும். இந்த கட்டிடத்தை அரசு குடும்பத்தினரிடமிருந்து பல லட்சம் கொடுத்து தமிழக அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமலர், திருச்சிப் பதிப்பு ஜனவரி 19, 1974 நாளிட்ட பத்திரிகை செய்தி இது. புதுக்கோட்டை தனி மாவட்டமாக ஜனவரி 14, 1974 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டாலும் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள் ஜனவரி19, 1974.




தமிழ்நாட்டின் பதினைந்தாவது மாவட்டமாக புதுக்கோட்டை உதயமானது. இதற்கும் முன்பு புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தனி வருவாய் கோட்டமாக இருந்தது. மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளன்று தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கீரமங்கலம் ஆகிய பகுதிகளும் திருச்சிராப்பள்ளியிலிருந்து விராலிமலையும் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டன.

பறைக் கச்சேரிகள்

புதுக்கோட்டை சமஸ்தான ஆட்சியின் போது புதுக்கோட்டை நகரில் சங்கீத மழையுடன் இரவுக் காவல் பணி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இரவில் குறிப்பிட்ட நேரங்களில் நகரின் நான்கு முக்கிய வீதிகளின் வழியாக நான்கு முறை விதவிதமான இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு காவல் பணிக்குழு ரோந்து சுற்றி வருவது வழக்கம். முதல் சுற்று நாதஸ்வரம், ஒத்துதாளம்,தவில் ஆகிய வாத்தியங்களுடன் வரும். இது ‘மேல்பறை’ எனப்பட்டது. இரண்டாவது சுற்றில் மிருதங்கம், தாளம் ஆகியவற்றுடன் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவார்கள். இது ‘கரிப்பறை’ எனப்பட்டது. மூன்றாவது சுற்றில் மணியோசையுடன் கூடிய கருவிகளை இசைத்துக்கொண்டு வருவார்கள். இது ‘மணிப்பறை’ எனப்பட்டது. நான்காவது சுற்றில் தப்பு, தாரை போன்ற மிகப்பெரிய பறைகளை இசைத்துக்கொண்டு நகரைச் சுற்றி வருவார்கள். இது ‘தப்புப்பறை’ எனப்பட்டது. இந்த அணிவகுப்பைக் கொண்டு அன்றைய நகரவாசிகள் நேரத்தையும் காலத்தையும் கணித்துக்கொண்டார்கள்.

புதுக்கோட்டை சமஸ்தானம் ஒன்றுபட்ட இந்திய யூனியனுடன் இணைந்த பிறகு இதன்பிறகு இந்த கச்சேரி அணிவகுப்புகள் நிறுத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டமாக உதயமான நாளன்று, புதுக்கோட்டைக்குரிய சிறப்பு கச்சேரி அணிவகுப்பு அலங்கார ஊர்த்திகளுக்கும் முன்பு நடத்தப்பட்டது.

 

புதுக்கோட்டை - நாடாளுமன்ற விவாதம்

திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்த புதுக்கோட்டை தனி மாவட்டமானதற்கும் பின்னே சுவாராசியான ஒரு சம்பவம் உண்டு. இன்றைக்குள்ள புதுக்கோட்டைக்கு நேரெதிர் நிலையில் புதுக்கோட்டை இருந்தது. இன்று புதுக்கோட்டை மாவட்டமாக இருக்கிறது, ஆனால் நாடாளுமன்றத் தொகுதியாக இல்லை. அன்றைக்குப் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டமாக இல்லை. ஆனால் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. 1962 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகச் சென்றார் தோழர் உமாநாத். இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் பஞ்சாலை முதலாளியை விடவும் கூடுதலாக முப்பதாயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகளான தேர்தலில் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை விட பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி கண்டார்.

அன்றைய இந்திய யூனியன் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளை முன்னேற்ற சிறப்பு திட்டங்களை அமுல்படுத்த தனி கமிட்டி அமைத்தார். இந்த கமிட்டி உத்திரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகள் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதியென்று கண்டறிந்து அறிக்கைக் கொடுத்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளானது. இந்த விவாதத்தின் கீழ் பேசிய உமாநாத் புதுக்கோட்டையை மிகவும் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். பிரதமர் நேரு அவர்கள் இதற்கு மவுனம் சாதித்தார். “ புதுக்கோட்டை விசயத்தில் நேரு ஏன் மவுனம் சாதிக்கிறார்? நேரு பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை இல்லையென்றா? புதுக்கோட்டை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் செய்த பிழை என்ன? ” என்று பேசி புதுக்கோட்டையை விவாதப் பொருளாக்கினார்.



இதற்குப் பதில் சொன்ன பிரதமர் நேரு அவர்கள், “ புதுக்கோட்டை நன்கு வளர்ச்சியடைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு கோட்டம். ஒரு பகுதி வளர்ச்சியடைந்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதியாக இருக்கையில் அந்த பகுதியை பின்தங்கிய பகுதியாக அறிவிக்க முடியாது” என்றார். பிரதமரின் இந்தப் பதிலுக்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டையைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தலையெடுத்தது.

புதுக்கோட்டை தனி மாவட்டம் பேசும் பொருளானது. தொடக்கத்தில் இக்கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தன. நாட்கள் செல்ல செல்ல புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத் தேவையை உணர்ந்துக்கொண்ட அன்றைய தமிழ்நாடு அரசு புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்தது.

புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைந்ததா, இணைக்கப்பட்டதா?

புதுக்கோட்டை இந்திய யூனியனுடன் இணைந்த முறை குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. இந்திய உள்நாட்டு அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அழைப்பின்பேரில் நேரில் சென்று பார்த்தார் ராஜகோபால தொண்டைமான். அன்றைய சமஸ்தானத்தின் கருவூல இருப்பு 35 இலட்சம் ரூபாயாக இருந்தது.

மன்னரைச் சந்தித்த உள்நாட்டு அமைச்சர், “ மன்னரே, உங்களுக்கு இந்திய அரசு என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்” எனக் கேட்டார். அதற்கு மன்னர்,  “நான் எம் மக்களையும் எனது சமஸ்தானத்தையும் இந்திய அரசிடம் ஒப்படைக்கிறேன். இதற்கு கைமாறாக வேறு எதையும் இந்திய அரசிடம் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

சர்தார் வல்லபாய்படேல் அவரது உதவியாளர் கருணாகர மேனன் என்பவரை அழைத்து, மன்னரிடம் சமஸ்தான ஒப்படை கடிதத்தை எழுதி வாங்குமாறு உத்தரவிட்டார். அன்று இரவு, ‘புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசிடம் இணைந்தது”

 “சமஸ்தானம் முழுவதையும் எழுதிக் கொடுத்துள்ளீரே. திரும்பிச் செல்லும்போது அமர்வதற்கு இடம் வேண்டாமா?” எனக் கேட்டார். அதற்கு மன்னர், “ திருச்சி அரண்மனை ஒன்று போதும்” எனப் பதிலளித்துள்ளார்.  இதை மறுத்த படேல், “புதுக்கோட்டை புதிய அரண்மனை, கொடைக்கானல் பங்களா, நிஜாம் காலனி பங்களா, சத்தியமூர்த்தி நகர் பங்களா, சிவஞானம் தோப்பு ஆகியவற்றை Instrument of Merger என்கிற தஸ்தாவேஜிக் எழுதிக் கொடுத்துள்ளார் என்பதாக ‘புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சரிதம்’ கூறுகிறது.

சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர் வருகையும் கிளர்ச்சியும்

புதுக்கோட்டை இந்தியாவுடன் இணையவில்லை, இணைக்கப்பட்டது என்பதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உண்டு. 1946 ஆம் ஆண்டு மன்னர் அழைப்பின் பேரில் சர்.சி.பி.ராமஸ்சுவாமி அய்யர் அவர்கள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம் இராமசாமி ஐயர் என அழைக்கப்படும் இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.

அவர் புதுக்கோட்டைக்கு அவசரமாக அழைத்துவர ஒரு காரணமிருந்தது. புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகம் விதித்த வரி உயர்வை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள் புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தன. போராட்ட மக்கள் மன்னர், மன்னராட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னே அக்காலக்கட்டத்தில் கட்சிக்கிளை கட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னும் பிற அமைப்புகளும் இருந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பர் 26 அன்று இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் புதுக்கோட்டையில் கிளைக்கட்டியது 1946 ஆம் ஆண்டுதான். இக்கட்சி விவசாயிகள், தொழிலாளிகள், நகர வணிகர்கள், மாணவர்கள் மத்தியில் கிளைகள் கட்டி வந்தன. அதிலொரு கிளையாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களைக் கொண்டு கட்டிய மாணவர் மன்றமாக இருந்தது. மன்னராட்சிக்கு எதிராக மன்னர் கல்லூரியில் படித்த மாணவர்களும் போராடி வந்தார்கள். மாணவர்களையும் மக்களையும் அமைதிக்குக் கொண்டு வரவேண்டிய தேவை சமஸ்தான நிர்வாகத்திற்கு எழுந்தது. ஆகவே மன்னராட்சியின் அவசியம் தேவை குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்தது. அதற்காக சமஸ்தானம் திவான் சி.பி.ராமஸ்சுவாமி அய்யரை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தது.

அவரது வருகையால் புதுக்கோட்டை பெரும் கிளர்ச்சிக்கு உள்ளானது. காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னராட்சிக்கு எதிராக புன்னப்புரா வயலூரில் மக்கள் போராடி வந்தார்கள். அப்போராட்டத்தை ஒடுக்க திவான் சி.பி.ராமஸ்சுவாமி ஐயர் எடுத்த முயற்சி ரத்தக்களரியில் முடிந்தது. இந்தத் துர்சம்பவத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் கண்டனப் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில்தான் அவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வந்தார். மாணவர் மன்றம், அவரது வருகையை எதிர்த்து “புன்னப்புரா வயலூரில் ரத்தக் களரி ஏற்படுத்திய சர்.சி.பி-யே திரும்பிப் போ” என போராடினார்கள். இதனால் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்.

மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் சமஸ்தானத்திற்குள் அவ்வபோது வெடிக்கவும் அமர்வதுமாக இருந்து வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சமஸ்தான அரசுகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வந்தன. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையை இந்திய அரசுடன் வேண்டி சர்தார் வல்லபாய் படேலுக்குக் கடிதம் எழுதினார்கள். இந்தக் கடிதத்தின் பேரில் படேல், சமஸ்தான மன்னரிடம் விளக்கம் கேட்டார். மக்களின் ஆதரவு மன்னராட்சிக்கு இருக்கிறது என்றும் இதை சட்டசபையைக் கூட்டி உறுதிபடுத்துவதாகவும் சொன்னார். அவ்வாறு சட்டசபை கூட்டப்பட்டது. மக்களின் போராட்டத்தால் சட்டச் சபை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் சட்டசபை உறுப்பினர்களிடம் சமஸ்தான ஆதரவு கடிதம் பெற்று டெல்லி சென்ற மன்னர் உள்நாட்டு அமைச்சரை நேரில்  சந்தித்தார்.

மன்னர் மன்னராட்சிக்கான ஆதரவு கடிதங்களை உள்நாட்டு அமைச்சர் படேலிடம் கொடுக்க, படேல் மன்னராட்சிக்கு எதிராக புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த கடிதங்களை மன்னரிடம் கொடுத்தார். இதனால் மன்னர் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

உள்நாட்டு அமைச்சரின் உத்தரவால் டெல்லி ஹைதராபாத் விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த மன்னர் அவருடன் சென்றிருந்த சமஸ்தான பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசித்து புதுக்கோட்டையை இந்திய யூனியனுடன் இணைக்க சம்மதம் தெரிவித்தார், என்கிறது புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் வரலாற்றுக் குறிப்புகள்.

போராட்டக்காரர்கள் நாடு கடத்தப்படல்

முத்துச்சாமி வல்லத்தரசு அவர்கள் மன்னராட்சிக்கு விதிக்கும் வரி விதிப்புகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். அதற்காக அவர் பல முறை புதுக்கோட்டையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்படுதல் என்பது புதுக்கோட்டை சமஸ்தானம் எல்லைக்கும் வெளியே தென்எல்லை தேவக்கோட்டை அல்லது வடஎல்லை கந்தர்வகோட்டைக்கு  வெளியேற்றுவது வழக்கமாக இருந்தது. அப்படியாக அவர் 1939 ஆம் ஆண்டு கந்தர்வகோட்டைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது நாடு கடத்தலுக்கு எதிராக, 23.11.1939 நாளிட்ட புதுவை முரசு இதழ் குத்தூசி எழுதிய ஒரு கட்டுரை, பாரதிதாசன் எழுதிய பாடலையும் வெளியிட்டு வல்லத்தரசுக்கு ஆதரவு தெரிவித்தது.



புதுக்கோட்டைத் தோழர் முத்துசாமி வல்லத்தரசு, பி.ஏ, பி.எல், எம்.எல்.சி அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட கலவர வழக்கில் சிறைபிடித்தியிருந்தார்கள். இப்போது சிறையினின்று வெளியேற்றி கந்தரவகோட்டைக்கும் பக்கத்தில் கொண்டு வந்து விட்டுப் போனதாக செய்தி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து இனி அவர் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் இருக்கக் கூடாது என கருத்து போலும்!

இதை தான் அங்குள்ள பார்ப்பனர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்தார்கள். ஏன்? புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தோழர் முத்துச்சாமி வல்லரசு அவர்கள் சமஸ்தான பிரல சமூகத்தைச் சார்ந்தவர். சமஸ்தான ஆதரவிலேயே படித்து சமஸ்தானத்தாலும் பொதுமக்களாலும் பாராட்டத்தக்கவராக பணியாற்றி வந்தவர். சட்டசபையிலும் பிற ஸ்தாபனங்களிலும் அங்கத்தினராகவும் வழக்கறிஞராகவும் இருந்து வந்தவர். மிக்க திடமும் தினமும் இளமையும் கொண்டு பகுத்தறிந்து பல நன்மைகள் செய்த பாராட்டத்தக்க இளைஞராஜார். சீர்திருத்தத்திலும் தாழ்த்தப்பட்டார் துயர் போக்குவதிலும் பார்ப்பனரில்லாத மாணவர் கல்வி முன்னேற்றத்திலும் மிக்க ஆர்வம் உடையவர். இத்தகைய இளைஞரை வல்லத்தரசு ஒடுக்கி மறைத்து விட வேண்டும் என்ற நீண்ட நாள் பார்ப்பன ஆசையைப் புதுக்கோட்டை சமஸ்தான பார்ப்பன ஆட்சி நிறைவேற்றி விட்டது.

 எந்த சமஸ்தானமும் பார்ப்பன வலையில் சிக்கி பார்ப்பன அல்லாத பெருங்குடி மக்களுக்குக் கேடு விளைவித்து வருவதை நாம் முற்றிலும் வெறுக்கிறோம். குறிப்பாக நிரபராதியும் நீதியாளருமான நமது தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்களை நாடு கடத்தப்பட்ட செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்பாராத தொல்லைக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சமஸ்தான உத்தரவிற்காகப் பலவகை கஷ்டமேற்ற வல்லத்தரசின் திடத்தையும் சகிப்புத்தன்மையும் பாராட்டுகிறோம்.



மன்னராட்சிக்கு எதிராக பாடிய பாரதிதாசன்

அதே புதுவை முரசு இதழில் அ.முத்துச்சாமி வல்லத்தரசு முன்னெடுத்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு கடத்திய நிகழ்வை கண்டித்தும் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதை எழுதினார். கவிதையின் தலைப்பு தோழர் வல்லத்தரசு பாட்டு.

கேளாயோ 'பார்ப்பனியம்' என்னும் குன்றே!

கீர்த்தியுள்ள புதுக்கோட்டை உனது கோட்டை

ஆளுகின்ற மக்களெல்லாம் உனது மக்கள்

அறமும் நீ! சத்தியம் நீ! தெய்வீகமும் நீ!

தோளுயர்ந்த வீரரெல்லாம் அறிஞரெல்லாம்

துணையுனக்காய் மீசைதனை முருக்குகின்றார்

நாளன்று;மாசமன்று; வருடமென்று;

நானூறு கோடியுகம் வயது உனக்கு!

வானத்தை வில்லாய் வளைப்பாய் இங்கே

மணலை யெல்லாம் கயிறாகத் திரிப்பாய்! ஆனால்

மானத்தன்,இளவீரன்,

முத்துச்சாமி வல்லதரசன் பகுத்தறிவைக் கச்சை கட்டி

ஆனசுய மரியாதைக் கூர்வாள் தன்னை அரைக்கசைத்து

நின்றதனைக்கண்ட அன்றே!  

'ஏனப்பா புதுக்கோட்டைப் போர்க்களத்தில் இறங்கப்பா' என்று நீ சொல்லவில்லை

மகத்வமுறு பார்ப்பனிய மலையே!

எங்கள் வல்லத்தரசன் எதிர்நின்று வாதம் செய்து

சகத்தினிலே உன் புகழை நிலைநாட்டாமல்

சர்க்காரின் காலடியை நக்கிப்

பகுத்தறிவன்,இளஞ்சிங்கன், உனைத் தொலைத்துப்

பழி தீர்க்கும் ஆயத்தன், குன்றத் தோளன்,

நகும்படிக்கும் வித்தாய்! பின்பு

நாடு கடத்தச் செய்தாய் நாயே! நாயே!!



மக்கள் ஆதரவைப் படம் பிடித்த தமிழ்நாடு இதழ்.

இராஜகோபால் தொண்டைமான், இந்திய உள்நாட்டு அமைச்சருடன் கொடுத்த சட்டசபை ஆதரவு கடிதம், சர்தார் வல்லபாய் படேல் மன்னரிடம் கொடுத்த மக்கள் கடிதம் இரண்டையும் கொண்டு அன்றைய நிலவரம் என்ன, என்பதைத் தெரிந்துகொள்ள அன்றைய காலத்தின் பத்திரிகை செய்திகளை ஒரு பார்வை பார்க்க வேண்டியது அவசியம்.

புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்து இரண்டு இதழ்கள் வெளிவந்தன. ஜனமித்திரன் மற்றும் தேச ஊழியன். இவ்விரு இதழ்களும் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் தனது நாற்பதாவது வயதில் ஆஸ்திரேலியா மெல்போர்ன் பார்ஸ்டர் ஒருவரின் புதல்வி இ.எம்.பிங்க் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு புதுக்கோட்டை திரும்பிய நிகழ்வை எதிர்த்து எழுதி வந்தன. மன்னரின் இந்தத் திருமணத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் எதிர்ப்பு எழுந்தன. இதனால் மன்னர் தன் பதவியை இழக்க வேண்டியிருந்தது. இதன்பிறகு யார் மன்னர் என்கிற குழப்பம் சமஸ்தானத்தில் நிகழ்ந்தது.

இந்தக் குழப்பத்திற்குக் காரணம் ஜனமித்திரன், தேச ஊழியன் என்கிற இரு இதழ்களும்தான் என்கிற முடிவுக்கு வந்தது சமஸ்தான நிர்வாகம். இந்த இதழ்கள் புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாகம் குறித்தோ, மன்னர் தேர்வுக் குறித்தோ எழுதக் கூடாதென தடை விதித்தது. மீறி எழுதினால் இவ்விரு இதழ்களும் நாட்டில் தடை செய்யப்படும் என எச்சரித்தது.

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிக் காலத்தில் இவ்விரு இதழ்களும் தடைக்கு உள்ளாகி, பிறகு தடை விலக்கப்பட்டது, இங்கு கவனத்தில் கொள்ளதக்க ஒன்று. ஆகவே இவ்விரு இதழ்களும் புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்தோ, அடுத்த மன்னர் யார் என்பது குறித்தோ எழுத்தாமல் மௌனம் காத்தன. சென்னை மாகாணம் மற்றும் இந்திய பிரிட்டிஷார் பகுதியிலிருந்து வெளிவந்த இதழ்கள் இதுகுறித்து எழுதத் தொடங்கின. குறிப்பாக   ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியன் டெய்லி மெயில் எனும் பத்திரிகைகள் அதிகம் எழுதின. அதில் ‘தமிழ்நாடு’ எனும் பத்திரிகையின் பதிவு முக்கியமானது.

“புதுக்கோட்டை ஒரு சிறிய சமஸ்தானம். அது தனியாக ஒரு சமஸ்தானமாக இருப்பதை விட ஒரு ஜில்லாவோடு சேர்ந்து இந்திய சர்க்காரின் கீழிருப்பதே அதன் ஜனங்களுக்கு நல்லது. நினைப்பதோ, பேசுவதோ, பார்ப்பதோ குற்றமென்று சொல்லப்படும் ஒரு சமஸ்தான ஆட்சியை விட இந்திய சர்க்காரின் ஆட்சியை விரும்புகிறவர்கள் புதுக்கோட்டையில் அதிகமாய் இருப்பார்களென்பதை நாம் அறிவோம். ஆகவே, சமரசமாய் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு அரசனை நியமிக்க முடியாவிட்டால் ராஜ குடும்பத்தினருக்குப் பென்ஷன் கொடுத்துவிட்டு புதுக்கோட்டையை திருச்சி ஜில்லாவுடன் சேர்த்துவிடுவது நலமென்று நினைக்கிறோம். இப்படி நாம் சொல்வதைக் கேட்டு புதுக்கோட்டை அரசியல்வாதிகள் வருத்தமுறுவார்கள் என்பதை நாம் அறிவோம். புதுக்கோட்டையில் இப்போது ஒரு விதமான இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. பிரிட்டிஷ் எதேச்சாதிகாரமும் சமஸ்தானப் பொறுப்பின்மையும் ஒன்று சேர்ந்து உபயோகமற்ற அரசியல் அங்கு நடைபெறுகிறது. இதனால் குடிகளுக்குப் பலவித கஷ்டங்களும் ஏற்படுகின்றன. குடிகளின் கஷ்டங்களை உத்தேசித்தே இந்நாடெங்கும் பொறுப்புள்ள தன்னரசு ஏற்பட வேண்டுமென்று நாம் பாடுபட்டு வருகிறோம். ஆனால் நீடித்த நமது கொள்கைக்குள் இது ஒரு விதத்திலும் மாறுபட்டதல்ல.  இந்த சங்கடம் ஒரு புறமிருக்க வாரிசு பாத்திய விஷயமாக சாதக பாதகமாக யாவரும் பேசவும் எழுதவும் கூடாதென்று தினந்தோறும் தடை உத்தரவுகள் புதுக்கோட்டையில் பிறக்கின்றன. தங்கள் மனதிற்குப் பட்டதை வெளியில் சொல்லும் பாத்தியம் மக்களுக்கு உண்டு. அதைப் பறிமுதல் பண்ண எந்த சர்க்காருக்கும் அதிகாரமில்லை. குடிகள் வாயை அடைத்துவிட்டு தம்மூப்பாக நடக்க முயற்சித்த எந்த அரசியல் முறையும் உலகில் பிழைத்திருக்கவில்லை என்பதை புதுக்கோட்டை அதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஆகையால் 144 தடை உத்தரவுகள் போட்டது மிகவும் அக்கிரமமென்பதை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.  புதுக்கோட்டை வாரிசு விஷயமாக இந்திய சர்க்கார் சீக்கிரத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

ராஜகோபால தொண்டைமான்

1928 நவம்பர் 19 , திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் புதிய மன்னராக ராஜகோபாலத் தொண்டைமான் பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் ஜெனரல் ஏஜெண்டு லெப்டினென்ட் கர்னல் கிராஸ்த்வெயிட், சமஸ்தானத்தின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டார்.

அரசியல் களத்தில் மன்னராட்சிக்கு எதிர்முகம் கொண்டவராக தீரர் திருமயம் எஸ். சத்தியமூர்த்தி  திகழ்ந்து வந்தார்.

 மன்னராட்சிக்கு எதிராக மக்கள் ஆதரவு திரட்டியதில் இவருக்குப் பெரும்பங்குண்டு. புதுக்கோட்டை வாரிசு பாத்தியதை விசயத்தைப் பெரிதுப் படுத்தி களகம் செய்தவரும் இவரே. வெளிநாட்டு பெண்ணை மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் திருமணம் செய்துகொள்கையில் அவர் மன்னராக நீடிக்கக் கூடாதென மக்களைத் திரட்டி போராடினார். அவரை மன்னர் பதவியிலிருந்து இறக்கி, அடுத்த மன்னரை தேர்வு செய்யும்படி இந்திய பிரிட்டிஷார் அரசிடம் கேட்டுக்கொண்டார். புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷார் ஆலோசனையுடன் புதிய மன்னரைத் தேர்வு செய்கையில் அதற்காக பாராட்டவும் செய்தார். அவரது பாராட்டு புதுக்கோட்டை ஆவணக் குறிப்பில் இவ்வாறு உள்ளது.




“ ஸிட்னி மார்த்தாண்டாவின் பாத்தியதையை நிராகரிப்பது சுலபமான விஷயமல்ல. ஆனால் இந்தியா கவர்மெண்டார் புதுக்கோட்டை ஜனங்களுடைய விருப்பத்தை மதித்து நடந்து, ஹிந்து சமஸ்தானத்தின் பரம்பரையை அனுஷ்டித்திருக்கின்றனர். ஸ்ரீமான் பி.ஆர்.ராமச்சந்திர தொண்டைமானுடைய பாத்தியதையை கவர்மெண்டார் நிராகரித்த காரணம் தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் நான் அவர்களுடைய முடிவைப் பற்றி சண்டை போடப்போவதில்லை. ஸிட்னி மார்த்தாண்டாவை அங்கீகரிக்கக் கூடாதென்று எதிர்த்ததற்காகப் பலவித கஷ்டஙங்களுக்குட்படுத்தப்பட்ட நான், இப்போது சந்தோஷமடைந்துள்ள புதுக்கோட்டை ஜனங்களைப் பாராட்டுகிறேன். ராஜா மைனராகவிருக்கும் காலத்தில் அமைதியாயும் ஜனநாயக முறையிலும் ஆட்சி நடத்த ஆரம்பம் செய்யப்படுமென்று நம்புகிறேன். வாலிப ராஜாவை வணக்கத்துடன் அவர் தமது உயர்பதவியை வகிப்பதற்குத் தகுந்தபடி கல்வி போதிக்கபட்டு பயிற்சியளிக்கபபடுமென்று நம்புகிறேன்”



புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைக்கையில் மன்னரின் வயது இருபத்து ஆறு. புதுக்கோட்டை இந்திய யூனியனுடன் இணைந்தது, இணைக்கப்பட்டது என இருவேறு கருத்துகள் இருந்தாலும் புதுக்கோட்டை அரசை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல், போர்ப் பதற்றம் வரைக்கும் கொண்டு செல்லாமல்  மன்னராட்சிக்கு எதிராக நிகழும் அசாதாரண சூழல் மக்கள் கொண்டிருந்த விருப்பு, வெறுப்புகளைக் கருத்தில் கொண்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இந்திய யூனியனுடன் இணைத்த நிகழ்வால் மன்னர் இராஜகோபால தொண்டைமான் இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

                                                   

டிசம்பர் -2023 உயிர் எழுத்து இதழில் வெளியான கட்டுரை














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...