கட்டுரை
புதுக்கோட்டைக்குக் காந்தி வருகையும் பதிவுகளும்
- அண்டனூர் சுரா
புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் வருமானம் தரக்கூடிய தொழில்களாக மூன்று
இருந்தன 1. உப்புக்காய்ச்சி விற்றல். 2. ராட்டினம்
சுற்றி நூல் நூற்றல். 3. எரிசாராயம். இவைதவிர வைத்தூரில் கண்ணாடி வளையல்,
மண் வளையல் செய்யும் தொழிற்பட்டறையும் கரம்பக்குடியில் சாயப்பட்டறையும் இருந்தன. ஆயினும்
சமஸ்தானத்திற்கு வருமானம் ஈட்டித் தந்தவை
முதலில் சொன்ன மூன்று தொழில்களும்தான்.
மண் உப்பு
கடற்பகுதியைப் பெற்றிராத புதுக்கோட்டை தனியரசில் உப்புக் காய்ச்சும் தொழில் தொன்றுதொட்டு நடந்துவந்தது. விவசாயத்திற்கு உபயோகமற்ற காடுகளிலிருந்து மண் எடுத்து அந்த மண்ணைத் தண்ணீரில் நன்கு கரைத்து தெளிந்த நீரைச் சட்டியில் ஊற்றி காய்ச்சுவார்கள். பால் போன்ற வெண்மை நிறம் வந்ததும் இறக்கி ஒரு வாரம் வைத்திருப்பார்கள். பின்னர், அந்த உப்பு நீர் கெட்டியாகிவிடும். பிறகு அதை எடுத்து தூளாக்கிவிடுவார்கள். இதற்குப் பெயர்தான் மண் உப்பு. இந்த மண் உப்பு காய்ச்சும் பழக்கம் மோரையாறு, கள்ளுக்கோரைக்காடு, சின்னத்துரப்பாகுளம் ஆகிய இடங்களில் முக்கிய தொழிலாக இருந்திருக்கிறது.
மண் உப்பின் விலை பிரிட்டிஷ் பகுதிகளில் தயாரிக்கப்படும் கடல் உப்பை விட மலிவாக
இருந்தது. எனவே புதுக்கோட்டையிலிருந்து பிரிட்டிஷ் பகுதிகளுக்கு மண் உப்பு கடத்தப்பட்டது.
இதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு மண் உப்பு தயாரிப்பதற்குத் தடை விதித்தது. 1887 ஆம் ஆண்டு
மண் உப்புத் தயாரிப்பதைத் தடை செய்வது பற்றி ஆங்கிலேய அரசுக்கும் புதுக்கோட்டை தனியரசுக்கும்
ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஆங்கிலேய அரசு புதுக்கோட்டை தனியரசுக்கு ஆண்டொன்றுக்கு
உரூபாய் 38,000 வீதம் நட்ட ஈடு வழங்கியது. இச்செய்தியை 16.04.1983 நாளிட்ட தமிழரசு
இதழ் பதிவு செய்துள்ளது.
பறையர் வேட்டி
ராட்டினம், தறி சுற்றி ஆடைகள் நெய்தலின் தலைமையிடமாக திருவேள்ப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் இருந்தன. நெசவுத்தொழில் செய்யும் மக்கள் மன்னர் காலத்தில் சௌராஷ்ராவிலிருந்து இங்கு குடியமர்த்தப்பட்டார்கள். சாதிய ஏற்றத் தாழ்வும், ஒடுக்குமுறையும் உச்சத்திலிருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான பறையர் சமூகம் மற்ற சமூகத்தினர் அணியும் ஆடைகள் அணிய முடியாத நிலை இருந்தது. இவர்களுக்காக பறையர் சேலை, பறையர் வேட்டி தனியே நெய்யவும், விற்கவும் தனி நெசவுத் தறியும் சந்தையில் தனி கடைகளும் இருந்தன.
பிரிட்டிஷார்கள் தன் நாட்டில் விளையும் பருத்தி நூல்களை இந்தியாவில் இறக்குமதி செய்யாதவரை புதுக்கோட்டையில் நெசவுத் தொழிலும் சாதிக்கென தனி ஆடைகளும் நெய்து விற்கப்பட்டு வந்தன. பிரிட்டிஷார்கள் நூல், துணிகளை இறக்குமதி செய்ததன் பிறகு நெசவுத்தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. புதுக்கோட்டையிலிருந்த சௌராஷ்டிரா நெசவாளர்கள் வேறொரு நகரப் பகுதியை நோக்கி இடம்பெயரத் தொடங்கினார்கள். எளிய, ஏழை மக்கள் சிறிய ராட்டினங்களைச் சுற்றி நூல் நூற்று பிழைப்பு நடத்தினார்கள். கடைசியாக சமஸ்தானத்தின் வருவாயை உயர்த்துவதில் முக்கிய இடம் பிடித்தது எரிசாராயம்தான்.
புதுக்கோட்டைக்கு மகாத்மா காந்தி, வருகைதருகையில் இவ்விரு தொழில்களையும் காட்டி
அவருக்கு வரவேற்பு பத்திரம் அளித்தது ஆவணமாக உள்ளது. வரவேற்பு பத்திரத்தை ஏற்றுக்கொண்ட
காந்தி, தன் உரையில் இவ்விரு தொழில்களுக்கும் பதில் சொல்லும்படியாக உரையாற்றியிருக்கிறார்.
புதுக்கோட்டைக்குள்
நுழைய முடியாத காந்தி
இந்தியாவின் எந்த மூலைக்கும் எளிமையாக சென்றுவிட முடிந்த காந்தியால் புதுக்கோட்டைக்குள்
அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியவில்லை. புதுக்கோட்டைக்குள் காந்தியின் வருகை, அதற்கான
அவசியம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கும் முன்பாக அவரது திருச்சி வருகைக் குறித்து நாம்
அறிந்தாக வேண்டும். புதுக்கோட்டைக்கு காந்தியின் வருகை என்பது திருச்சி வருகையின் மீதான
தொடர்ச்சியே ஆகும்.
திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறும் - திருச்சியில் காலூன்றி தமிழ்நாட்டைத் தழுவிய வரலாறு எனும் இந்நூலில் கவிஞர் நந்தலாலா பல நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். இவரது இயற்பெயர் - எஸ். நெடுஞ்செழியன். குடைவரைக் கோவிலால் புகழ்பெற்ற குன்றாண்டார்கோவில் இவரது சொந்த ஊர். திருச்சிக்குப் பணியின் பொருட்டு இடம்பெயர்ந்து, வங்கியில் நீண்டகாலம் பணிசெய்து ஓய்வு பெற்றவர். வசீகரப் பேச்சாளர். சமூகச் செயற்பாட்டாளர். சோலைக்குயில்கள் கவிதை இயக்கத்தையும் இதழையும் தொடங்கியவர்களில் ஒருவர். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர். இந்நூலில் ஒரு கட்டுரை காந்தியின் திருச்சி வருகையைப் பற்றி இவ்வாறு பேசுகிறது.
இந்திய தலைவர்களில் பயணத்தைத் தன் வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டு எல்லா திசைகளிலும் பயணித்தவர் காந்தி. அவர் மனம், நிலம் என்று பிரிந்துகிடந்த இந்தியாவை இணைத்ததில் அவரின் பயணத்திற்கு முக்கியப் பங்குண்டு. இப்படி தமிழர்களை நேசித்த காந்தியடிகள், திருச்சிக்கு ஆறு முறை பயணமாக வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாட்களில் திருச்சியில் 13 நாட்கள் தங்கி பயணித்துள்ளார்.
காந்தியின் முதல் வருகை
முதன் முதலில் காந்தியின் திருச்சி வருகை 1919 செப்டம்பரில். அவர் நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். தில்லையாடி வள்ளியம்மையின் மன உறுதியைக் குறிப்பிட்டு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். ஹிந்து மெசேஜ் ஆசிரியர் டி.கே.பாலசுப்பிரமணியம் வரவேற்று பேசினார். அதன் பிறகு ஏறக்குறைய ஓர் ஆண்டு கழித்து, காந்தி மீண்டும் திருச்சி வந்தார்.
1920 ஆகஸ்ட்17, அன்று திருச்சிக்கு வந்தவரைப் பாலக்கரையிலிருந்து பெரிய ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார். மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டம் சௌக்கில் நடந்தது. இன்றைய டவுன்ஹால் எதிரே உள்ள பழைய புத்தகக் கடைகளை ஒட்டியுள்ள பெரிய மைதானமே சௌவ். சௌவ் என்ற உருது சொல்லுக்கு மையம் என்று பொருள்.
அடுத்த ஆண்டு, மூன்று நாள் பயணமாக 1921 செப்டம்பர் 18, அன்று வருவதாக முடிவு. காந்தியின் முழுமையான பயணத் திட்டத்தை டாக்டர் ராஜன், சுதேசமித்திரன் இதழில் செப்டம்பர் 13, இல் வெளியிட்டார். அச்செய்தி வந்த அதே இதழில்தான் மகாகவி பாரதியின் மரணச் செய்தி கடைசி பக்கத்தில் வெளியாகியிருந்தது. காந்தியடிகள் இந்தப் பயணத்தில் எங்குமே பாரதி குறித்துப் பேசவில்லை. பாரதியின் உயர்வை அன்றைய தலைவர்கள் காந்திக்குச் சொல்லாத விளைவே இது. இந்த பயணத்தின் போது தான் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிர்வாக ரீதியாக காந்தியை வரவேற்ற முதல் நகராட்சி என்னும் பெருமையை திருச்சி பெற்றது.
அடுத்த நாள் 1921, செப்டம்பர் 19 அன்று, பொதுக்கூட்டம் இரவு எட்டு மணிக்குத் தொடங்கி பதினொரு மணிக்கு காந்தியின் உரையோடு முடிந்தது. காந்தியடிகள் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் வீட்டில் தங்கினார். இந்தப் பயணத்தின் பொழுது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. திருச்சி பயணத்தை முடித்து காந்தி புதுக்கோட்டை வழியாக செட்டிநாடு செல்ல வேண்டும், என்பது திட்டம். ஆனால் புதுக்கோட்டை திவான் காந்திக்குப் புதுக்கோட்டைக்குள் நுழைவதற்குத் தடை விதித்தார். அந்தத் தடை ஆணையைக் காந்திக்குத் தர ஒரு காவல் அதிகாரி நேரடியாக வந்தார். ஆணையைத் தந்த அவர் நடந்து கொண்டிருந்த சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தார். டாக்டர் டி.எஸ்.எஸ்க்குக் கடும் கோபம். சாப்பிடக்கூடாது என்று எழுந்து போக சொல்லிவிட்டார். செய்தி அண்ணலுக்குப் போனது. தன் கடமையைச் செய்ய வந்தவரையும் இப்படி நடத்தலாமா, அவர் சாப்பிட்டால் மட்டுமே நான் சாப்பிடுவேன் என்று உணவை மறுத்துவிட்டார். அந்தக் காவல் அதிகாரியைப் பிடித்து சாப்பிட வைத்ததன் பிறகுதான் காந்தி சாப்பிட்டார்.
அடுத்த நாள் ஸ்ரீரங்கத்தில் வரவேற்பு. பனை ஓலையில் வழங்கிய பொன் எழுத்துகளான ஆங்கில வரவேற்பு பத்திரத்தை காந்தி ரசித்தார். இவ்வளவு அழகானதை உங்கள் தமிழில் தந்திருக்கலாமே என்றார். பெண்களை சந்தித்தார். அவர்களிடம் நம் நாட்டுத் துணிகளை அணியுங்கள், எனக் கேட்டுக்கொண்டார்.
அடுத்து திருச்சி மக்கள் காந்தியைத் தரிசிக்க, ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1927, செப்டம்பர் 17 அன்று காலை திருச்சிக்கு வந்தார். அன்னை கஸ்தூரிபா உடன் வந்திருந்தார். இன்று இடமாற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள காந்தி மார்க்கெட் அக்காலத்தில் வாரச் சந்தையாக இருந்தது. அந்த இடத்தில் ஒரு மார்க்கெட்டை நகராட்சி கட்டியது. அதற்கு காந்தி மார்க்கெட் எனப் பெயர் வைத்தனர். தன் பெயரில் அமைந்த ஒரு சந்தைக்குக் காந்தியடிகளே அடிக்கல் நடப்பட்ட அதிசயம் நடந்தேறியது. அன்று மதியமே பொன்மலையில் உள்ள சங்கத்திடலில் ரயில்வே தொழிலாளர்களின் சங்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அன்று மாலை லால்குடியில் பொதுக்கூட்டம். கொள்ளிடம் பாலம் பழுதாகி இருந்ததால் ஆற்றைக் கடக்க மாட்டு வண்டி வந்தது. காந்தி, ஆற்று மணலில் நடந்தே பாலத்தைக் கடந்தார்.
அதற்கும் அடுத்த நாள் தேசிய கல்லூரியில் கூடியிருந்த திருச்சி நகர மாணவர்களைச் சந்தித்தார். பிறகு புத்தூர் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கிறிஸ்துவ மக்களைச் சந்தித்தார். மதப்பற்றும் நாட்டுப் பற்றும் இணைந்து இருக்க வேண்டும், என்றார். அன்று நடக்க வேண்டிய பொதுக்கூட்டம் கனமழையால் ரத்தாகி அடுத்த நாள் காலையில் நடந்தது. கதரின் அவசியம் பற்றி பேசிய காந்தி, மலஜலம் கழித்து காவிரியை மக்கள் அசுத்தப்படுத்துவதை வன்மையாகக் கண்டித்தார். சுத்தத்தின் மேன்மையை வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில்தான் நகரசபை தலைவர் ரத்தினவேல் தேவர் மூன்று கற்கள் பதித்த விலை உயர்ந்த மோதிரத்தைக் கதர் நிதிக்காக வழங்கினார்.
காந்தியடிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1934 பிப்ரவரி 10ஆம் தேதி சோழவந்தானிலிருந்து அதிகாலை திருச்சிக்கு வந்தார். வழக்கம் போல பெருங்கூட்டம். இந்தக் கூட்டத்தில் "காந்தியே திரும்பிப் போ" என்று இந்துத்துவவாதிகள் முழக்கமிட்டார்கள். கையில் கருப்புக்கொடி வைத்திருந்த சிறுவர்கள், தாம் காந்தியின் வருகைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம், என்பதை மறந்து "மகாத்மா காந்திக்கு ஜே" என்று தன்னையும் அறியாமல் வரவேற்றதைக் காந்தி பெரிதும் ரசித்தார்.
காந்தி கடைசியாக 1946 பிப்ரவரி 2ஆம் தேதி வருகை தந்தார். இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகள் அடைந்திருந்த செல்வாக்கை காட்டுவது போல திருச்சி ரயில் நிலையத்தில் மட்டும் இரண்டு லட்சம் பேர் கூடினார்கள். அதுதான் காந்தியைத் தலைவர் என்ற இடத்திலிருந்து தேசத்தந்தை என்கிற நிலைக்கு உயர்த்தியது. இந்தத் தேசத் தந்தை என்னும் அடையாளத்தை உலகத்துக்கே காட்டும் ஒரு இடமாக திருச்சி அமைந்தது.
புதுக்கோட்டையில் காந்தி
திருச்சிராப்பள்ளிக்கு ஆறு முறை வருகைத் தந்த காந்தியால் புதுக்கோட்டைக்குள் நுழைய முடிந்தது ஒரு முறைதான். அது நான்காவது முறையாக அவர் திருச்சிக்கு வருகைத் தந்த பொழுது, இந்தப் பயணம் அவருக்குச் சாத்தியமானது. பிரிட்டிஷார்களின் சிம்மச் சொப்பனமாக காந்தி இருந்ததால் சமஸ்தான உத்தரவின் பேரால் காந்தி புதுக்கோட்டைக்குள் நுழையக் கூடாதென தடுக்கப்பட்டார். அவர் செட்டிநாடு என்று அழைக்கப்பட்ட காரைக்குடிக்குச் செல்வதாக இருந்தது. அதற்காக அவர் மதுரை வழியே செட்டிநாடு சென்றார். புதுக்கோட்டைக்குக் காந்தி வரவழைத்து பெரும் வரவேற்பு கொடுக்க நினைத்தவர்கள், செட்டிநாடு சென்று காந்திக்குத் தன் வாழ்த்துப் பத்திரத்தை நேரில் வழங்கினார்கள். அதற்காக அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தண்டனைக்கு ஆளானார்கள்.
ஸ்ரீராஜகோபால விஜயம்
புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குக் காந்தியின் வருகையை ‘இராஜகோபால விஜயம்’ என்கிற நூல் பதிவு செய்துள்ளது. 21.9.1927 அன்று புதுக்கோட்டை நகருக்கு வருகை தந்த மகாத்மா காந்தி புதுக்கோட்டை நகரம் வடக்கு ராஜவீதியில் உள்ள டவுன்ஹால் என்ற பிரபலமான நகர் மன்றத்தில் உரையாற்றினார். ஏழாயிரம் பேர் என்கிற அளவிற்கு அவரது உரையைக் கேட்டார்கள்.
1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் ரௌலட் சட்டம் கொண்டு வந்தார்கள். அச்சட்டத்தை எதிர்த்து நடந்த 30.03.1919 ஜாலியன்வாலா பாக் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதன் விளைவாக 1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தது. அதே ஆண்டு டிசம்பரில் நாக்பூரில் வருடாந்திர செயல் திட்டத்தை வெளியிட்டது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் வெள்ளை காலனி ஆட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆகவே ஒத்துழையாமை இயக்க ஆதரவு பிரச்சாரத்தைப் புதுக்கோட்டை மன்னர் ஆட்சி நிர்வாகம் தங்கள் ஆட்சி பகுதியில் நடைபெறவிடாமல் பார்த்துக்கொண்டது.
புதுக்கோட்டை நகரில் முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், நாட்டுப்பற்று மிக்கவர்கள் எனப் பல்வேறு சமுதாயத்தார்கள் கூடி ‘புதுக்கோட்டை மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பல சீர்திருத்தக் குழுவிற்காக போராடி வந்தார்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் வக்கீல் விஸ்வநாதய்யர், கௌரவ மாஜிஸ்ரேட், கே. லட்சுமண சர்மா, கே.சாமிநாதய்யர், பி.சுந்தரேசய்யர், வக்கீல் க. நாகராஜய்யர், ஏ.வேணுகோபால் நாயுடு, சி.ஆர்.சுப்பையா போன்றோர் இதில் முக்கியமானவர்கள். மகாத்மா காந்தியின் இந்தியாவிற்கான சுயாட்சி கோரிக்கை, வெள்ளையர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், இரண்டையும் புதுக்கோட்டை மகாஜன சங்கம் ஆதரித்தது.
சத்தியமூர்த்தி புதுக்கோட்டைக்குள் நுழைய
தடை
புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவரும்
வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த பேச்சாளருமான தீரர் எஸ்.சத்தியமூர்த்தி
12.11.1920 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்ற புதுக்கோட்டை மகாஜன சங்க இரண்டாவது
மாநாட்டில் கலந்து கொண்டு வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் புதுக்கோட்டை மன்னர்
ஆட்சிக்கு எதிராகவும் கூட்டத்தில் பேசி விட்டு சென்றார். 02.02.1921 அன்று ‘புதுக்கோட்டை தர்பார் கோப்பு எண் - 809 /
C/1921’ கீழ் ஓர் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள்
எஸ்.சத்தியமூர்த்தி நுழைய தடை விதிக்கப்பட்டது. பிறகு இந்தத் தடையை 25.12.1922 அன்று
நீக்கியது. இதற்கு 09.01.1921 ஆம் தேதி சமஸ்தானத்திற்கு நன்றி கடிதம் அனுப்பினார்.
புதுக்கோட்டை மகாஜன சங்கம், தியாகி சுப்பிரமணிய சிவாவை அழைத்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு பேச வைத்தார் கே.லெட்சுமணசர்மா. சுப்பிரமணிய சிவாவின் பேச்சால் கவரப்பட்ட இவர் தன் கௌரவ மாஜிஸ்ரேட் பதவிலிருந்து விலகினார். அப்பதவி விலகல் கடிதத்தைச் சமஸ்தானம் ஏற்காமல் இவரைத் தற்காலிக பணி நீக்கம் செய்தது. மேலும் சுப்ரமணிய சிவா புதுக்கோட்டையிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார். ஒத்துழையாமை செய்திகளைத் தாங்கி வந்த ஆங்கில இதழ் தி ஹிண்டு, தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் இரண்டையும் புதுக்கோட்டை சமஸ்தானம் தடை செய்தது.
தீரர் சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு ஒத்துழையாமை இயக்க ஆதரவு பிரச்சாரத்திற்குச் சென்ற மகாத்மா காந்தியை 20.09.1921 அன்று வரவேற்பு அளிப்பதென புதுக்கோட்டை மகாஜன சங்கம் முடிவெடுத்தது. இதற்குச் சமஸ்தானம் அனுமதிக்கவில்லை. சமஸ்தான நிர்வாக ஆட்சியாளர் சிட்னி பர்னே காந்தியின் நுழைவுக்குத் தடை விதித்தார். காந்தி வருவதாக இருந்த நாளன்று இளைஞர்கள், மாணவர்கள், காந்தி படங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள்.
காந்தி 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். காரைக்குடிகள் 21ஆம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு காரில் செல்வதாக காந்தியின் சுற்றுப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை வரும் காந்திக்கு நகர எல்லையில் வரவேற்பளிக்க நகராட்சி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் காந்தி புதுகோட்டைக்குள் நுழைவதைத் தடுக்கும்படி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மேற்பார்வை அதிகாரி சிட்னிபர்ன் முதன்மை நீதிபதியாக இருந்த ஜி.கிருஷ்ணசாமி ஐயருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு நீதிபதி 18ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். அதில் அதிகாரி சிட்னிபர்ன் சொல்வதைச் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் காந்தியின் சுற்றுப்பயணங்கள், பேச்சுகளுக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தடை விதிக்கப்படவில்லை, என்பதை நினைவில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். அவரின் ஆலோசனை ஏற்க மறுத்த ஆங்கிலே அதிகாரி புதுக்கோட்டை நீதிபதிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் காந்தி, "நமது அரசை கொடூரமான அரசாங்கம்" என்று சொல்லி வருகிறார். எனவே அவர் புதுக்கோட்டைக்கு வரக்கூடாது. நாட்டில் வேறு எந்த உள்ளாட்சி அமைப்பு அவருக்கு வரவேற்பு அளித்ததாக தெரியவில்லை, என்று கண்டிப்புடம் கூறியிருந்தார்.
புதுக்கோட்டை தர்பார் சார்பில் காந்திக்கு 18ஆம் தேதி எழுதிய கடிதத்தில்," நீங்கள் புதுக்கோட்டை வழியாக வருவதை அனுமதிக்க மாட்டோம். அத்துமீறி நுழைய முயன்றால் எல்லையிலேயே எல்லை காவலர்களால் தடுக்கப்படுவீர்கள்" என்று எழுதினார். ஆனால் காந்தி திருச்சியில் இருந்து மதுரை வழியாக காரைக்குடி சென்று விட்டார்.
இதையறிந்த புதுக்கோட்டை நகராட்சி கவுன்சிலர்கள் சுந்தரேச சாஸ்திரி, சுந்தரேச ஐயர் விஸ்வநாதர் ஐயர், கே.பி.சக்தி ஆகியோர் தலைமையில் நகராட்சி கவுன்சிலர்கள் காரைக்குடி சென்று காந்தியாரிடம் புதுக்கோட்டை நகராட்சியின் வரவேற்பு பத்திரத்தை வாசித்தளித்தனர். இந்த தகவல் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட நான்கு கவுன்சிலர்களையும் நகராட்சியில் இருந்து நீக்கியதுடன் காந்திக்கு அளிக்கப்பட்ட புதுக்கோட்டை நகராட்சியின் வரவேற்பு தீர்மானத்தையும் ஆங்கிலேய அரசு ரத்து செய்தது.
1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி, புதன் கிழமை திருச்சியிலிருந்து மாலை நான்கு மணிக்குப் புறப்பட்டு 5.30 மணிக்கு புதுக்கோட்டையை வந்தடைந்தார். காந்தியுடன் கஸ்தூரிபா, சி.இராஜகோபாலச்சாரியார், காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய், வக்கீல் எஸ்.ராமநாதன், மகன் தேவதாஸ் காந்தி, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். வடக்கு ராஜவீதி டவுன்ஹாலுக்கும் வெளியே மேடை அமைக்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி வந்தபோது மழை பெய்தது. மழைக்குப் பிறகு வரவேற்புக் கமிட்டி தலைவர் கே.சாமிநாத அய்யர், ஆயிரத்து ஒரு ரூபாய் பண முடிப்பும் வரவேற்பு பத்திரத்தையும் காந்தியிடம் கொடுத்தார். இரண்டையும் பெற்றுக்கொண்ட காந்தி, ஆங்கிலத்தில் உரையாற்ற, ராஜகோபாலச்சாரியார் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
மகாத்மா காந்திக்கு புதுக்கோட்டை மக்கள்
அளித்த வரவேற்பு பத்திரம்
அன்பார்ந்த மகாத்மா காந்தி அவர்களே!
சமஸ்தான ஜனங்களின் சார்பாக மிகுந்த வணக்கத்துடனும், பக்தியுடனும் தங்களுக்கு நல்வரவு கூறுகின்றோம். எங்களுக்குளிருக்கும் உரிமையால் இந்த பாக்கியம் வெகுகாலத்திற்கு முன்னே எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டியது. இவ்விஷயத்தில் ஏற்பட்ட காலதாமதம் எங்களுக்கு அந்தப் புண்ணிய தினத்தில் எங்களுடைய சந்தோசத்திற்கு அதிகமான ருசியை அழித்திருக்கிறது. முதுமொழியில் கூறியுள்ளபடி, இந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். முன் நடந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு இன்று மனத்தூய்மையுடனும் உற்சாகத்துடனும் தங்களை வரவேற்கிறோம்.
தமிழ்நாட்டில் சுதேச சமஸ்தானம் இது ஒன்றே.
இச்சமஸ்தானத்தில் பூர்வோத்திரங்கள் அதிகமாயும் பல்வேறு பட்டதாயும் உள. இயற்கைச் செல்வத்தைப்
பற்றியும் ஜனங்களின் பொருளாதார நிலைமையைப் பற்றியும் சொல்ல எங்களுக்கு நா எழவில்லை.
ஏனெனில் அவைகள் மனதிற்குச் சந்துஷ்டியைக் கொடுக்கக் கூடியவை அல்ல. சில வருஷங்களாய்
ஏமாற்றிவரும் மழையையே நம்பியிருக்கும் இச்சமஸ்தானம் ராட்டினத் தொழிலுக்கு முற்றிலும்
ஏற்றதாயிருக்கிறது. இந்திய வாழ்க்கை என்னும் ஆற்றிலிருந்து நாங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும்
சமஸ்தானத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களை நன்குணர்ந்து அவைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவே
முயற்சி செய்துவருகிறோம். நாளடைவில் வெகு தூரம் பின்வாங்கவும் மாட்டோம்.
தங்களுக்கு உபசாரம் மொழிகள் கூறுவது தவறென்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். செய்கையில் குறை வேற்பட்ட போதிலும் முயற்சியில் குறைவில்லை. அநேகர் கதராடை புனைகிறார்கள். ‘ராட்டினம்’ என்னும் மந்திரம் ஏழையும் குடியானவனையும் என்னும் இன்னும் எட்டவில்லை. இது எங்களை வெட்கும்படி குடியானவனையும் இன்னும் எட்டவில்லை. இது எங்களை வெட்கும்படி செய்யக்கூடியதாயினும் வெகுநாளாவதற்கு முன் அவர்களுக்கும், ஏனையோராகிய எங்களுக்கும் இவ்வியக்கம் மனதில் ஆழ்ந்து பதியுமென்பதற்கு அறிகுறிகள் இல்லாமலில்லை.
இச்சமஸ்தான சட்டசபைக்கு எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் நூல் நூற்பதைக் கட்டாயமாகத் திட்டம் செய்யவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றிய கௌரவம் ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து நன்மை ஏற்படலாம். பெரும்பான்மையோர் உத்தியோகவர்க்கத்தினர் அல்லாதவராய் இருக்கும் அச்சபையில் தங்கள் பெயர் அடிக்கடி உற்சாகத்தை விளைவித்துகொண்டிருக்கிறது. குடி என்னும் தீங்கை அறவே ஒழிக்க முயன்று வருகிறோம். ஏனைய இடங்களைப்போல ஜனங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கம் இதிலிருந்து கிடைக்கும் வருவாய் போனால், அந்த வருவாயை ஈடு செய்ய வேறு வழியில்லையென்று கூறப்படும் வாதம், இவைகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்விஷயம் மெத்த அவசரமானதென்றும், இவ்வித சீர்த்திருத்தம் அவசியமானதென்றும் எல்லாருக்கும் நல்ல உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இது ஜன நன்மைக்கே. ஜன சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் குறைகளை நீக்குவது தங்கள் முக்கியமான கார்யங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். தீவிரப் புத்தியுடன் அவைகளை நாங்கள் கவனிக்கவில்லை. இது எங்களுக்குக் குறைவுதான். தங்கள் வருகையால் மனிதருக்குள் ஏற்பட்டிருக்கும் தீண்டாமை எனும் நோயை நீக்குவதில் உற்சாகம் ஏற்படுமென்று நம்புகிறோம். தாங்கள் மறுமுறை இச்சமஸ்தானத்திற்கு வருங்கால் நாங்கள் செய்த வேலைகளைப் பற்றி இன்னும் மேலான விவரம் கூறலாமென்று எண்ணுகிறோம். தற்காலம் தாங்கள் வந்ததிலிருந்து மனச்சோதனை ஏற்பட்டிருக்கிறது. கிரியாம்சையில் நடைபெறக்கூடிய சீர்த்திருத்தங்கள் ஏற்படுமென நம்புகிறோம்.
மகாத்மா அவர்களே! சொற்ப தொகையுள்ள இந்தப்
பணமுடிப்பைத் தங்களுக்குக் கொடுப்பதற்கு மன்னிக்குமாறு வேண்டுகிறோம். கடவுளாலும் மனிதனாலும்
நல்ல விஷயங்களுக்குப் பற்பல காரணங்களால் ஏற்படும் இடையூறுகள் தங்களுக்குத் தெரிந்தவைகளாதலால்
எங்கள் குறைவுகளை மன்னிக்கப் பிரார்த்திக்கின்றோம். வெளித்தோற்றத்திற்கு வெகு அதிருப்தியாய்
இருக்கும் விஷயங்களிலும் நன்மை பயக்கக்கூடிய ஓர் அணுவேணுமிருக்குமாததால், தங்களது வரவு
எங்களுக்குப் புத்துயிரளித்து, உள்ளும் புறமும் எங்களைப் புனிதமாகச் செய்யுமென்று நம்பிக்கை
மட்டும் கொள்ளலாம்.
மகாத்மா அவர்களே! தங்கள் வரவிற்காக நாங்கள் எங்கள் நன்றியைச் செலுத்துகிறோம்.
தாங்கள் பொதுவாழ்க்கையைப் பரிசுத்தமாகச் செய்து, எங்களது நோக்கங்களை லோகாயதமாயிருப்பதிலிருந்து
உயர்தர உணர்ச்சிகளாகச் செய்ய எங்களுக்கு உதவியளித்தீர்கள். தங்கள் ஒப்பற்ற வாழ்க்கையால் நாங்களும் பயனடைவோமாக! இவ்வாறு வரவேற்பு பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கிறது.
காந்தியின் பதிலுரை
சபைத் தலைவர் அவர்களே! நண்பர்களே!
தங்களுடைய வரவேற்பிற்காகவும் நீங்கள்
தந்த பணம் முடிப்பிற்காகவும் உங்களுக்கு வந்தனம் செலுத்துகிறேன். நீங்கள் அளித்த வரவேற்பு
பத்திரத்தை நான் முன்னமே படித்துவிட்டேன். நீங்கள் என்னைப் பார்க்க பல காலம் காத்திருப்பது
போல நானும் உங்களைப் பார்க்க பல நாள் காத்திருந்தேன். வரவேற்பில் உங்களுக்கு ராட்டையிலும்
கதரிலும் நம்பிக்கை இருப்பதாகவும் சமஸ்தானத்தில் உள்ள ஏழ்மையையும் சொல்லி இருக்கிறீர்கள்.
நாட்டில் ராட்டைக்கு அவசியம் இருக்கிறது என்று சொல்லியிருப்பது உண்மையே. இதை நான் பாரத தேசம் முழுவதுமான சுற்றுப் பயணத்தின் போது உணர்ந்திருக்கிறேன். இது தவிர உங்களுடைய பள்ளிக்கூடங்களில் எல்லாம் நூல் நூற்பதைக் கட்டாயமாக்க வேண்டும், என்பதை ஒரு தீர்மானமாகக் கூட சட்டசபையில் நிறைவேற்றி இருக்கிறீர்கள். இம்மாதிரியான தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நீங்களும் நானும் தீர்மானத்திற்காகவும் கொள்கைக்காகவும் உழைக்கின்றோமோ அவை செயலில் கொண்டு வந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும். தீர்மானங்கள் நிறைவேற்றுவது சுலபம். இது மாதிரி தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்குச் செலவு ஒன்றும் கிடையாது. ஆகவே நாம் இப்படி தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல் செயலில் கொண்டுவர பிரச்சார வேலைகளைத் தொடங்க வேண்டும்.
மழை பெய்துகொண்டிருக்கிறது. மழை வந்ததும் நன்மைதான். நன்றாய் மழை பெய்வதால் நான் உங்களை அதிக நேரம் காக்க வைக்க போவதில்லை. நான் பேசும் விஷயங்களை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். நான் சென்னைப்பட்டினம் முதலிய இடங்களில் பேசியிருப்பதைப் பத்திரிகைகள் மூலம் அறிந்திருப்பீர்கள். மதுபான விஷயத்தில் இங்கிருக்கும் நிலைமை எனக்கு தெரியாது. கல்லும் சாராயமும் இல்லாமல் அறவே ஒழித்து விட்டால் நமக்கு நன்மைதான். மதுபானத்தை ஒழிக்க வேண்டுமானால் பூரண மதுவிலக்கை சட்டபூர்வமாக்க வேண்டும். சிறு குழந்தைகளைப் பால்யத்திலேயே கல்யாணம் செய்து பாழாக்குவது பற்றி நாம் செய்யும் வேலை அதிகம் இருக்கிறது. இந்த பாவத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் மக்கள் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டும்.
மனிதனாக பிறந்தவன் எவனையும் தீண்டத்தகாதவன் என்று கூறுவது அநியாயமாகும். இது ராட்சசர்களின் பண்பாடு. இந்த ராட்சச பண்பாட்டை நீங்கள் விட்டு விட வேண்டும். அடுத்தபடியாக நகர சுகாதாரம், கிராமச் சுகாதாரம் செழிப்புற வேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல பசும்பால் கிடைக்க வேண்டும். அதற்குப் பசு மாடுகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும். பிராமணன், பிராமணர் அல்லாதவர் பிரச்சனை இங்கு இருந்தால் அது அவமானதாகும். நான் இன்று கூறியவற்றை நீங்கள் நடைமுறையில் செய்தால் நான் எவ்வளவோ மகிழ்ச்சி அடைவேன். கதர் நிதிக்கு இதுவரை உதவாதவர்கள் இப்போது உதவ வேண்டுகிறேன், என்று பேச்சை முடித்தார். காந்தியின் இந்த உரையை ராஜகோபாலாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்தார்.
காந்தி தங்கிய புதுக்கோட்டை விடுதி
காந்தி பேசிய பொதுக்கூட்டம் முடியும் போது மழைபெய்து கொண்டிருந்தது. சில தொண்டர்கள் ஒரு சேலையை விரித்து பணவசூல் செய்தார்கள். அதில் 88 ரூபாய் வசூலானது, நகரப் பேட்டையார்கள் (வணிகர்கள்), ஐம்பத்தொரு ரூபாய் பணம் முடிப்பும் ஒரு வரவேற்பு பத்திரமும் மகாத்மாவிடம் அளித்தார்கள். விலை உயர்ந்த மாலை ஒன்றை மகாத்மாவுக்கு ஒருவர் அளித்தார். இந்த மாலையை ஏலம் விடுமாறு காந்தி கூற ராஜகோபாலாச்சாரி ஏலம் விட, பி.கே.ராஜகோபாலய்யர் ரூபாய் பன்னிரெண்டு ஏலம் எடுத்தார். அந்த மாலையை காந்தி அவருக்கே அணிவித்தார். பின்னர் கூட்டம் கலைந்தது.
இக்கூட்டம் முடிந்து அன்றைய இரவு சா.அ. பங்களாவில் தங்கினார். இந்தப் பங்களா இன்றைய அண்ணா சிலைக்கும் பின்புறம் கீழராஜ வீதியில் இடதுபுறமிருந்தது. இது எஸ்.எ.ராமநாதன் செட்டியாருக்குச் சொந்தமானது.
எஸ்.எ.ராமநாதன் செட்டியார் குமுதம் வார இதழ் நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் பெரிய தந்தையார். ராமநாதன் செட்டியாருக்குப் பின் குடும்பம் பொருளாதார ரீதியில் நலிந்துபோனதால் சா.அ. பங்களாவை விற்றுவிட்டனர். தற்போது இந்த இடம் இந்த மாசிலா சுந்தரம் மாளிகை என்ற பெயரில் இயங்கி வருகிறது.
ராமநாதனின் ஊர் செட்டிநாடு கானாடுகாத்தான். இவர் அக்காலத்தில் பர்மா நாட்டில் பெரிய வங்கியாளர். இந்தப் பங்களா அப்பொழுது ‘மானசரோவர்’ என்று அழைக்கப்பட்டது. மானசரோவர் என்பது இமயமலையிலுள்ள ஒரு சிகரம்.
காந்தியை வரவேற்ற ஒரே சட்டசபை
காந்தி தங்கிய பங்களா உரிமையாளரின் சொத்துப்பொருட்பாளர் இருந்தவர், சி. ஆர். சுப்பையா. இவர் மகாத்மா காந்தி, திருவண்ணாமலை ரமண மகரிஷி இருவரின் பற்றாளர். இவர் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்துவரும் ஆன்மீக பொதுவுடைமை ஜனநாயக சோஷலிச நெறியாளர் மு.வேதரெத்தினத்தின் தாத்தா. வரவேற்பு பத்திரத்திலும் மகாத்மா காந்தியின் சொற்பொழிவிலும் இடம் பெற்ற ஒரே சட்டசபை புதுக்கோட்டை சமஸ்தான சட்டசபையாகும்.
குறிப்பு- இக்கட்டுரை ஏப்ரல் 2013, உயிர் எழுத்து இதழில் பிரசுரமானது.
.jpeg)
.jpeg)













கருத்துகள்
கருத்துரையிடுக