முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் முதல் பேருந்து சேவை

புதுக்கோட்டை  திருமயம் சாலையில் டிவிஎஸ் என்றொரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. புதுக்கோட்டை பொதுமக்களுக்கான பேருந்து சேவையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நிறுத்தம் இது. புதுக்கோட்டையின் முதல் பேருந்து நிறுத்தம் என்றும்கூட இதைச் சொல்லலாம். பேருந்து இன்று பெண்களுக்கான இலவச ஊர்த்தியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு விசா தேவையாக இருந்தது. மேலும் பேருந்து பயணிகளுக்குச் சிற்றுண்டி வழங்கும் முறை இருந்தது. இதெல்லாம் நடந்தது வெளிநாட்டிலல்ல, நமது புதுக்கோட்டையில்.

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேருந்து சேவை

 டி.வி.எஸ் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரு சக்கர வாகனமான டி.வி.எஸ்தான். இரு சக்கரம் வாகனத்தின் பரிணாம வளர்ச்சிதான் பேருந்து. ஆனால் டி.வி.எஸ் நிறுவனம் இரு சக்கர வாகனம் எனும் மோட்டார் பைக் தயாரிப்பு சேவையைத் தொடங்குவதற்கு முன்பு பேருந்து சேவையைத் தொடங்கியதும் சாதி, மதம் பாகுபாடற்று மக்கள் அதில் பயணம் செய்யும் வகையில் பேருந்தை இயக்கியதும் பலரும் மறந்த செய்திகளில் ஒன்றாகும்.



 திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் என அழைக்கப்பட்ட டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்கள் 1911 ஆம் ஆண்டு டி.வி.எஸ் எனும் மோட்டார் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். இந்த டி.வி.எஸ் நிறுவனம் 1912 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சிப் பகுதியில் முதல் பேருந்து சேவையைத் தொடங்கியது. தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பேருந்து சேவை இதுவாகும். இதற்கும் முன்பு பேருந்து என்பது தனிநபர் உடைமையாகவே இருந்தது. இந்தப் பேருந்து மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் முதல் வழித்தடமாக இயக்கியது. இப்பேருந்து சமஸ்தானத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பேரில் டிவிஎஸ் பேருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூரை சென்றடைந்தது.

 ஒரு நாளைக்கு ஒரு முறை சென்று திரும்புவதாக இந்த பேருந்து இயக்கப்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து நான்கு மணிக்கு இப்பேருந்து கிளம்பியிருக்கிறது. இந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்கு தனி விசா வழங்கப்பட்டதுடன் பயணிகளுக்கு ஒரு வேளை சிற்றுண்டி வழங்கப்பட்டிருக்கிறது.




பேருந்து  செல்லும் நேரத்தை வைத்து மணியைக் கணித்துக்கொள்ளுமளவிற்கு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை டி.வி.எஸ் நிறுவனம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது. ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து தங்கியிருந்திருக்கிறார். அவர் தன் உதவியாளரிடம் சொல்லி நான்கு மணிக்குத் தன்னை எழுப்பிவிடச் சொல்லி கேட்டிருக்கிறார். உதவியாளரால் நான்கு மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை. ஆனால் சங்கராச்சாரியார் நான்கு மணிக்கு எழுந்து உதவியாளரை எழுப்பிவிட்டிருக்கிறார். உதவியாளர் சங்கராச்சாரியாரை வியந்து பார்க்க, அவரோ நான்கு மணி டிவிஎஸ் பேருந்து சத்தம் கேட்டு எழுந்தாகச் சொல்லியிருக்கிறார்.

 (இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்வு, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்காலத்தில் டி.என். சேஷன் அவர்கள் தமிழ்நாட்டு போக்குவரத்து துறை இயக்குநராக பணியாற்றினார். அவர் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது பேருந்தின் இயக்கம் பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஒரு வாசகத்தைப் பிரபலப்படுத்தினார். “ எங்கள் பேருந்து நேரத்தை வைத்து உங்கள் கடிகாரத்தின் நேரத்தைச் சரிசெய்துகொள்ளுங்கள்” ஆதாரம் – டி.என்.சேஷன் வாழ்க்கை வரலாறு)

டி.வி.எஸ் முதல் பேருந்தின் போக்குவரத்து வழித்தடம் மதுரை - திருப்பத்தூர் - திருமயம் - புதுக்கோட்டை - பெருங்களூர்- கந்தர்வகோட்டை- தஞ்சாவூர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் பேருந்து நுழைகையில் திருமயம், கந்தர்வகோட்டை அருகிலுள்ள வளவம்பட்டி இரண்டு ஊர்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 

 டி.வி.எஸ் பேருந்து நிறுத்தம்

 டி.வி.எஸ் பேருந்து மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் இயங்கத் தொடங்கியதன் பிறகு மெட்ராஸ் உட்பட பல்வேறு நகரங்களுக்குப் பேருந்தை இயக்கத் தொடங்கியது. பிறகு  அப்பேருந்து செல்லும் வழித்தடங்களில் பேருந்து சர்வீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன. பிறகு இந்த இடங்கள் பேருந்து நிறுத்தங்களாக செயல்பட்டன. பிறகு இந்த இடத்தில் டயர் உள்ளிட்ட வாகன மாற்றுப் பாகங்களுக்கான விற்பனை நிலையத்தைத் தொடங்கியது. சுந்தரம் இண்டஸ்ரிஸ் பிரைவேட் லிமிடெட், புதுக்கோட்டை என்கிற பெயரில் தொடங்கப்பட்ட விற்பனை நிலையம்தான் இன்று புதுக்கோட்டை டி.விஎஸ் பேருந்து நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.


 
                      தி இந்து - விளம்பரம்

சமஸ்தானங்களின் முதல் பேருந்து சேவை

இந்தியாவிலுள்ள சமஸ்தானங்களில் முதல் பொதுமக்களுக்கான பேருந்து சேவை தொடங்கிய பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சாரும். 1914 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கும் திருவேந்திரத்திற்கும் ( திருவனந்தபுரம்) இடையில் இந்தப் பேருந்து சேவை இயங்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானம் திவான் சி.பி. இராமசாமி ஐயர் இவ்விரு நகரத்திற்கும் இடையில் சிமெண்ட் சாலை அமைத்து பேருந்து சேவையைத் தொடங்கினார். முதல் பேருந்து எட்டு இருக்கைகள் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு பேருந்து விசா வழங்கப்பட்டது.  லெட்சுமி விலாஸ் கம்பெனி இந்த பேருந்து சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குட்டி நாடார் அவர்கள்.

புதுக்கோட்டை சமஸ்தானம் தொடங்கிய பேருந்து சேவை

1929 ஆம் ஆண்டு இராமநாதபுரம் ஏ.ஆர். வைரவன் செட்டியார் புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் லிமிடெட் எனும் பெயரில் ஒரு பேருந்து சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் உரூபாய் ஐம்பதாயிரம் முதலீட்டில் பத்து பங்குதாரர்கள் தலா ஐந்தாயிரம் வீதம் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிக்குள் பல பேருந்து வழித் தடங்களை உருவாக்கி, கிராமங்களைப் புதுக்கோட்டை நகரத்துடன் இணைத்தது.



புதுக்கோட்டை -  ஆலங்குடி, புதுக்கோட்டை  - அரிமழம், புதுக்கோட்டை - ராயவரம், புதுக்கோட்டை - வெட்டன்விடுதி- கரம்பக்குடி மார்க்கங்களில் பேருந்துகளை இயக்கியது. இந்த பேருந்து இயக்கத்திற்கு எதிராக அன்றைய மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் அமைத்து பேருந்து இயக்கம் கூடாதென்றும் இதனால் மாட்டு வண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும்  போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தென்இந்தியாவின் முதல் பேருந்து

டிவிஎஸ் மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பேருந்து சேவை தொடங்குவதற்கும் முன்பு 1901 ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சொகுசு வாகனமான காரை இறங்குமதி செய்தார். தென்னிந்தியாவில் இறக்குமதியான முதல் கார் இது. இந்த காருக்கான பெட்ரோல் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக 1904 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிலிருந்து பேருந்து புதுக்கோட்டைக்கு இறக்குமதியானது. புதுக்கோட்டைக்கும் திருச்சிக்குமிடையில் இயங்க இந்தப் பேருந்துக்கு அனுமதி உரிமம் வழங்கப்பட்டது. இந்தப் பேருந்து மன்னர் குடும்பம்  உபயோகத்திற்கான தனிச்சொத்து பேருந்து ஆகும்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...