புதுக்கோட்டையிலிருந்து பதினெட்டு கல் தூரத்தில் இருக்கிறது, அரிமழம். இவ்வூர் அரிமளம் என்றும் அரிமழம் என்றும் அழைக்கப்படுகிறது. ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார் அரிமலம் என்கிறார். மளம் என்பதற்கு மணம் என்றும் மழம் என்பதற்கு இளமை என்றும் பொருள்.
இவ்வூரார்களிடம் பெயர்க்காரணம் கேட்கையில் அரி என்றால் சிங்கம் என்றும் மழம் என்றால் வீரர்கள் என்றும் சிங்கம் போன்ற வீரர்களைக் கொண்ட மறவர் ஊர் என்று சொல்கிறார்கள். சிங்கத்தைக் குறிக்கும் அரி என்கிற சொல் வடமொழி. தமிழ்ச் சொற்கள் அரி என்பதற்கு நெற்கதிர், வண்டு, கொடு,பகைவன், பாம்பு, அழகு, மரவயிரம், தேர், பரற்கல், பறை, மூங்கில், குரங்கு, மழைத்தூவல், தவளை, விதை, சிலம்பின் பரல் என்கின்றன. மேலும் அரி என்பதற்கு பனை, பனங்கள், பனங்கருக்கு (சூடாமணி, பிங்கல நிகண்டு), நெல்லுக்கு அரி என்றொரு பெயருண்டு ( பிங்கல நிகண்டு) நெற்கதிரை அறுத்து வரிசையாக வைப்பதற்கு பெயர் அரி. நெற்குவியல் - அரி. கதிர் அறுக்கும் பருவத்தை அரி என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது 'அரி புகு பொழுதின் இரியல் போகி'. இதுதவிர தற்கால அகராதிகள் அரி என்பதற்கு கள், பனை, அரிசி, குதிரை, கூர்மை, சிங்கம், சூரியன், சந்திரன், பகைவன், திருமால், அரிதல், கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல் என்கின்றன.
தமிழக ஊர்ப்பெயர்கள் முதலில் நிலம், மண் சார்ந்தும் அதன்பின் மரம், செடி, கொடிகள் கொண்டும் அதற்குப் பிந்தைய ஊர்கள் நீர் நிலைகளைக் கொண்டும் பிறகு மக்கள், குடி சார்ந்து பெயர்ச்சூட்டப்பட்டு வந்திருக்கின்றன. குடி சார்ந்து பெயர்சூட்டலின் நீட்சிதான் சாதியப் பெயர்கள். அந்த வகையில் அரிமளம் என்பது தொன்மையான ஊர்.
இவ்வூர் குறித்து அகநானூறு, "அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன" என்று பாடியிருக்கிறது. இவ்வூர் ‘எவ்வி’ என்கிற மன்னனுக்குரிய ஊராக இருந்தது. இவன், ‘மாவேள் எவ்வி’ என்று அழைக்கப்பட்டான். பெருங்கொடை வள்ளல். இவன் காவிரி பாயும் மிழலை நாட்டவன். எவ்வி சங்கக் காலத்திய குறுநில மன்னன். பறம்புமலைத் தலைவன் வேள்பாரிக்கு மூத்தவன். இவனது தலைநகர் நீடூர் என்று அழைக்கப்பட்டது. ஆகவே இவன் ‘நீடூர் கிழவன்’ என்று அழைக்கப்பட்டான்.
அரிமண வாயில் உறத்தூர் எனுமிடத்தில் பாண்டியன் படைத் தலைவன் நெடுமிடல் என்பவனைப் போரிட்டு வென்றான். அவன் வென்ற இடம் அரிமண வாயில். இந்த இடத்தில் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு தன் படைவீரர்களுக்குக் கள்ளுடன பெருஞ்சோறு அளித்து மகிழ்ச்சி அடைந்தான். பிறகு இதே மன்னன் ‘கொடித்தேர்ச் செழியன்’ எனும் மன்னனிடம் தோற்று நாட்டைப் பறிக்கொடுத்தான்.
எவ்வி விழுப்புண் பட்டு மாண்டுபோன செய்தியை புறநானூறு 233 ஆவது பாடல் பாடுகிறது. எவ்வி மாண்டான் என்கிற செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா, என்கிறது அப்பாடல். இப்பாடலின் தொடர்ச்சியை அகநானூறு 115 பாடுகிறது. எவ்வி போரில் மாண்டான், என்பதை அறிந்த பாணர்கள், தாம் ஊதிப் பிழைக்கும் கொம்புகளை நிலத்தில் எறிந்து துக்கம் கொண்டனர்.
எவ்வி போரில் தோல்விக் கண்டு மாய்ந்துபோனதற்கும் பின்னே புலவரை இகழ்ந்தக் கதையொன்று இருக்கிறது. கழாத்தலையார் என்றொரு புலவர் இருந்தார். இந்தப் புலவரின் புலமையை எவ்வி இகழ்ந்து நகையாடுகிறார். இதனால் மனமுடைந்த புலவர் எவ்வி மீது சாபக்கவி பாடுகிறார். இந்தச் சாபத்தால் எவ்வி குடியினர் பூண்டோடு அழிந்து போயினர் என்கிறது புறநானூறு 202 ஆவது பாடல்.
எவ்வி என்பது ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கிறது. ஏற்றம் என்பது தாழ்வான இடத்திலிருந்து நீரை மேட்டு நிலத்திற்கு ஏற்றுவதாகும். ஆற்றுநீரைப் பள்ளமான இடத்திலிருந்து மேட்டு நிலத்திற்குப் பாய்ச்சுவதற்கு முன்னெடுத்ததால் அவனது பெயரால் ஏற்றம் அழைக்கப்பட்டிருக்கலாம். அரிமணம் வாயில் என்பது அரிமணம் என்றாகி பிறகு அது அரிமளம், அரிமழம் என்பதாக திரிந்திருக்கிறது. இங்கு மளம் என்பதும் மணம் என்பதும் ஒன்றுதான். மழம் என்பது இளமை பெயர். “மழமும் குழவும்” இளமைப் பெயர்கள் என்கிறது தொல்காப்பியம். “மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்” என்கிறது அகநானூறு. இங்கு மழம் என்பது இளமை.
இன்று அரி என்பது சிங்கம் என்றும் மழம் என்பது வீரர்கள் என்றும் பொருள்கொண்டு வீரத்தோடு இவ்வூர் தொடர்புபடுத்துவது உயர்வு நவிற்ச்சி.
அகநானூறு பாடுகின்ற “அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன" என்கிற வரியிலிருந்து அரிமணம் என்பது மணக்கின்ற அரி என்பதாக பொருள்கொள்ள வேண்டும். மூங்கில் அரிசி மற்றும் பனையை அரி என்கிறது சங்க மொழி. அகநானூறு பாடும் கள், பெருஞ்சோறு, எல்லிமிழ் அன்ன என்கிற வரியோடு பார்க்கையில் கள்ளும் சோறும் கலந்த மணம் கொண்ட ஊர் அரிமணம் என்றாகிறது. அரிமணம் அரிமளம் என்றாகி பிறகு அது அரிமழம் என்றாகியிருக்கிறது. புதுக்கோட்டை கல்வெட்டுகள் அரிமழம் என்று குறிப்பிட்டுள்ளன. மேலும் மு.ரா. கந்தசாமிக் கவிராயர், அரிமழத் தலபுராணம் என்றொரு நூல் இயற்றியுள்ளார். அரிமழம் என்பது அரிமளம் என்பதன் திரிபு பெயர்.
அரிமணம் என்பது அரிமளம் என்றாகி பிறகு அது அரிமழம் என்பதாக திரிந்துள்ளது. இங்கு அரி என்பது பனை மற்றும் மூங்கிலைக் குறிக்கும் சொல்லாகவும் அவை தரும் கள் மற்றும் அரிசியைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
இக்கட்டுரை தமிழ்நாடு அரசு சொற்ப்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் நடத்தும் சொல்வயல் இதழில் வெளியானது. மாதம் ஜூலை -2023



கருத்துகள்
கருத்துரையிடுக