முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறிவொளி இயக்கக் காலமும் விராலிமலை பிரச்சனையும்

ற்றது கையளவு என்றார் ஔவை மூதாட்டி.  சிறையளவு என்கிறார் கவிஞர் ஆர்.நீலா. கற்றது சிறையளவு, சிறையில் கைதிகளாக வாழ்ந்த பள்ளி வயதுக் குழந்தைகளின் கற்றல் நிலையை ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்த நூல். ஆர்.நீலாவின் சிறப்பே இதுதான். இவரது எழுத்தில் உயிர் இருக்கும், மெய் இருக்கும், களமும் இருக்கும். கற்றது சிறையளவு நூலின் களம் சிறைச்சாலை.

இந்நூலின் வெளியீடு அவரது ஊரான ஆலங்குடியில் நடைபெற்றது. ஆண்டு 2012. நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு அழைப்பாளர் புதுக்கோட்டையின் மேனாள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷீலாராணி சுங்கத் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறிவுக்கண் திறந்தவர் இவர். அறிவொளி தீபத்தை இயக்கமாக பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தவர். அவர் இன்னும் எத்தனை உயர்வான பதவிக்குப் போனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மேனாள் கலெக்டர் என்பது அவரது உயர்பேறு. இம்மாவட்டத்தில் எத்தனை ஆட்சியர் பணியேற்று ஆட்சிப்புரிந்தாலும் ஷீலாராணி சுங்கத் பிடித்த இடத்தை இனி அவரால் கூட நிரப்ப முடியாது. மக்களோடு மக்களாக நின்றவர்.

இந்த இடத்தில் புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் நினைவுகூர வேண்டும். 1988 ஆம் ஆண்டு மே திங்கள் 5 ஆம் நாள், தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தைத் தோற்றுவித்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள். தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கங்கள் 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கும் முன்னதாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மக்கள் எழுத்தறிவு திட்டம் ‘சாட்சரதா’ என்கிற பெயரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதுச்சேரி அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது.  

1990 ஆம் ஆண்டு அகில இந்திய அறிவியல் இயக்கம் மூலம் நடைபெற்ற எழுத்தறிவு விழிப்புணர்வு கலைப்பயணம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வந்தது. ராஜமாணிக்கத்தின் கடிதம், சரஸ்வதி, நடுக்காட்டுத் தாய்க்குப் பொங்கல் வைப்போம், ஏகலைவனின் பெருவிரல் இக்கலைப்பயணக் குழு அரங்கேற்றிய முக்கிய நாடகங்கள். பாடல்களை பிரளயன், அ.வெ.சுந்தரபாரதி, முத்துநிலவன், வெற்றி நிலவன், பொன்.கருப்பையா போன்ற கவிஞர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

டாக்டர் வி.பி. ஆத்ரேயா, ஆர். கருப்பையா இவர்களின் முயற்சியால் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை கிளை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பூரண எழுத்தறித் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் குற்றாலிங்கம் பரிந்துரையின் பேரில் மத்திய எழுத்தறிவு இயக்கத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது. அவர் வேறொரு மாவட்ட ஆட்சியராக மாறுதல் அடைந்ததன் பிறகு திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்கள் இத்திட்டத்திற்குச் சிறப்புக் கவனம் செலுத்தினார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வியறிவில்லாத 9 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அனைவரையும் ஏப்ரல் திங்கள் 1992 இக்குள் எழுதப்படிக்கத் தெரிந்தவராக மாற்றுவது புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. அப்போது சுமார் 2,90,000 பேர் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. 23.07.1991 நாளன்று தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கம் 13.04.1992  நிறைவுற்றது. இவ்வியக்கத்தின் வெற்றி விழா ஆகஸ்ட் 11, 1992 அன்று நடைபெற்றது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மூன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் அறிவொளி இயக்கத்தில் பங்கெடுத்திருந்தார்கள். கற்போம்! கற்பிப்போம்! என்கிற தாரக மந்திரத்துடன் அறிவொளி இயக்கம் பற்றி திட்டமிடுகையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் திரு.குற்றாலிங்கம் இ.ஆ.ப அவர்கள். அறிவொளி இயக்கம் முதல் மாவட்ட மாநாட்டுடன் தொடங்குகையில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷீலாராணி சுங்கத் இ.ஆ.ப அவர்கள் பதவியேற்றிருந்தார். நிறைவில் தொடர் அறிவொளித் தலைவராக டாக்டர்.அனுராதா கதிராஜிவன் இ.ஆ.ப இணைந்துகொண்டார்.

மூவரில் புதுக்கோட்டை அறிவொளி இயக்கம் என்றதும் நினைவுக்கு வருகிறவர் திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்கள்தான். இவர் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்திக்கையில் அப்பொழுது பிறந்திருக்கும் பல குழந்தைகளுக்கு ஷீலாராணி பெயர் சூட்டப்படும் அளவிற்கு இவர் மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்தார். இவரே புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தின் தலைவர். உறுப்பினர்களாக பதினான்கு பேர். அவர்களாவன டாக்டர். வெ.பா. ஆத்ரேயா (அறிவொளி மாநில ஒருங்கிணைப்பாளர் ), அ.சுகுமாரன் ( மாவட்ட வருவாய் அலுவலர் ), கு.சீனிவாசன் ( திட்ட அலுவலர்), அறந்தாங்கி கோட்டாட்சியர்,  மா.கிருஷ்ணமூர்த்தி (அறிவொளி இயக்கச் செயலர்), என்.இராமசாமி( அறிவொளி இயக்கப் பொருளர்), முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை கோட்டாட்சியர்,  கோட்ட வளர்ச்சி அலுவலர், பள்ளி சாரா கல்வி இயக்குநர், டோரதி கிருஷ்ணமூர்த்தி,  நேரு இளையோர் ஒருங்கிணைப்பாளர். 

இவர்கள் தவிர மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அறிவொளி மைய ஒருங்கிணைப்பாளராக இரா. விவேகானந்தன், த.சிவராமகிருஷ்ணன், மெ.கவனகன், கண்ணம்மாள், நா. முத்துபாஸ்கரன்,  எஸ். இளங்கோ, வெங்கட்ராமன்.

இந்த அறிவொளி இயக்கத்தில் தன்னையொரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு திருவரங்குளம் ஒன்றியத்தில் களப்பணியாற்றியவர் ஆர். நீலா அவர்கள். இயக்கத்தின் கடைகோடி தொண்டர். பிறகு இவர் சுயதிறமையால் கவிஞராக, பாடகராக,  எழுத்தாளராக, பேச்சாளராக தன்னை வார்த்தெடுத்துக்கொண்டார். வீணையல்ல நானுனக்கு, அலையும் குரல்கள், பாமர தரிசனம், சக்கரவாகப் பறவைகள், சிபிகளும் புறாக்களும் என பல நூல்கள் வெளியிட்டார். இவர் அறிவொளி இயக்கக் காலத்தில் களப்பணியாகச் செய்த நூல்தான் கற்றது சிறையளவு. இந்த நூல் வெளியீட்டு விழா அவரது ஊரான ஆலங்குடியில் அறிவொளி இயக்கம் நிறைவுற்ற சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு அதாவது 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஷீலாராணி சுங்கத் அவர்கள் வருகை தருகிறார்.

வெளியீட்டு விழா சிறப்புற நடந்து முடிந்ததன் பிறகு இருபது பெண்கள்  மேனாள் மாவட்ட ஆட்சியர் ஷிலாராணி சுங்கத் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். கண்ணீரும் கம்பலையுமாக அவர்களின் முன்பு காட்சியளிக்கிறார்கள். அவர்கள் கண்களின் வழியே  ஆட்சியரிடம் பேசுகிறார்கள். கண்களின் வழி என்பது கண்ணீர் வழி. அவர்களின் மொழியில் நன்றி இருக்கிறது. கெஞ்சலும் வேண்டலும் தவிப்பும் இருக்கின்றன. கடைசியாக அவரிடம் ஒரு மனுவைக் கொடுக்கிறார்கள். அதை வாங்கி வாசித்த ஷீலாராணி சுங்கத்தின் முகம் மாறுகிறது. இப்பிரச்சனைக்கு அன்றே தீர்வு காண முயல்கிறார். அன்று அவர் மாவட்ட ஆட்சியர் அல்ல. ஆயினும், புதுக்கோட்டை  அதிகாரிகளைக் கூட்டி அவர்களுடன் விவாதிக்கிறார். சற்றேநேரத்தில் மாவட்ட தலைமை இடங்களில் அதிகாரிகள் மத்தியில் விராலிமலை இரண்டாம் முறையாக அதிகம் உச்சரிக்கப்படும் ஊராக மாறுகிறது. விராலிமலை எத்தகைய பிரசித்திப் பெற்ற ஊர். அவ்வூரின் மீது இப்படியொரு கருப்புப் புள்ளியா, உதட்டுச் சுழிப்புக்கும் நெற்றிச் சுருக்கலுக்கும் உள்ளாகிறது.

 

விராலிமலை பெயர்க் காரணம்

விராலி என்கிற செடியைப் பெயரைக் கொண்டு உருவான ஊர் விராலிமலை. மூலிகைச்செடி இது. இதே செடியைப் பெயராகக் கொண்டு விராலிப்பட்டி என்றொரு ஊர் கந்தர்வகோட்டைக்கும் அருகில் உண்டு.

விராலிமலை மயில்களின் சரணாலயம். மயிற்காவடிக்குப் பெயர் போன ஊர். அருணகிரிநாதர் சித்தி பெற்ற தலம் விராலிமலை சுப்பிரமணியர் கோவில். எம்மைப் புகழந்து பாட யாமுரையும் விராலிமலைக்கு வருக, என முருகனால் அழைக்கப்பட்டவர் அருணகிரிநாதர். இவர் பதினாறு திருப்புகழ் பாடல்கள் விராலிமலை முருகன் மீது பாடியுள்ளார்.

பரதமும் சதுர் நடனமும் விராலிமலை முருகன் கோவில் திருவிழாக்களின் போது தேவரடியார்களால் அரங்கேற்றம் செய்யப்படுவதாக இருந்தது. கூத்துப் பெண்களைச் சங்கப் பாடல்கள் விரலியர் என்கிறது. விரலியர்கள் நிரம்பப் பெற்ற மலை விரலிமலை, பிறகு அது விராலிமலை என்றானதாக இவ்வூர் பற்றிய புனைவு கதையும் உண்டு. 

இதுதவிர, குறவஞ்சி பாடப்பட்ட ஊராகவும் விராலிமலை இருக்கிறது. செவ்வூர் வடுமு வைத்யலிங்க கவிராயரின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள செவ்வூர் எனும் ஒரு சிற்றூர். இவர் விராலிமலையில் பெரும்பகுதி காலத்தைக் கழித்தவர். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மீது அவருக்கிருந்த பற்றினால் விராலிமலை மீது குறவஞ்சி பாடினார். ஓலைச்சுவடியில் ஒவ்வொரு ஓலையிலும் ஏழு வரிகள் வீதம்,  32 ஏடுகளில் இக்குறவஞ்சி இயற்றியவர். இந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு 30.10.1955 அன்று இந்த ஓலைச்சுவடு  கையெழுத்துப் பிரதியாக்கப்பட்டது. இந்த ஓலைச்சுவடியைச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கியவர், சிங்காரவேலு கவிராயர் அவர்கள். இவர் திருச்சி மாவட்டம், மிதிலைப்பட்டியைச் சேர்ந்தவர்.

புதுக்கோட்டை சமஸ்தானம் காலத்தில் விஜயரகுநாதராய தொண்டைமான் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் சுப்ரமணிய முதலியார், என்றொரு அமைச்சர் இருந்தார். புதுக்கோட்டை கோவில் திருவிழாக்களின் போது இந்த விராலிமலைக் குறவஞ்சியை  நாடகமாக அரங்கேற்றம் செய்தவர் இவர்.

ஸ்ரீவள்ளித் திருமணம் நாடகம் மேடைகளில் அரங்கேற்றம் ஆவதற்கு முன்பாக புதுக்கோட்டை கோவில் திருவிழாக்களில் இரவு நேர நாடகமாக விராலிமலை குறவஞ்சி அரங்கேறியுள்ளது.

குறவஞ்சியின் பொது அமைப்புகளான கட்டியக்காரன் வருகை, பாட்டுடைத் தலைவன் பவனி வருகையை அறிமுகப்படுத்துதல், பாட்டுடைத் தலைவன் பவனி வருதல், பவனி வந்த தலைவனை மோகினி காமுறுதல், மயங்கிய மோகினி, சந்திரன், தென்றல் முதலியவற்றை நிந்தித்தல், பாங்கி மோகினியின் நிலைகண்டு அவளை உசாவுதல், தலைவி பாங்கிக்கு உற்றது உரைத்தல், குறத்தி வருதல், தலைவி, குறத்தி தனது மலைவளம், நாட்டுவளம் பற்றி கூறல், தலைவி குறத்தியிடம் குறி கேட்டல், குறத்தி தலைவிக்குக் குறி கூறல், தலைவி குறத்திக்குப் பரிசு வழங்கல், குறவன் வருகை, பறவைகள் பிடித்தல், குறவன் குறத்தியைக் காணாது தேடுதல், குறவன் குறத்தியின் அடையாளத்தைக் கூறல், குறவன் – குறத்தி சந்தித்தல், குறவன் குறத்தியிடம் உள்ள அணிகலன்கள், குறத்தி குறவன் வினாக்களுக்கு விடைகூறல், குறவன் – குறத்தி இருவரும் அகமகிழ்ந்து இணைதல் ஆகிய காட்சிகளாக இக்குறவஞ்சி இயற்றப்பட்டுள்ளது.

குறத்தி இக்குறவஞ்சியில் தான் கண்டுவந்ததாக கீழ்காணும் தேசங்களைக் குறிப்பிடுகிறாள். வடகாசி, வங்காளம், மலையாளம், மாகதம், கச்சி, கபாடம், கொங்கம், குடகம், துருவம், சீனம், குலிங்கம், விலாடம், சிங்களம், ஈழவம், சாழுவம், கங்கம், துளுவம், கேசயம், கண்டி, திரிகூடம், கலிங்கம், விராடம், கொச்சி, கர்நாடகம், இந்துஸ்தானம், துலுக்கானம், கேளம், சிந்து, டில்லி, கொல்லம். இங்கு சிங்களம், ஈழவம் எனத் தனித்தனியே குறிப்பிடப்படுவது முக்கியமானது.

மேலும்  குறத்தி சென்று வந்த தெய்வத் தலங்களையும் குறிப்பிடுகிறாள். சீரங்கம், திருவானைக்காவல், சிராபள்ளி, திருவாடுதுறை, கண்ணபுரம், திருவையாறு, கண்டியூர், குடந்தை, மத்தியார்ச்சுனம், சிதம்பரம், சீர்காழி, பேரம்பலம் ( சிதம்பரம்), திருக்குத்தாலம், வேங்கிடம், காஞ்சிபுரம், பேரூர், திருவாரூர், வேளூர், மறைக்காடு, பெருந்துறை, செங்காட்டங்குடி, மன்னார்கோயில், திருவெண்காடு,நாவலூர், மாயூரம், திருவிடைமருதூர், திருவாடனை,ராமேசுரம்,உத்திரகோசமங்கை, திருச்செந்தூர், தென்காசி, கூடல், திருக்கோட்டியூர், திருவேட்கம்,திருக்கழுக்குன்றம், ஆவின்குடி, வடகாசி, அண்ணாமலை, கருவூர், கடம்பர்கோயில், வயலூர்.

 குறத்தி குறிப்பிடும் குறச்சாதி வித்தைகள் இங்கு குறிப்பிடத்தகுந்தவை. ஆனைகளைப் பிடித்து கரகத்தில் அடைத்தல், சிங்கத்தைக் குரங்காட்டம் செய்தல், பூனையைப் புலிவடிவாக்குதல், புலியைப் புலிவடிகாக்குதல், மானைப் பிடித்து இடையில் கட்டுதல், கரடியாட்டத்தைக் கண்டு மகிழ்தல், மரப்பாவையைச் சிரிக்க வைத்தல், எட்டிக்காயை மாங்கனியாக்குதல், இரும்பையும் செம்பையும் தங்கமாக்குதல், தண்ணீருக்குள் சென்று சோறு சமைத்தல், தண்ணீரில் கல் மிதக்க வைத்தல், அக்கினியில் ஏறி நடத்தல், புவியை அரைக்கணத்தில் வலம்வருதல், இவையாவும் இக்குறவஞ்சியில் பாடப்பட்டுள்ளன. இவ்வளவும் கொண்ட நாடக வடிவமாகவும் அன்றைய மக்களின் சிறந்த பொழுதுபோக்கு நாடகக் கலையாகவும் இருந்திருக்கிறது, என்பது விராலிமலை மக்கள் கூட அறிந்து வைத்திருக்காத செய்திதான். அத்தகைய சிறப்புகள் கொண்ட விராலிமலை மீதுதான் இந்தியாவின் மொத்த கண்களும் குவியத் தொடங்கின.

நாம், புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்திற்கு வருவோம். அறிவொளி இயக்கம் ஒரு சங்கிலித் தொடர் இயக்கமாக களம் கண்டது. கற்போர் கணக்கெடுப்பு இயக்கம், அறிவொளி மனிதச் சங்கிலி, ஊர் கூடி இதழ், கற்பிக்கும் நாள், அறிவொளி ஒற்றுமை, சேமிப்புப் பழக்கம், ஒருங்கிணைப்பாளர் பார்வையிடல்,  கிராம புத்துணர்ச்சி, அறிவொளி கிராமத் திருவிழா, அறுவடை வேலை, கற்போர் சந்திப்பு இயக்கம், அறிவொளி தீபம்-1 முடித்தல், அறிவொளி கடன், கலைப்பயணம், அறிவொளி தீபம்-2 முடித்தல், மக்கள் ஒற்றுமை, பெண்கள் சைக்கிள் ஓட்டுதல், தென்றல் இதழ், அறிவொளி தீபம்-3 முடித்தல், அறிவொளி சுற்றுலா, மதிப்பீடு , வெற்றிவிழா இவை அறிவொளி இயக்கத்தின் தொடர் நிகழ்வுகள்.

புதுக்கோட்டையில் அறிவொளி இயக்கம் வெற்றி விழா கண்டு இந்தியாவில் முழு எழுத்தறிவு கண்ட மாவட்டங்களின் வரிசையில் புதுக்கோட்டை  இடம் பெற்று அறிவொளி தீபத்தை உயர்த்திப் பிடுக்கையில், ஒரு நோய் இந்த உலகத்தின் பிடரியை இறுகப் பற்றி குலுக்கிக்கொண்டிருந்தது. இந்தியாவில் தாக்கத்தின் உச்சமாக புதுக்கோட்டையில், குறிப்பாக விராலிமலையில் இருந்தது. பால்வினை நோயான எய்ட்ஸ் அது.

 

விராலிமலையில் ஏன் எய்ட்ஸ் அதிகம்?

இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சிகள் தொடங்கின. காரணம் தெரியவந்தது. விராலிமலை அரசால் தடை செய்யப்பட்ட தேவதாசி என்கிற பெயரால் திரைமறைவாக நடைமுறையிலிருக்கும் ஊர் என்று. இதை நடைமுறைப்படுத்துவதில் ஊரின் முக்கியஸ்தர்களும் காவல்துறையினரும் மும்முரம் காட்டிய செய்தியும் தேளைப் போல ஊர்ந்தன.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் வரிசையில் புதுக்கோட்டையும் புதுக்கோட்டையிலுள்ள விராலிமலையும் முன்னிலையில் இருப்பதைக் கண்டு மாவட்ட நிர்வாகம் கூனிக் குறுகியது. இதற்கொரு தீர்வு காண முனைந்தார் அன்றைய மாவட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத்.  டாக்டர் முத்துலெட்சுமி கண்ட அதே கனவுதான். தேவதாசி முறையின் மிச்சச் சொச்சங்கள் வேறொரு வடிவத்தில் நடைமுறையிலிருப்பதை முற்றுப்புள்ளிக்கு கொண்டுவர நினைத்தார். இதிலிருந்து அப்பெண்களை முழுமையாக விடுவிக்க திட்டம் வகுத்தார். அதற்காக அவர் விராலிமலையில் அடிக்கடி முகாமிட்டார். அப்பெண்கள் வாழும் பகுதியைக் கண்டறிந்து அப்பெண்கள் கட்டாயமாக எய்ட்ஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார். நூற்று ஐம்பதுக்கும் மேலானவர்கள் பரிசோதனை செய்துகொள்ள முன்வந்தார்கள். அவர்கள் அத்தொழிலிருந்து மீண்டுவர தன்னார்வப் பெண்களை வைத்து ஒரு குழு அமைத்தார். அக்குழுவில் ஒருவராக கவிஞர் ஆர். நீலா இடம்பெற்றார்.

இத்தொழிலிருந்து அவர்கள் நிரந்தரமாக வெளியேற சிறப்புப் பயிற்சி அளிக்க அரசு முன்வந்தது. இத்தொழிலிலிருந்து வெளியில் வரும் பெண்களுக்கு வாழ்வாதாரம், என்கிற கேள்வி தன்னார்வலர்கள் முன் வைத்தார்கள். அதற்காக ஒரு கைத்தொழிலை பயிற்சியாகக் கொடுக்க அரசு முன் வந்தது. அன்றைய காலத்தில் புதுக்கோட்டை மக்களிடம் கைத்தொழிலாக இருந்த தொழில்கள் ஜெம் கட்டிங், நெட்டி கைவினைப் பொருட்கள், மண்பாண்டம், டெரக்கோட்டா, நர்சரி கார்டன், கயிறு திரித்தல். தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஆலோசித்ததில், ‘ஜெம் கட்டிங்’, என்கிற செயற்கைக் கல் உற்பத்தித் தொழிலை அரசு பரிந்துரைத்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களில் ஐம்பது பேர் மட்டும் இத்தொழிலைக் கற்றுக்கொள்ள முன்வந்தார்கள். அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சியளித்து, மானியத்துடன் கூடிய ஜெம் கட்டிங் இயந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தொழிலில் அவர்கள் மெல்ல முன்னேறிக்கொண்டு இதற்கும் முன்பு செய்த தொழிலை மறந்துகொண்டிருக்கும் சமயத்தில், இரண்டு பிரச்சனைகள் அவர்களுக்குச் சவாலாக இருந்தன. ஒன்று, உள்ளூர் பிரமுகர், காவல் துறையினரால் மிரட்டப்பட்டு அப்பெண்கள் பழையபடி அத்தொழில் செய்ய கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

மற்றொரு பிரச்சனை, புதுக்கோட்டையில் பட்டைத் தீட்டப்பட்ட செயற்கைக் கல்லுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைத் தெரிந்துகொண்ட கேரளா, கர்நாடகம் மாநிலத்தினர் அக்கற்களை இங்கே இறக்குமதி செய்தார்கள். இதனால் இப்பெண்களின் கைத்தொழில் குன்றியதுடன், அத்தொழில் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியது. இதற்கிடையில் கடன் வழங்கிய வங்கிகள் கொடுத்தக் கடனை வசூல்செய்ய தீவிரம் காட்டின.

ஐம்பது பேரில் முப்பது பேர் வாங்கிய இயந்திரத்தை விற்று, கடனை அடைத்து, திரும்பவும் பழைய தொழிலுக்குத் திரும்பிவிட்டார்கள். இருபது பேர் உறுதிபட ஜெம் கட்டிங் தொழிலில் நின்றார்கள். இப்போது மாவட்ட ஆட்சியர் திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்கள், பதவி உயர்வுபெற்று புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்குச் சென்றார். அவர் செல்வதற்கும் முன்பாக, இந்த இருபது பேரின் மனத்திடம் மற்றும் மனமாற்றத்தை பாராட்டும் பொருட்டு இருபது பேரும் வீடு கட்டிக்கொள்ள, அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

அரசு விலையில்லா எந்தப் பொருளை வழங்கினாலும் அதை உடனே பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். அரசு யாருக்கேனும் நிலம் கொடுத்தால் ஆறு மாதங்களுக்குள் அதில் கொட்டகை போட்டுவிட வேண்டும். இதைத் தெரிந்து வைத்திருக்காத அப்பெண்கள் பட்டாவை மட்டும் பத்திரப்படுத்திக்கொள்கிறார்கள். சில மாதங்களில் அந்த இடத்தில் கிராம நிர்வாகம் அரசு அலுவலகங்களை எழுப்பிக்கொண்டது.

இருபது பெண்களும் வயிற்றில் அடித்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓடினார்கள். அங்கு புதிய ஆட்சியர். அவரிடம் முறையிட்டு, அடுத்தடுத்து ஆட்சியர்கள் மாற,  தொடர்ந்து முறையிட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் ஆர்.நீலாவின் கற்றது சிறையளவு நூல் வெளியீட்டு விழா ஆலங்குடியில் நடைபெறுகிறது. அங்கு மேனாள் மாவட்ட ஆட்சியர் ஷிலாராணி சுங்கத் அவர்கள் வருகைத் தருவதைக் தெரிந்துகொண்டு, அந்த இருபது பேரும் கண்ணீர் மல்க, நீங்கள் எங்களுக்குக் கொடுத்த இடத்தை உங்கள் நிர்வாகமே திரும்ப எடுத்துக்கொண்டது. அந்த இடத்தை மீட்டுத் தாருங்கள், அல்லது அதற்கு நிகராக மாற்று இடம் வழங்குங்கள், என வேண்டல் மனு கொடுத்தார்கள். அந்த மனு இதுநாள் வரை பரீசிலிக்கப்படவில்லை, என்பது பெருஞ்சோகம்.

கற்றது சிறையளவு நூலினைத் தொடர்ந்து ஆர்.நீலா கொண்டுவந்திருக்கும் சிபிகளும் புறாக்களும், என்கிற சிறுகதைத் தொகுப்பில் தலைப்பிடப்பட்ட கதை, பாலியல் தொழில் செய்து நோயால் மாண்டுபோகும் ஒரு பெண், அப்பெண்ணிடம் வாழ்நாள் கைதியாக இருந்த வளர்ப்பு மகள் இருவரைப் பற்றியும் கதையாடுகிறது.

அக்கதையின்படி, ஒரு பாலியல்தொழிலாளி, ஒரு குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வருகிறாள். வீட்டிலேயே அவளுக்கென்று ஒரு ஆசிரியரை நியமித்து பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். ஒரு நாள் அச்சிறுமி பூப்பெய்துகிறாள். அப்பெண்ணின் பூப்புநீராட்டு விழாவை ஒரு ஜமீன்தார் வைத்து கொண்டாடுகிறாள். அவர் அவளை நல்ல விலைக்கொடுத்து வாங்கிச் செல்ல திட்டம் தீட்டுகிறார்.

 அவளது வீட்டுக்குக் கண்ணன் என்கிற வாலிபன் வருகிறான். அவன் உடைகளை அலங்காரம் செய்து விற்கிறவன். அவன் மீது இவளுக்குக் காதல் வருகிறது. இந்தக் காதலைத் தாய் நிரந்தரமாகத் தள்ளப்போகும் சித்ரவதை கிடங்கிலிருந்து தப்பித்துக்கொள்ள, ஒரு நாள் அவள் காதலனுடன் தப்பிக்கிறாள். பிறகு தன் தாய் பால்வினை நோயால் மெல்ல இறந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்து காப்பாற்ற ஓடுகிறாள். அதற்குள் அவள் இறந்துவிடுகிறாள்.

உண்மையைத் தழுவி எழுதப்பட்ட கதை இது.

ஒரு நாள் ஆர்.நீலா அவர்களிடம் எதேச்சையாக உரையாடுகையில் இந்தப் பெண்களைச் சந்தித்தது பற்றியும் அவர்களைத் தொழிலிருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு இவர் கொடுத்த பயிற்சிகள் பற்றியும் சொல்லக் கேட்டேன்.

 ஒரு பெண் வாயிலும் வயிற்றிலும் அடித்துகொண்டு தன்னிடம் சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார். "காதலனுடன் ஓடிப்போனவள் என் கூட இருந்திருந்தால் எவ்வளவு சொத்துகள் சம்பாதித்திருக்கலாம்.  எத்தனை பங்களாக்கள் வாங்கியிருக்கலாம். எவனையோ காதலித்து அவன் கூட ஓடிவிட்டதால் என் ஆசையெல்லாம் நிராசையாகிவிட்டது”. இதை ஆர். நீலா சொல்லிக் கேட்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இப்படியான உண்மைக் கதைகளை எழுதும் சிறுகதையாளர் அவர். இவரது மற்றொரு நூலான ‘பாமர தரிசனம்’, பாலியல் தொழில் பெண்களுடனான உரையாடலைப் பேசுகிறது.

வெற்றிக்கதை எனும் ஆவணப்படம்

தேவதாசி முறையிலிருந்து மீண்டுவந்த பெண்களை மையமாக வைத்து வெற்றிக்கதை என்கிற தலைப்பில் ஆவணப்படம் எடுக்க திரைத்துறையைச் சார்ந்த ஒருவர் ஆர். நீலாவை நாடினார். இருவரும் விராலிமலை சென்று அப்பெண்களை நேரில் சந்தித்தார்கள். தான்பட்ட பாடுகளையும் அதிலிருந்து மீண்டுவந்த கதைகளையும் சொன்ன அப்பெண்கள் இப்பொழுது நாங்கள் மனதளவில் அதிலிருந்து முழுமையாக மீண்டுவந்துவிட்டோம். எங்களுக்கென்று மருமகன்,  மருமகள், பேரன், பேத்திகள் இருக்கிறார்கள். எங்களை ஆவணப்படமெடுத்து அதை என் குடும்பத்தார்கள் பார்த்து, நம் அம்மா, நம் அத்தை, நம் பாட்டி இப்படியான தொழிலையா செய்தார்கள், என நினைத்தால் நன்றாகவா இருக்கும், எனக் கேட்டு கைகளைப் பிசைந்திருக்கிறார்கள். ஆவணப்படம் எடுக்கச் சென்றவர்கள் தான் கொண்டு சென்ற கேமராவை கீழே வைத்துவிட்டு அப்பெண்களைக் கட்டி அணைத்திருக்கிறார்கள்.

இச்சம்பவங்களை நினைவுகூர்ந்த ஆர்.நீலா, கடைசியாக ஒன்று சொன்னார், “ என்னுடைய ஆசை ஒன்றுதான். அந்த இருபது பேருக்கான வீட்டுமனையை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எப்படியேனும் பெற்றுக்கொடுத்திட வேணும்”. இதைச் சொல்கையில் அவரது கண்களில் ஒளி வட்டம் கட்டியது. அவரது ஆசை நிறைவேறினால் வெற்றிதான். புதுக்கோட்டையின் வெற்றி! 

 

                                             - அண்டனூர் சுரா

மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்

              - 613301

9585657108

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர நாள் அன்று தொடங்கப்பட்ட பத்திரிகை

புதுக்கோட்டைச் செய்தி  பத்திரிகையும் சுதந்திர விநாயகரும்                                     @அண்டனூர் சுரா        1947 ஆகஸ்ட் 15,  இந்திய மக்கள் மனதால் நிரம்பப்பெற்ற நாள். ஆம், அன்றுதான் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்நாளை உலகம் முழுமையும் வாழ்ந்த இந்தியர்கள் மகிழ்ச்சி பெருக்கெடுத்து பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததாக இல்லை. இந்நாளில் புதுக்கோட்டை தனியரசாக இருந்ததால் இங்கே சுதந்திர தினம் எப்படியாகக் கொண்டாடப்பட்டது, அந்நாளில் நடந்தேறிய விழா நிகழ்வுகள் என்ன, சமஸ்தான அரசு இந்தச் சுதந்திரத்தை எப்படியாக எதிர்கொண்டது, இந்நாளை மன்னர் கொண்டாடினாரா என்கிற கேள்விகள் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருகின்றன. இக்கேள்விக்குப் ”புதுக்கோட்டை செய்தி” எனும் மாத இதழ் பதில் சொல்கிறது. புதுக்கோட்டைச் செய்தி இந்திய சுதந்திர நாளைக்  கொண்டாடும்பொருட்டு புதுக்கோட்டை சமஸ்தானம் ‘புதுக்கோட்டைச் செய...

புதுக்கோட்டை சாதிவாரி கணக்கெடுப்பு

உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு உலகின் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது. இது மக்களின் கணக்கெடுப்பாக இல்லாமல் போர்ப்படை வீரர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதாக இருந்தது. இஸ்ரேல், ஜூடாக் என இரு நாட்டினர்களுக்கு இடையேயான் போரில்   டேவிட் மன்னனைச் சாத்தான் மன்னன் தோற்கடித்தான். இப்போருக்குப் பிறகு இரு தரப்பிலும் எவ்வளவு பேர் உயிருடன் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. வீரர்களை வரிசையாக நிறுத்தி கணக்கெடுத்தார்கள். வீரர்கள் வாளை வானோக்கி உயர்த்தி உறைக்குள் சொருக வேண்டும். அப்படியாக செய்தால் மட்டும்தான் வீரர் உயிருடன் இருக்கிறார் என்று பொருள். இந்தக் கணக்கெடுப்புப் பணி ஒன்பது மாதங்கள் இருபது நாட்கள் நடைபெற்றது. முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில்   விவசாயம், கடினத் தொழில்கள் மற்றும் இன்னும் பிற வேலைக்காக இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெர்சியன் பேரரசு,   சீனா, எகிப்திய பேரரசுகள் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ரோமன் பேரரசு மன்னன் சர்வியஸ் டூலியஸ் என்பவன் கி.மு ஐந்தா...

உலகப் போர்களில் புதுக்கோட்டை @அண்டனூர் சுரா

உலகப் போரைத் தொடங்கி வைத்த பெருமையும் சிறுமையும் மன்னர் குடும்பத்தைச் சாரும்! ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாந்த் அவருடைய மனைவியுடன் காரில் செல்லும்பொழுது இளவரசன் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்தேறிய நாள் ஜுன் 28, 1914. இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக படையெடுத்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா நாடுகள் ஜெர்மனியுடன் இணைந்துகொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா நாடுகள் சேர்ந்துகொண்டன.        உலகில் சூரியன் மறையாத நாடு என்று பெயர்பெற்றிருந்த பிரிட்டன் தன் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதோடு அதன் காலனி நாடுகளையும் காப்பாற்றியாகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. ஆகவே இந்திய மாகாண உதவியையும் சமஸ்தான மன்னர்களின் உதவியையும் நாடியது. பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிப் பகுதியிலிருந்த இளைஞர்கள் பிரிட்டிஷ் படையில் சேர ஆர்வம் காட்டினார்கள். சமஸ்தான அரசுகள் நிதிஉதவி செய்தார்கள். அப்படியாக நிதி உதவ...