முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டையின் முதல் ஆவணமும் முதல் வரலாறும்

புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலாற்றை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?  புதுக்கோட்டை வரலாற்றில்  ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்  இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன், மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன். முன்னவர் தஞ்சாவூரில்  ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். புதுக்கோட்டைக்கு ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட முதல் ஆங்கிலேய அதிகாரி இவர். புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இவரது காலம் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809. பிறகு மார்ச்5, 1810 முதல் மார்ச் 3, 1823. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் புட்லர் பொறுப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார்.

ஜான் ப்ளாக்பர்ன் எனும் அரசியல் பிரதிநிதி.

ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர். ஆங்கிலேய அரசால் புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்ட பொலிட்டிக்கல் ஏஜெண்ட். டிசம்பர் 22, 1841 அன்று இப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். 1807 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரெசிடென்சி பதவி 1841 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்பதவி பொலிட்டிக்கல் ஏஜெண்ட் என மாற்றப்பட்டது. முதல் பொலிட்டிக்கல் ஏஜெண்ட் ஜான் ப்ளாக்பர்ன்.

சர். வில்லியம் ப்ளார்க்பர்ன் கெடுபிடியான ஆங்கிலேய அதிகாரி என்றால் ஜான் ப்ளாக்பர்ன் தொண்டைமான் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருந்தவர். இவரை மன்னர் குடும்பத்தார்கள் 'அங்கிள்' என்று உறவு முறையால் அழைத்து வந்தார்கள். இவர் இப்பதவிக்கு வருவதற்கும் முன்பு தொழில் முனைப்பில் பங்குதாரராக இருந்தார். 

கரம்பக்குடியில் இண்டிகோ எனும் சாயப்பட்டறை மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் தொடங்கப்பட்டன. இப்பட்டறையின் பங்குதாரராக ஜான் ப்ளாக்பர்ன் இருந்தார். இந்தப் பட்டறையின் சரிபாதி பங்கு மன்னர் குடும்பத்திற்குரியது. இந்தச் சாயம் திண்மமாக்கப்பட்டு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகின.

 1807 ஆம் ஆண்டு மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் இறந்துவிடுகிறார். பிப்ரவரி1, 1807 அன்று விஜய ரகுநாத ராய தொண்டைமான் அடுத்த மன்னரானார். இவர் மன்னராகத் தேர்வு செய்யப்பட வில்லியம் ப்ளாக்பர்ன் பங்கு பெரியது.

இவரது நிர்வாகக் காலத்தில்தான் புதுக்கோட்டையின் ஆட்சி, நிர்வாகம், மக்கள், மண், நீர்நிலை, வனம், மரங்கள், நிலப்பரப்பு, வணிகம், வேளாண்மை குறித்த புள்ளி விபரங்கள் ஆவணமாகத் திரட்டப்பட்டன. புதுக்கோட்டை ஆவணப் பதிவுக்கு வித்திட்டவர் இவரே. இவர் திரட்டிய புள்ளி விபரங்கள் பனை ஓலையில் பதியப்பட்டன.

புதுக்கோட்டை பெருங்காடுகள் சூழ்ந்த நாடாக இருந்தது. வில்லியம் ப்ளாக்பர்ன்  குறிப்பின் படி,  மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு பெருங்காடுகள். முக்கியமாக ஆறு பெருங்காடுகள் இருந்துள்ளன.

1.   டவுன் பாரஸ்ட்  ( பெரியவளைக்காடு – மேற்கு, சிறிய வளைக்காடு – வடக்கு)

2.   செங்கரைக்காடு

3.   புலிவயல், வயலோகம், பரம்புக்காடு

4.   நார்த்தாமலைக்காடு

5.   திருவரங்குளம் காடு

6.   வாராப்பூர் மற்றும் சக்கிலியன்கோட்டை காடு

இத்துடன் வனம், மண், நில அமைப்பு, மரங்களின் வகைகள் போன்ற தகவல்களையும் ஆவணப்படுத்தினார். இந்த ஆவணம் பிரிட்டிஷ் ஆட்சியின் உத்தரவின் பேரால் நடைபெற்றது.

வில்லியம் ப்ளாக்பர்ன்

மெட்ராஸ் மாகாணத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பத்து மாவட்டங்கள் இருந்தன. அவை நீலகிரி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ,( மதுரா), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர்.

சேலம் மாவட்டத்தை ஆட்சிச் செய்த அலெக்ஸாண்டர் ரீ முதலில் மாவட்ட நிலம், மண், மக்கள் குறித்த புள்ளி விபரங்களை முதலில் ஆவணப்படுத்தினார். இப்பதிவைத் தொடர்ந்து தென்னிந்திய ஆட்சிப் பகுதிகள் முழுவதும் ஆவணமாக்கல் பரவலாக்கப்பட்டது. இதன் கீழ்தான் வில்லியம் ப்ளாக்பர்ன் புதுக்கோட்டை விவரங்களைத் திரட்டினார். இவரது ஆட்சி நிர்வாக தலைமையிலான அதிகாரிகள் கிராமந்தோறும் கள ஆய்வுப்பணியில் இறங்கி புள்ளி விபரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தினார்கள்.

ஸ்ரீமுக வருடம் புதுக்கோட்டை சமஸ்தானம் குறித்த ஒரு குறிப்பேடு, STATSTICAL ACCOUNT OF PUDUKKOTTAI என்கிற பெயரில் பெரும் ஆவணமாக உருவானது. பனை ஓலையில் எழுதப்பட்ட இந்த ஆவணம் 1885 ஏடுகளைக் கொண்டது. இதுவே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முதல் ஆவணமாகும்.

இந்த ஆவணம் 2011 ஆம் ஆண்டு ஓலைச் சுவடியிலிருந்து அச்செடுத்து நூல் பிரதியாக அச்சிடப்பட்டது. புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்து பதவி உயர்வு மூலம் தமிழ்நாடு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் ஜெ. ராஜாமுகமது மற்றும் அன்றைய புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் திரு. செ.கோவிந்தராஜ் இருவரும் 1885 ஏடுகளையும் குறிப்பெடுத்து நூலாக்கம் செய்தார்கள். அப்பொழுது தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை ஆணையராக இருந்தவர் திரு. ஸ்ரீ.ஸ்ரீதர் இ.ஆ.ப அவர்கள்.

1813- இல் புதுக்கோட்டை ஓலைச்சுவடி புள்ளி விபரக் கணக்கு Statstical Account Of Pudukkottai In  1813 Palm Leaf Gazetteer என்பது இந்நூலின் பெயராகும். இந்நூலின் மொத்த பக்கங்கள் -  ( 698 + 14 = 712 )

இந்நூலில் சிகந்நாதப் பிள்ளை என்கிற பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் குறித்து குறிப்பிடுகையில் “ சிகந்நாதப் பிள்ளைக்கு கொடுத்த கணக்குக்கு சரியான கணக்கு நகல்” என்று எழுதப்பட்டுள்ளதைக் குறிபிட்டு முன்னுரை எழுதப்பட்டுள்ளது.  சிகந்நாத பிள்ளை அப்போதைய தொண்டைமான் ஆட்சியில் ஒரு முகவராக இருந்திருக்கலாம்.

இந்நூல் 13 சங்கதிகள் ( செய்திகள் ) அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கதி 1 – தாலுகாவின் அமைவிடம், எல்லைகள், பரப்பளவு

சங்கதி 2 – தாலுகாவின் உட்பிரிவுகள்

சங்கதி 3 – கோட்டைகள், பட்டணங்கள், ஊர்ப் பெயர்கள்

சங்கதி 4 – ஆறுகள், கால்வாய்கள்

சங்கதி 5 – கண்மாய்கள்

சங்கதி 6 – ஊத்துகள், ஊரணிகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்

சங்கதி 7 – மலைகள், கரடுகள்

சங்கதி 8 – கோவில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், வீடுகள், நெசவுத்தறிகள்

சங்கதி 9 – காடுகள், தோப்புகள், மரவகைகள்

சங்கதி 10 – பாதைகள், பெருவழிகள்

சங்கதி 11 – கனிம வளம்

சங்கதி 12 – விளை நிலங்களுக்கு வகை, தரம், விளை பொருட்கள்

சங்கதி 13 – வாணிபம், ஏற்றுமதி

இந்நூல் குறிப்பிடும் முக்கிய அம்சங்களாவன, புதுக்கோட்டை சமஸ்தானம் புதுக்கோட்டை சீமை என அழைக்கப்பட்டது. சீமை ஐந்து தாலுகாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. வடமுகம், தென்முகம், கீழ்முகம், மேல்முகம், கீழாநிலை என்பன அவை. தாலுகாவானது மாகாணம், கதப்பா கிராமம் என உட்பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. இன்று வடமுகம் என்பது குளத்தூர். மேல்முகம் என்பது பெருமாநாடு, கீழ்முகம் என்பது ஆலங்குடி, தென்முகம் என்பது புதுக்கோட்டையாக விளங்குகிறது.

வடமுகம் 13 மாகாணங்கள் 705 கிராமங்கள்; தென்முகம் 19 மாகாணங்கள், 459 கிராமங்கள்; கீழ்முகம் 20 மாகாணங்கள், 575 கிராமங்கள்; மேல்முகம் 14 மாகாணங்கள், 712 கிராமங்கள்; கீழாநிலை 9 மாகாணங்கள், 176 கிராமங்கள் என கொண்டவை.

மண் வகைகளில் கரம்பை, செவ்வல், பொட்டல், கரிசல், வெப்பல், மணல் என்கிற வகைபாடுகளைக் கொண்டுள்ளது. இதன்படி கரம்பை முதல் தளம். இம்மண்ணின் பெயரால் கரம்பைக்குடி – கரம்பக்குடி அழைக்கப்படுகிறது. இரண்டாம் தரம் செவ்வல்.

 நிலங்கள் அச்சளிவு, அனாதித்தரிசு, கல்லிடம், புஞ்சை, அச்சிக்கட்டுத் தரிசு, நத்தம் எனும் பெயராலும்  வேலி, மா, குழி எனும் அளவாலும்  குறிக்கப்பட்டன. மேலும் சமஸ்தானத்திலுள்ள மரங்கள், கால்வாய்கள், ஆறுகள், குளங்கள், தெப்பக்குளங்கள், தீர்த்தங்கள், மலைகள், குன்றுகள், கரடுகள், பாறைகள்  இத்துடன் கோயில், கோபுரம், மண்டபம், சத்திரம், அரண்மனை, ஓட்டுவீடு, கூரைவீடு, நெசவுத்தறிகளின் எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த ஓலைச்சுவடியில் வருடம் இடம்பெறவில்லை. ஸ்ரீமுக வருஷம் அற்பசி மாதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முக வருஷம் கணக்கீட்டின் படி ஆண்டு 1813 என அந்நூல் குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டை வரலாறு பத்து வரலாற்று அறிஞர்களுக்கும் மேல் எழுதப்பட்டுள்ளது. ஆயினும் புதுக்கோட்டை வரலாறு ஆவணப் பதிவுக்கு வித்திட்டவராக சர். வில்லியம் ப்ளாக்பர்ன் திகழ்கிறார்.

 

புதுக்கோட்டை வரலாறு முதலில் எழுதியவர்

புதுக்கோட்டை சமஸ்தானம் 1686 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தத் தொடக்கம் வரலாறு எழுதியவர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் தனியரசாக இயங்கியது. அதேநேரம் 1800 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சமஸ்தானத்தின்  காவல், இராணுவம், நிதி மற்றும் நிர்வாகம்  திருச்சிராப்பள்ளியை  மையமாகக் கொண்டு பிரிட்டிஷார் ஆளுகையின் கீழ் இருந்தது. புதுக்கோட்டையைப் பிரிட்டிஷார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் உள்ளடங்கிய பகுதியாக நிர்வகித்தது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வந்து செல்ல தனி நுழைவு அனுமதி சீட்டுகள் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷாரின் திருச்சி  மாவட்ட நிலவரைப்படத்தில் புதுக்கோட்டை உள்ளடங்கிய பரப்பாகவே வரையப்பட்டுள்ளது.

எப்.ஆர்.ஹெமிங்வே எனும் ஆங்கிலேயர்

1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் THE LIBRARY OF THE UNIVERSITY OF CALIFORNIA LOS ANGELS எனும் பிரிட்டன் நிறுவனம்  பிரிட்டிஷார் ஆளுகையின் கீழுள்ள தென்னிந்தியா குறிப்பாக மெட்ராஸ் மாகாண மாவட்டங்களின் வரலாறை ஓலைச்சுவடி மற்றும் பிற ஆதார குறிப்புகளைக் கொண்டு மாவட்ட வரலாறு எழுத ஊக்குவித்தது. அப்பொழுது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பத்து மாவட்டங்கள் இருந்தன.

முதல் மாவட்ட வரலாறாக சேலம் மாவட்ட வரலாறு அலெக்ஸாண்டர் ரீ என்பவரால் எழுதப்பட்டது. ஆனால் நூல் வடிவம் பெற காலம் தாமதமானது.  தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களின் வரலாறுகள் அடுத்தடுத்து எழுதப்பட்டன. மதுரை வரலாற்றை எழுதியவர் டபுள்யூ.  பிரான்சிஸ் ( W. FRANCIS , INDIAN CIVIL SERVICE ) ஆண்டு -1906. தஞ்சாவூர் மாவட்ட வரலாறு எழுதியவர் எப்.ஆர்.ஹெமிங்வே.

இருவரும் இரு மாவட்ட வரலாறுகளில் புதுக்கோட்டையுடனான உறவு, நட்புகள் குறித்து பதிவு செய்துள்ளார்கள். தஞ்சாவூர்  மாவட்ட வரலாறு எழுதிய எப்.ஆர்.ஹெமிங்வே திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாற்றையும் எழுதினார். அவர் எழுதிய வரலாறு MADRAS DISTRICT GAZETTEERS  - TRICHINOPOLY - BY - F.R.HEMINGWAY - INDIAN CIVIL SERVICE  என்பதாகும். இந்நூல் அச்சு MADRAS PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS. ஆண்டு -1907.

இந்நூல் 1878 ஆம் ஆண்டு Mr.LOWIS MOORE, I.C.S எழுதிய ஆவணக்குறிப்பு ' DISTRICT MANUAL ' என்பதை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மேலும் 1911  ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி முன்பு எழுதிய குறிப்புகள் திருத்தம் செய்யப்பட்டன.

இந்த வரலாறு எழுத ராய் பகதூர் வி. வெங்கையா -இன் கல்வெட்டு குறிப்புகள் பெரிதும் உதவின. மேலும்  இந்த வரலாறு எழுதுவதற்கு கே. வீரசாமி ஐயர் பெரிதும் உதவினார் என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர், குளித்தலை, முசிறி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, உடையார்பாளையம் ஆகிய ஊர்கள் தாலுகாக்களாக இருந்துள்ளன. இந்நூலில் புதுக்கோட்டை ஸ்டேட் எனும் தலைப்பில் (354-374 ) இருபத்தொரு  பக்கங்கள் புதுக்கோட்டை ஸ்டேட் குறித்து எழுதியுள்ளார்.

இந்நூலை எழுதுவதற்கு அவர் நான்கு  முக்கிய ஆவணங்களை ஆதாரமாக கொண்டுள்ளார்.

1. MUDURA COUNTRY BY MR.NELSON

2. 1819 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை அரண்மனை குறிப்புகள்

3.  பழங்கவிஞர் நாகு பாரதியின் கதைகள்

4. உள்ளூர் கல்வெட்டுகள்

இந்நூல் பொது விளக்கம், கனிமங்கள், காலநிலை, மழைப் பொழிவு, பஞ்சங்கள், தற்போதைய  ஆளும் குடும்பத்தின் தோற்றம், பிரிட்டிஷாருடன் உடனான தொடர்பு, அரசியல் நிலைபாடு, தலைமை சாதிகள், மதங்கள், கிறித்துவ பணிகள், முக்கிய புள்ளிவிபரங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடைகள், தொழில்துறை, தொடர்புகள், நிர்வாகம், சட்டம், நில வருவாய், காடுகள், உப்பு, இதர வருவாய், சிவில், நீதி, காவல், சிறைகள், குற்றம், கல்வி, மருத்துவம், தடுப்பூசி, துப்புரவு, முக்கிய இடங்கள், அம்புக்கோவில், ஆவூர், காட்டுபாவா பள்ளிவாசல், கீழாநிலை,  குடுமியான்மலை, நார்த்தாமலை, பெருங்களூர், பேரையூர்,  புதுக்கோட்டை, சித்தனவாசல்,  திருமணஞ்சேரி, திருமயம், திருவரங்குளம், விராலிமலை ஆகிய  ஊர்களைச் சிறிய தலைப்புகளாக கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இந்நூல் குறிப்பிடும் புதுக்கோட்டை பற்றிய குறிப்புகள்

 பிரிட்டிஷார் அரசாங்கத்துடன் நேரடியாக அரசியல் உறவுகள் கொண்ட ஐந்து பூர்வீக மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த  மூன்றாவது மாநிலமாக புதுக்கோட்டை உள்ளது.  இம்மாநிலப்பரப்பு 1178 சதுர மைல்கள்.

கரடு முரடான தரை, சிறிய குன்றுகள், அடர்ந்த காடுகள், கருப்பு மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, காட்டு மாடுகள் என வன உயிர்கள் நிரம்பப் பெற்ற வனத்தைக் கொண்டது. கனிம வளங்கள் குறைவான மாநிலம். ஒரு காலத்தில் திருவரங்குளம் மற்றும் பெருங்களூர்  பகுதிகளில்  இரும்பு உருக்கு ஆலைகள் இயங்கியுள்ள தடங்கள் இன்றும் உள்ளன.

திருச்சியுடன் ஒப்பிடுகையில் இங்கு வெப்பநிலை குறைவு. மலேரியாவால் பெரிய பாதிப்புக்கு இப்பகுதி உள்ளாகவில்லை. மூன்று பெரும்புயல்கள் 1884, 1890 மற்றும் 1893 ஆண்டுகளில் தாக்கியுள்ளன. வடகிழக்கு பருவக் காற்றால் மழைப் பெய்கிறது. 1876 -78 காலம் பெரும் பஞ்சம். 

பதினேழாம் நூற்றாட்டின் முற்பட்ட புதுக்கோட்டையின் உள்ளூர் வரலாறு பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. பழங்கால எச்சங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அந்த அதிர்ஷ்டத்தின் மீது வெளிச்சம் படவில்லை. சிலப்பதிகாரம் பாடியுள்ள கொடும்பாளூர் இம்மாநிலத்தில் உள்ளது. சமணர்கள் வாழ்ந்த சித்தனவாசல் மற்றும்  விராலிமலை, குடுமியான்மலை, அம்மா சத்திரம், நார்த்தாமலை ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இன்னும் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கின்றன.

சோழர், பாண்டியர், பல்லவர்களால் இப்பகுதி ஆளப்பட்டுள்ளது. தாமிர தகடுகள் அல்லது பனை ஓலைகளில் சுமார் 200 மானியங்கள் உள்ளன. இவற்றில் சில பண்டைய காலத்தைக் (கி.பி. 1108, 1100, 1288, 1378, முதலியன) காட்டுகின்றன. மீதி தொண்டைமான்களால் பதினெட்டாம் மற்றும் அதற்குப் பிந்தைய  நூற்றாண்டுகளில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பானவை. புதுக்கோட்டைக்கு வடகிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள கருக்காக்குறிச்சியில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 ரோமானிய தங்க நாணயங்கள் (aurai) கண்டெடுக்கப்பட்டன. இவை முதலாம், இரண்டாம்  நூற்றாண்டைச் சேர்ந்தவை. வெள்ளாறு மாநிலத்தை இரண்டாகப்  பிரிக்கிறது. இந்த ஆறறைப் பண்டைய இலக்கியங்கள் சோழ, பாண்டிய அரசுகளுக்கு இடையேயான எல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. பாண்டிய வாரிசுப் போரின் போது பாண்டிய மன்னன் குலசேகரன் தப்பியோடு இப்பகுதி காட்டிற்குள் மறைந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

நாகு பாரதி எனும் கவிஞர்

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் தற்போதைய புதுக்கோட்டை மதுரா மற்றும் தஞ்சை நாயக்கன் மன்னர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும் பிறகு  ராமநாட்டு  சேதுபதி கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இப்பகுதி பிரிக்கப்பட்டு மருங்காபுரி ஜமீன்தார்,  மணப்பாறை ஜமீன்தார் மற்றும் புதுக்கோட்டையின் பல்லவராயர்கள் என்று அழைக்கப்படும் ஜமீன்தார்களின் வசம் சென்றிருக்கிறது.

புதுக்கோட்டை அரண்மனை பதிவேடுகளில் பாதுகாக்கப்பட்ட 1819 ஆம் ஆண்டின் ஆவணக்குறிப்பின்படி,   தொண்டைமான்கள் இராமநாடு சேதுபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும்  பழந்தமிழ் கவிஞர் நாகு பாரதி ( NAGU BHATATHI )யின் கதைகள் மற்றும் உள்ளூர் கல்வெட்டு குறிப்புகள் அப்படியாக சொல்கின்றன.

இப்பகுதி பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை மதுரை, தஞ்சை நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலும் பிறகு இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டிலும் இருந்திருக்கிறது. இத்துடன் ஒன்றுபட்ட பகுதி மருங்காபுரி ஜமீன், மணப்பாறை ஜமீன், புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆகிய பகுதியாகப் பிரிக்கப்பட்டன.  கடைசியாக உருவான புதுக்கோட்டை ராமநாதபுரம் சேதுபதிக்கு அடிபணிந்த நிலமாக இருந்தது.

புதுக்கோட்டைக்கான தனிச் சட்டம்

பிரிட்டிஷாருக்கு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் செய்த பல்வேறு உதவிகளின் அடிப்படையில் 1844 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆறாம் சட்டத்தின் கீழ் இது வெளிநாட்டு பிரதேசம் என அறிவிக்கப்பட்டது.

விஜய என்கிற சொல் நாணயத்தில் குறிக்கப்பட்டது. இச்சொல் விஜய ரகுநாத தொண்டைமான் என்பதைக் குறிக்கும். இவரது காலம் 1730- 69. 1888 வரை புதுக்கோட்டை நாணயங்கள்  தோரயமாக புதுக்கோட்டையிலேயே அச்சடிக்கப்பட்டன. இதன்பிறகு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு வந்தன. சுங்கநிலையங்கள் நிறுவப்படவில்லை. மாநிலத்தில்  377 கிராமங்கள் உள்ளன. முஸ்லீம் 3.2, கிறித்தவம் 3.8. பெரும்பான்மை இந்து. ஆவூரில் இத்தாலியர் ஜெஸ்னிட் தந்தை ஜோசப் பெஸ்கி தங்கியிருந்து மதப் போதனையில் ஈடுபட்டுள்ளார். 1903 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை பதிவேடு உருவாகக்ப்பட்டது. அந்த ஆண்டு முதல்  தர்பார் அதிகாரம் கிராமத்திற்கும் பரவலாகக்ப்பட்டது. புதுக்கோட்டையில் கால்நடை கண்காட்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்ச்சி 1903 -04 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நீர் நிலைகள்

1,31,000 ஏக்கர் நீர்பாசன சாகுபடி நிலங்கள் , 208000 ஏக்கர் உலர் நிலங்கள், நான்கு ஆறுகளின் பாசனங்கள்,  190 கால்வாய்கள், 720 பெரிய குளங்கள், 3489 சிறிய குளங்கள், 18452 கிணறுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கவிநாடு ஏரி இம்மாநிலத்தின் பெரிய ஏரியாகும்.

புதுக்கோட்டை தொழில்கள்

திருவப்பூரில் பட்டு, சாயம் உற்பத்தி முக்கியத் தொழிலாக இருக்கிறது.  கரம்பக்குடியில் பருத்தி துணிகள் மற்றும் பாத்திரங்கள்.  செல்லுக்குடியில்  போர்வை. பொன்னமராவதி பனை, இலை மற்றும் பாய்கள். ஆலங்குடி, கீரனூர் பகுதியில் மணி உலோக பாத்திரங்கள். கீழாநிலையில் கூடைகள். வைத்தூரில் வளையல்கள்.  திருவேங்கைவாசல் வீடுகளுக்கான ஓடுகள்,..என உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

 திருச்சியிலிருந்து இரண்டு முக்கிய சாலை வசதிகள். ஒன்று கீரனூர் வழி. மற்றொன்று இலுப்பூர் மற்றும் விராலிமலை  வழி.

28 அஞ்சல் நிலையங்கள்.

நிர்வாகம் திவான் கையில் இருந்துள்ளது. இவர்  திவான் இன் கவுன்சில் என அழைக்கப்பட்டார். சர். ஏ. சேஷய்யா சாஸ்திரி 1886 முதல் 1894 வரை திவானாக இருந்துள்ளார்.

புதுக்கோட்டையின் முன் மாதிரியான சட்டபேரவை

1902 முதல் மைசூர் சட்டமன்றத்தை மாதிரியாகக் கொண்டு பிரதிநிதித்துவ பேரவை புதுக்கோட்டையில்  அமைக்கப்பட்டது. பல்வேறு சமூக மக்களைக் கொண்டு 30 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டசபைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை. வருவாய் மற்றும் நீதி திவான் கையில் இருந்திருக்கிறது.

மாநிலம் மூன்று தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டது.

1. குளத்தூர் இதன் தலைமையிடம் கீரனூர்,

2. திருமயம் 3.  ஆலங்குடி.

நிலம், உப்பு, போதைப் பொருட்கள், பொதுப்பணி வழியான வருவாய் முக்கிய வருவாயாக இருந்தது. புதுக்கோட்டை வருவாயில் உப்பு வரி முக்கிய வருமானமாக இருந்தது. 1887 முதல் உப்பு வழி வருவாய் நிறுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூபாய்  38,000 இழப்பீடு ஆனது. இதற்கான நஷ்ட ஈட்டை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அரசு மதுபான ஆலை இருந்தது. கள்ளுக்கடை மற்றும் பனை மரங்களுக்கு வரி விதிக்கப்பட்டன..

புதுக்கோட்டை நகரில் பத்து இடங்களில் சுங்க வரி சாவடிகள் இருந்தன. கடைத்தெரு,  மாட்டுவண்டி நிறுத்துமிடங்களுக்கு வரி. 

 நீதித்துறை தலைமை நீதிமன்ற நீதிபதி, தலைமை மாஜிஸ்ரேட், சிறப்பு மாஜிஸ்ரேட் என மூன்றடுக்குகளாக இருந்தன. 

1875 அம் ஆண்டு காவல்றை ஓழுங்கு முறை ஆணையம் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் திருச்சியாக இருந்தது.  எட்டு மத்திய சிறைகள், ஏழு கிளை சிறைகள்.

1891 செப்டம்பரில்  ரயில் பாதை உடைக்கப்பட்டு ரயிலில் ஏற்றிவந்த பொருட்கள்  கொள்ளையடிக்கப்பட்டன.

வரலாற்று ஊர்கள்

இந்நூலில் இறுதியில் அம்புக்கோவில், ஆவூர், காட்டுபாவா பள்ளிவாசல், கீழாநிலை, குடுமியான் மலை, நார்த்தாமலை, பெருங்களூர். பேரையூர், புதுக்கோட் சித்தனவாசல், திருமயம், திருவரங்குளம், விராலிமலை ஆகிய ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சிறிய பத்திகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை வரலாற்றைப் பத்துக்கும் மேற்பட்ட வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். இவற்றில் முதல் வரலாறு எப்.ஆர் ஹெமிங்வே எழுதிய வரலாறாகும்.

                    


                                 











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...