இன்றைய புதுக்கோட்டை-தஞ்சாவூர் மாவட்டங்கள் சந்தித்துக்கொள்ளும் பகுதி ஒரு காலத்தில் முல்லை நிலமாக இருந்திருக்கிறது. முல்லை என்பது காடுகள்.
சோழர்களின் ஆட்சிக் காலத்திற்கும் முன்பு இப்பகுதிகள் கானாடு, கோனாடு என அழைக்கப்பட்டன. புறநானூறு 150 ஆவது பாடல் குறிப்பிடும் “காட்டு நாட்டோம்” என்கிற வரியும் நற்றிணை 59 ஆவது பாடல் குறிப்பிடும் “வன்புலக் காட்டு நாட்டதுவே” என்கிற வரியும் இன்றைய புதுக்கோட்டை பகுதியைக் குறிப்பிடும் வரிகளென ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காட்டு நாடு என்பதே கானாடு. இந்நிலம் பெரும் உட்பிரிவுக் கொண்டு கோனாடு ஆனது. பிறகு கானாடு என்பதன் எல்லை சுருங்கி கோனாடு பெரும் பரப்பானது. கோனாடு வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சோழவளநாடு, ஜெயசிங்ககுலவளநாடு, பாண்டிக்குலாசனி வளநாடு,…இப்படியாக. கானாடு பனங்காட்டு நாடு, செங்காட்டு நாடு ஆகின.
இன்றைய புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை பகுதிகள் கோனாடு பரப்பிற்குள் அடைபடுவதற்கும் முன்பு கானாடாக இருந்தவை என்பதை இன்றைய ஊர்ப்பெயர்களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லை ஊர்களாக புனல்குளம், முதுகுளம், காடவராயன்பட்டி, மஞ்சப்பேட்டை, மெய்க்குடிப்பட்டி, ஆனைவிழுந்தான் கேணி, புதுநகர் ஆகிய ஊர்கள் உள்ளன. இப்பெயர்கள் யாவும் முல்லை நிலத்துடன் தொடர்புடையவை.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களின் நீர்நிலைகள் பண்டைய தமிழர்கள் வெவ்வேறு பெயர்களால் அழைத்தார்கள்.
குறிஞ்சி நில நீர் நிலைகள் - சுனை, அருவி, சிற்றாறு
முல்லை நில நீர் நிலைகள்- காட்டாறு, புனற்குளம்
மருதம் நீர் நிலைகள்- ஆறு, பொய்கை, சிற்றாறு
நெய்தல் நில நீர்நிலைகள் - மணற்கேணி, உவக்குழி
பாலை நில நீர்நிலைகள் - சுவல், கிணறு.
புனற்குளம்
இன்றைக்குப் பொனக்குளம், புனக்குளம், புனல்குளம் என அழைக்கப்படும் இவ்வூர் புனற்குளம் என்கிற பண்டைய தமிழ்ச் சொல்லிருந்து திரிந்தது. புனல்குளம் என்பது முல்லை நில நீர் நிலையின் பெயர். புனல் என்பதற்குப் பரந்த நீர்ப்பரப்பு என்று பொருள். மேலும் புனல் என்பதற்கு கொல்லை என்றொரு பொருள் உண்டு. இதன்படி புனல்குளம் என்பதைக் கொல்லையும் குளமும் கொண்ட ஊர் என்று பொருள் கொள்ளலாம்.
முதுகுளம்
புனல் குளத்தைச் சுற்றி பல குளம் ஊர்கள் உண்டு. முதுகுளம், குறுங்குளம், மருங்குளம், தின்னக்குளம் என்று. இவ்வூர்களில் தொன்மையான ஊராக இருப்பது முதுகுளம். செம்மண் பூமி. எல்லா வகை வேளாண்மைக்கும் உகந்த நிலம்.
முதுகுளம் என்பது மூத்த குடிகள் குடியேறிய ஊர். அதாவது, மூதூர்குளம். மூதூர் என்றால் பழைமையான ஊர், தொன்மையான ஊர், மூத்த குடிகள் கொண்ட ஊர் என்று பொருள். குளத்தை ஆதாரமாகக் கொண்டு குடியேறியதால் அதற்கு மூதூர்குளம் என்று பெயர். இப்பெயர் மெல்ல திரிந்து மூதூர்குளம் – முதூகுளம் – முதுகுளம் என்றாகியிருக்கிறது.
முதுகுளம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. பயன்பாடு இல்லாததை முது என்கிற அடைமொழியுடன் அழைப்பது தமிழர் மரபு.
முதுபானை- பயன்பாட்டில்லாத பானை. முதுசொத்து- பயன்பாட்டில்லாத சொத்து
முதுகுளம் - பயன்பாட்டில்லாத குளம். இப்படியான குளத்தையொட்டி குடியேறிய ஊர் முதுகுளம் என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு.
புனற்குளம், முதுகுளம் இரண்டும் குளத்தை ஆதாரமாகக் கொண்ட அருகமை ஊர்கள்.
மஞ்சனத்தி
நீர் நிலைக்கும் அருகில் பயன்பாடற்ற புறம்போக்கு நிலத்தைச் சோழர்கள் ‘மஞ்சனத்தி’ என்கிற பெயரால் குறித்தார்கள். இச்சொல் குறித்த சோழர்கால கல்வெட்டுகள் உண்டு. இந்த நிலம் விவசாயத்திற்கு அவ்வளவாக உதவாத நிலம். இந்நிலத்தில் குடியேறியவர்கள் விவசாயத் தொழிற்கருவிகள் செய்யும் பட்டர்களாக இருந்தார்கள். ஆகவே இவ்வூர் மஞ்சனத்திபட்டு என்று அழைக்கப்பட்டது. பிறகு அது மெல்ல திரிந்து மஞ்சனத்திப்பட்டு, மஞ்சனப்பேட்டு, மஞ்சப்பேட்டு, மஞ்சப்பேட்டை என்றானது.
மஞ்சம்பட்டி என்றோர் ஊர் இப்பகுதியில் உண்டு. அண்டனிக்குளத்திற்கும் அருகில் இவ்வூர் இருக்கிறது. மஞ்சனத்தி நிலத்தில் உருவான சிறிய ஊர் மஞ்சனத்திப்பட்டி. பிறகு இவ்வூர் மெல்ல திரிந்து மஞ்சம்பட்டி என்றானது. மஞ்சம்பேட்டை, மஞ்சம்பட்டி இவ்விரு ஊர்களும் குளத்தையொட்டிய புறம்போக்கு நிலத்தில் அமையப் பெற்ற ஊர்கள்.
காடவரையன்
காடவராயன்பட்டி புனல்குளத்திற்கும் அருகிலுள்ள ஊர். காடுகளை அழித்து குடியேறிய நிலம். அரையன் என்றால் அரசு அதிகாரிகள் என்று பொருள்.
அதிஅரையன் - அரசுத் தலைமை,
பேரரையன் - அரையனை விட பதவியில் உயர்ந்தோர்,
பல்லவதரையன் - பல்லவ வழி வந்த அரையர்கள்
வில்லவதரையன் - சேர மன்னர்களின் அதிகாரிகள்
மீனவதரையன் - பாண்டியர்களின் அரசு அதிகாரிகள்,
ஈழதரையன் - ஈழ நாட்டு அரசு அதிகாரிகள்,
காடவரையன் - காடுகளை நிர்வகித்தவன்
வரலாற்றில் காடவராயர் என்பவர்கள் பல்லவர்கள். சோழராட்சியை நிறுவிய முதலாம் ஆதித்த கரிகாலன் தொண்டை மண்டலத்தை வெற்றி கண்டு பல்லவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தான். பல்லவ வீழ்ச்சிக்குப் பிறகு பல்லவ அதிகாரிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இவர்கள் காடுகளை அழித்து ஊர், பட்டிகளை உருவாக்கினார்கள். அப்படியாக உருவான ஊர் காடவரையன்பட்டி- காடவராயன்பட்டி. இதைத்தான் பட்டினப்பாலை “காடு கொன்று நாடாக்கி” என்று பாடுகிறது.
மெய்க்குடி - மேய்க்குடி
பழங்காலத்தில் மன்னர்கள் தங்களின் அதிக மதிப்பிலான நகைகளை ஒரு இடத்தில் மொத்தமாக வைத்து அதற்கு பாதுகாப்பிற்காக தனக்கு நம்பகமான மக்களை அந்த இடத்தில் குடி அமர்த்துவார்கள். இவ்வாறு மன்னர்கள் தங்களுக்கு மெய்யானவர்களை அதாவது நம்பகமானவர்கள் குடியமர்த்தும் பகுதிக்கு மெய்க்குடிபட்டி என்று பெயர். கந்தர்வக் கோட்டைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னர் இவ்வாறு செய்து உள்ளனர்.
இந்த ஊர் குறித்து இன்னொரு பெயர்க்காரணமும் கூறப்படுகிறது. மேய்ச்சல் கால்நடைகளுடன் குடியேறிய மக்கள் மேய்க்குடி ஆனார்கள். அவர்களால் அமையப்பெற்ற ஊர் மேய்க்குடிப்பட்டி. இவ்வூர் தற்போது மெய்க்குடிப்பட்டி என்றாகியிருக்கிறது.
ஆனைவிழுந்தான்
ஆனைவிழுந்தான் கேணி என்கிற ஊரும் காடுடன் தொடர்புடைய ஊரே. ஆனை விழுந்தான் என்பது யானைகளை பெருங்காட்டிலிருந்து விரட்டிவந்து பெரும் பள்ளத்தில் இறக்கி, அதன் சினத்தை அடக்கி, மனிதப் பயன்பாட்டிற்குப் பழக்கும் தொழிலுக்கு ஆனைவிழுந்தான் என்று பெயர். இந்தத் தொழிற்முறை பழக்கம் காட்டின் மையப்பகுதியில் நடந்தேறும். பரந்த நிலத்திற்கு காணி என்று பெயர். ஆனைவிழுந்தான் காணி என்கிற நிலப்பகுதி மெல்ல திரிந்து ஆனைவிழுந்தான்கேணி என்றாகியிருக்கிறது.
புதுக்குடி
மேய்க்குடிப்பட்டி என்கிற ஊருக்கும் அருகில் புதுநகர் என்றோர் ஊர் இருக்கிறது. ஒரு காலத்தில் இவ்வூர் புதுக்குடி என்று அழைக்கப்பட்டது. மேய்க்குடி – புதுக்குடி. புதுக்கோட்டை மாவட்டமாக அறிவிக்கப்படாததற்கும் முன்பு இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராக இருந்தது. இவ்வூருக்கு மேனாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தண்ணீர்த்தொட்டி திறக்க வந்தார். அன்றைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. டி.கே.எஸ். பழனியப்பன் இவ்வூரைப் பார்வையிட்டு புதுக்குடி பெயரிலுள்ள ‘குடி’யை நீக்கி புதுநகர் என்று மாற்ற சம்மதம் கேட்டார். ஊரார்கள் இதற்கு இசைவு தெரிவிக்க புதுக்குடி என்கிற ஊர் புதுநகர் ஆனது. ( தகவல் – சாமியய்யா, ஓய்வு பெற்ற அதிகாரி).
காட்டாறு
இவ்வூர்கள் யாவும் முல்லை என்கிற காட்டுப் பகுதியில் அமைந்த ஊர்கள் என்பதற்கு இப்பகுதியில் ஓடும் அக்னி ஆறு அதற்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆறு குளத்தூர் கண்மாயிலிருந்து தொடங்கி, பெருங்களூர், மழையூர், வாராப்பூர், கரம்பக்குடி எனும் பெரும் ஊர்கள் வழியே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை வரலாற்று குறிப்புகள் ‘அஞ்ஞான விமோசனி ஆறு’ என்று குறிப்பிடுகிறது. அதாவது ‘அறியாமையிலிருந்து விடுவிக்கும் ஆறு’ என்பது இதன் பொருள். ஆனால், இப்பகுதி மக்கள் இந்த ஆற்றை அழைப்பது ‘காட்டாறு’ என்று.
புதுக்கோட்டை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களால் அமையப் பெற்ற ஊர். இதில் முல்லை பெரும்பகுதியாகக் கொண்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மேற்காணும் ஊர்கள் பெயராகக் கொண்டிருக்கின்றன.



கருத்துகள்
கருத்துரையிடுக