புதுக்கோட்டை தனிமாவட்டமாக ஜனவரி 14, 1974 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மாவட்டம் முறையாக உதித்த நாள் ஜனவரி 20, 1974.
புதுக்கோட்டை உதய நாள் விழா எப்படியாக நடந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்கும் பொருட்டு தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அப்படியே தருகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் இன்று உதயம் திருச்சி ஜனவரி 20 , 1974.
தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகிறது. தமிழகத்திலேயே சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த புதுக்கோட்டை பிரதேசம் மன்னர் ஆட்சியில் இருந்தது. இந்திய சமஸ்தானங்கள் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காலம் சென்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் ஒருங்கிணைந்தது. புதுக்கோட்டை சமஸ்தானமும் முதன் முதலில் ஒருங்கிணைந்த பெருமையைப் பெற்றது. பிறகு திருச்சி மாவட்டத்துடன் இணைத்து நிர்வாகம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மக்களின் நெடுநாளைய விருப்பம் இன்று நனவாகிறது. தனி மாவட்டமாக தமிழக அரசு முடிவு எடுத்து இன்று (ஜனவரி 20) புதுக்கோட்டையைத் தனி மாவட்ட ஆரம்பத்தை தமிழக முதல்வர் உயர்திரு கருணாநிதி துவக்கும் விழா காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு மராமத்து இலாக அமைச்சர் சாதிக் பாஷா தலைமை வைக்கிறார். அனைவரையும் மாவட்ட கலெக்டர் ராமதாஸ் வரவேற்பார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் விழா மலரை வெளியிடுகிறார். திருச்சி மாவட்ட பகுதியை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் தஞ்சை பகுதியை மன்னை நாராயணசாமியும் ஒப்படைப்பு செய்கின்றனர்.
புதுக்கோட்டை தனி மாவட்டமாவதையொட்டி சகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அலங்கார வண்டிகள் ஊர்வலம் பிரம்மாண்ட அளவில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. பொதுநலக் கழகங்கள் அமைச்சர்களுக்கு வரவேற்பு ஒன்றை மாலை 4 மணிக்கு நடத்த உள்ளது. எல்லா அரசு அலுவலகங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மாலையில் அண்ணா கலையரங்கில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எல்லா அமைச்சர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள். புதிதாக அமைய உள்ள கலெக்டர் அலுவலகம் முன்னாள் அரசு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்படும். இந்த கட்டிடத்தை அரசு குடும்பத்தினரிடமிருந்து பல லட்சம் கொடுத்து தமிழக அரசின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி - தினமலர்
நகல் உதவி - எழுத்தாளர் விஜயா சிவகாசிநாதன்.

கருத்துகள்
கருத்துரையிடுக