புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்த தருணம் முக்கியமானது. இந்தத் தருணத்தை, புதுக்கோட்டை ராயபுரத்தில் தொடங்கி சென்னையிலிருந்து வெளிவந்த சக்தி மாத இதழ் ( சர்வசித்து மலர் -14, பங்குனி இதழ் -11) புதுக்கோட்டையில் புது சகாப்தம் என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதியது. அந்தத் தலையங்க கட்டுரையை அப்படியே தருவதற்கும் முன்பு சக்தி இதழ் குறித்து ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.
சக்தி இதழ், நிர்வாக ஆசிரியர் - வை.கோவிந்தன். இந்த இதழினால் சக்தி வை. கோவிந்தன் என அழைக்கப்பட்டார். பிறப்பு - ராயவரம் ( திருமயம் ). 1939 ஆம் ஆண்டு சக்தி இதழ் தொடங்கப்பட்டது. இதழின் முதல் ஆசிரியர் - கவியோகி சுத்தானந்தப் பாரதியார். இவரைத் தொடர்ந்து தி.ஜ.ர., கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், ம.ரா.போ.குருசாமி, அழ.வள்ளியப்பா ஆகியவர்கள் இருந்துள்ளார்கள். பாவேந்தர் பாரதிதாசன், ‘கவிமணி‘ தேசிக விநாயகம், ‘நாமக்கல் கவிஞர்’ வெ.இராமலிங்கம், டி.கே.சி., வெ.சாமிநாதசர்மா, மு.அருணாசலம், எஸ்.வையாபுரிப் பிள்ளை உள்ளிட்டோர் ‘சக்தி’ இதழில் பங்களித்திருக்கிறார்கள்.
பாரதியாரின் கவிதைகளைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்த பெருமை இந்த இதழுக்கு உண்டு. மேலும் காந்திய சிந்தனைகளை உள்வாங்கி தொடர்ந்து படைப்புகளை வெளியிட்டு வந்தது. விளம்பரம், கட்டுரை, சிறுகதை, விமர்சனம் என படைப்புகள் வெளிவந்தன.
1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதழ் 1948 வரை இதழ் வெளிவந்தது. முதல் இதழ் சுத்தானந்த பாரதியின் கவிதையும் கடைசி இதழ் பாரதிதாசனின் புகைப்படத்தை முகப்புப் படமாகக் கொண்டு சக்தி காரியாலயம், ராயப்பேட்டை, சென்னை -14 என்கிற முகவரியிலிருந்து வெளிவந்தது.
புதுக்கோட்டையில் புது சகாப்தம்
கடந்த முந்நூறு வருஷங்களாக தனி சமஸ்தானமாக இருந்து வந்த புதுக்கோட்டை நிகழும் 1948 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதி இந்திய யூனியனுடன் சேர்ந்துவிட்டது. யாதொரு கலவரமும் தாவாவும் செய்யாமல் புதக்கோட்டை அரசர் ஸ்ரீ பிரஹதாம்பதாச ராஜ ராஜகோபால தொண்டைமான் பகதூர் தாமே டில்லிக்கு நேரில் சென்று, உதவிப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, இந்திய யூனியனில் சேருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விவேகமாக நடந்துகொண்ட புதுக்கோட்டை மன்னரை எல்லோருமே பாராட்டினார்கள்.
புதுக்கோட்டை, வெள்ளைக் காரர்களின் கிழக்கு இந்தியாக் கம்பெனி வந்ததற்குப் பிறகு ஏற்பட்ட சமஸ்தானம், கடந்த சுமார் 300 வருஷங்களாக புதுக்கோட்டைப் பிரதேசம் சமஸ்தான மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்தது, புதுக்கோட்டையின் விஸ்தீரணம் 1179 சதுர மைல்கள்; ஜனத்தொகை 4,38,848, விவசாயம் சம்பந்தப்பட்ட மட்டில் புதுக்கோட்டையைச் செழிப்பான பூமியென்று சொல்வதற்கில்லை. காரணம், போதுமான மழையும், நீர்ப்பாசன வசதியும் இல்லாததுதான். தொழில் சம்பந்தமாகவும் இங்கே யாதொரு அபிவிருத்தியும் கிடையாது. இப்போதுதான் புதுத் தொழில்களை ஆரம்பிக்க முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. சமஸ்தானத்தின் செல்வநிலைக்கேற்ப, அங்கே வரிகளும் அதிகம் கிடையாது. சமஸ்தானத்தின் பிரதான வருமானம் நிலவரியும், கலால் வரியும்தான். இந்த வரிகளைத் தவிர சமஸ்தான அரசாங்கத்திலிருந்துவேறு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும். மக்களுக்கு இந்த ஒரு பெரிய வசதியைச் செய்து கொடுத்ததுடன் சமஸ்தான சர்க்கார் தூக்குத் தண்டனை, தேவதாசி முறை முதலியவற்றையும் ஒழித்து விட்டது. பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இனாமாகக் கல்வி கற்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த வகையில், புதுக்கோட்டை சமஸ்தான சர்க்கார் பிரஜைகளுடைய அபிமானத்தையும் பெற்றிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு வெளியேறிய பின் புதுக்கோட்டை சுயேச்சைத் தனியரசாக இருந்து வருவது புதுக்கோட்டையின் நலனுக்கு உகந்ததாக இல்லாமல் போய்விட்டது. இதற்கு பல காரணங்கள் உண்டு.
பிரிட்டிஷ் சர்க்காரின் பராமரிப்பின் கீழ் இருந்தவரையிலும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குப் பாதுகாப்பு இருந்து வந்தது. பெரிய கலகங்களும் கலவரங்களும் ஏற்பட்டால் அவற்றை அடக்க பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் போய் உதவி செய்ய தயாராக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15- க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதிபத்தியம் இல்லாத போகவே புதுக்கோட்டை சுயேச்சை அரசாகிவிட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கிளம்பும் முன் கலவரங்களை அடக்கி, சமஸ்தானப் பிரஜைகளைப் பாதுகாக்க இந்திய யூனியன் உதவி செய்தாலொழிய வேறு வழியில்லை. பொறுப்பாட்சியை பெறுவதன் மூலம் பெரிய பதவிகளை அடையலாம் என்று எண்ணி, அதற்காகச் சிலர் கலவரங்களை உண்டாக்க காத்திருந்தார்கள். பலர் தங்களையே மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இந்த ஆபத்தான நிலைமையைச் சமாளிக்கப் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியன் சேருவது ஒன்றே வழியாக இருந்தது.
புதுக்கோட்டையில் வியாபார வரியோ வருமான வரியோ கிடையாது. ஆகவே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய யூனியன் வியாபாரிகள் பெயரளவிற்குப் புதுக்கோட்டையில் தங்கள் தலைமை காரியாலயம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, இந்திய யூனியனில் ஏகபோகமாக வரி கொடுக்காமல் வியாபாரம் செய்து வந்தார்கள். இந்திய சர்க்காருக்கு இந்த மார்ச் 3-ஆம் தேதிக்குப் பிறகு இந்த நஷ்டம் ஏற்படுவது நின்றுவிடும்.
புதுக்கோட்டையில் விவசாயத்துக்காக நீர்ப்பாசனம் தேவை. ஆனால் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் மேட்டூர் அணைக்கட்டிலிருந்து கால்வாய் வழியாகப் புதுக்கோட்டைக்குத் தண்ணீர் கொண்டு வர முடியாது போய்விட்டதாம். ஆனால், இப்பொழுது புதுக்கோட்டைக்கு நீர்ப்பாசனத்தைக் கொண்டு வர முயன்றால் அம்முயற்சிக்கு வெற்றி கிடைக்கவும் கூடும்.
மேற்கூறியவாறு இந்திய யூனியனுடன் சேர்ந்து விட்டதால் புதுக்கோட்டைக்குப் பல வழிகளும் லாபமே. இந்திய சர்க்காரின் மேற்பார்வையில் அந்தச் சமஸ்தானத்தின் விவசாயமும் தொழில்களும் அபிவிருத்தி அடையும் என்று எதிர்பார்க்கிறோம். புதுக்கோட்டையைத் தனி ஜில்லாவாக ஆக்க வேண்டுமென்று அங்குள்ள பலருக்கு அபிப்ராயம் இருந்து வருகிறது. இந்திய யூனியன் சர்க்கார் இதை கவனிக்கும் என்றே நம்புகிறோம். தம் ஆட்சியின் கீழ் இருந்திருந்த சமஸ்தானத்தில், இந்த புது சகாப்தத்தைத் தொடங்கி வைத்த புதுக்கோட்டை மன்னரைப் பாராட்டுகிறோம்.



கருத்துகள்
கருத்துரையிடுக