முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் முதல் மின்சார கிராமம்

       தமிழகத்தின் முதல் மின்சாரம்

1908 ஆம் ஆண்டை தமிழகத்தின் ஒளியாண்டு என்று சொல்லலாம். மின்சார விளக்குகள் தமிழ்நாட்டில் ஒளிர்ந்த ஆண்டு இது.  தமிழ்நாட்டில் முதல் மின்சார உற்பத்தி குன்னூர் அருகே காட்டேரி அருவியிலிருந்து தயாரிக்கப்பட்டது. குன்னூர் தேயிலை தொழிற்பேட்டை என்பதால் தேயிலையை அரைத்து தூளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த மின்சாரம் பெரிதும் பயன்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் தென்னிந்திய தலைநகர் சென்னைப் பட்டணத்திற்கு மின்சாரம் வந்தது இதற்குப் பிறகுதான்.  1927 ஆம் ஆண்டு  அன்றைய ஆங்கிலேய அரசால் மின்சாரத்துறை உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் கீழ் பைக்காரா நீர்மின் நிலையம் தொடங்கப்பட்டு   பிரிட்டிஷ் பொறியாளர் சர். ஜான் ஜி. ஹென்றி ஹாவர்ட் அவர்கள்  சென்னை மாநில மின்சாரத் துறையின் முதல் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநில மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைமை பொறியாளர் பத்மஸ்ரீ  வி.பி. அப்பாதுரை அவர்கள்.

புதுக்கோட்டையின் முதல் மின்சார கிராமம்

தமிழகத்தில் முதன்முதலில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட ஆண்டில் புதுக்கோட்டை தனியரசு திருமயம் தாலுகாவிற்குட்பட்ட ராமச்சந்திரபுரத்தில் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டது இந்த நிலையத்தின் ஆவணப் பதிவிலிருந்து தெரியவருகிறது. 1908 ஆம் ஆண்டு மின்நிலையம் தொடங்கி  மின்சார உற்பத்திக்கு வித்திட்டவர் கடியாப்பட்டி ( ராமச்சந்திரபுரம்) டி.எஸ்.சொக்கலிங்க செட்டியார் அவர்கள்.  ஸ்ரீ பிரமவித்யாம்பாள் எலக்ட்ரிக்  சப்ளே கார்ப்பரேசன் லிமிடெட்  (SRI BRAHMAVIDYAMBAL ELECTRIC SUPPLY CORPORATION LIMITED) எனும் நிறுவனம் 800 பங்குகளைக் கொண்டு ஒரு பங்கு ரூபாய் 500 வீதம் இந்த  நிலையத்தை நிறுவினார்.

புதுக்கோட்டை தனியரசு காலத்தில்  நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு டர்பன் எனும் விசையாழி ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. முதலில் குடும்பத்திற்காக தொடங்கப்பட்ட இந்த மின்சார நிலையம் பின்னர் விரிவடைந்த பப்ளிக் லிமிடெட்டாக மாற்றப்பட்டது. முதலில் கடியாப்பட்டி பிறகு ராயவரம் பிறகு அரிமளம் ஊர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு அரிமழத்திற்கு மின்சாரம் கிடைத்தது. ஆண்டுதோறும் இந்த நிறுவனத்தின் உரிமையைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது.  ஜூன் 30, 1935 அன்று புதுப்பித்த உரிமை பத்திரத்தில், இக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் இயக்குநராக அரிமழம் முருகப்பா செட்டியார் இருந்துள்ளார் என்றும் இந்த நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு 1908 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



புதுக்கோட்டை மன்னரின் அரண்மனை, அதன் தலைமையிடம் மின்விளக்குகளால் ஒளிர்வதற்கும் முன்பு அந்த தனியரசுக்குட்பட்ட ஒரு கிராமம் மின்வசதி பெற்றது வியப்பான செய்திகளில் ஒன்றுதான். புதுக்கோட்டை நகரம் மின்சாரத்தால் ஒளிர்ந்த ஆண்டு 1928 என புதுக்கோட்டை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் ராமச்சந்திரபுரம் எனும் கடியாப்பட்டியில் மின் விளக்குகள் ஒளிர்ந்தது 1908. அன்றைய காலத்தில் ஊன்றப்பட்ட இரும்பு மின்கம்பங்கள் இதற்கு சாட்சியாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. ராமச்சந்திரபுரம் இன்று கடியாப்பட்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது.  நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழ்ந்த இந்த ஊரில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் ராயவரம், அரிமழம் , திருமயம் பகுதிக்கு இந்த மின்கம்பங்கள் வழியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

கூடத்தைப் பாதுகாக்குமா மாவட்ட நிர்வாகம் 

நாகரிக மனித கண்டுபிடிப்புகளில் சக்கரத்திற்கு அடுத்தாக அரிய கண்டுபிடிப்பு என்பது மின்சாரம்தான். மின்சாரமில்லாமல் ஏதுமில்லை என்று சொல்லுமளவிற்கு இதன் பயன்பாடு இன்றைக்கு இருந்துவருகிறது. பொதுவாக அபூர்வ கண்டுபிடிப்புகள் நகரத்திலிருந்தே கிராமங்களுக்குச் செல்லும். ஆனால் புதுக்கோட்டை பகுதியில் மின்சாரம் கிராமப் புறத்திலிருந்து நகரத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த மின்சாரத்தைத் தயாரித்துக் கொடுத்த பிரமவித்யாம்பாள் எலக்ட்ரிக்  சப்ளே கார்ப்பரேசன் லிமிடெட்  எனும் நிலையத்தின் கட்டுமானம் வெறுங்கூடாக காட்சியளிக்கிறது. கூடாரத்தின் உள்ளேயும் வெளியேயும் முட்புதர் மண்டிப்போய் பராமரிப்பற்று   காட்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையில் நினைவுச் சின்னம்தான். வரலாற்று நினைவு சின்னங்கள் அளவிற்கு நாம் பழைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அறிவியல் குழந்தைகளையும் அவற்றின் பயன்பாட்டு சுவடுகளையும் பாதுகாப்பது அறிவியலுக்கு நாம் செய்யும் மரியாதை அல்லவா! 







இந்த வலைப்பூ செய்தி 18.11.2023 நாளிட்ட மாலை இதழ் இதழில் செய்தியாக வெளியானது
 



கருத்துகள்

  1. நல்ல கட்டுரை! சுவையான செய்தி! நீங்கள் சொல்வது போல் மின்சாரம் ஊரகப் பகுதியிலிருந்து நகரத்திற்கு வந்திருப்பதும் குன்னூருக்கு வந்த பிறகே தலைநகராம் சென்னைக்கு வந்திருப்பதும் வியப்பான வரலாற்றுத் தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...